குடும்ப தர்மம்-பாரிவாரிக தர்மம்
தனி நபர்கள் ஒன்று சேர்வது ஒரு குடும்பம் ஆகிறது. அந்தக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நலமாக வாழ அந்தக் குடும்பமானது நல்ல முறையில் பாதுகாக்கப் பட வேண்டும். குடும்பம் சீர் குலையாமல் இருப்பதற்காக ஒரு சில விதி முறைகளைக் குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டி வரும். அதுவே பாரிவாரிக தர்மம் அல்லது குடும்ப தர்மம் எனப்படுகிறது.
இந்தக் குடும்ப தர்மத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும் , மரியாதைக் காப்பதும் தன்னை தியாகம் செய்யத் தயாராக இருப்பதும் ஆகும்.
தைத்தீரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள ” உன்னுடையத்தாயைக் கடவுளைப்போல் எண்ணி வழிபடு” என்ற கோட்பாடுகளையும் குடும்ப தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதி அவற்றையும் சேர்த்துள்ளனர்.
குடும்பம் நல்ல முறையில் இயங்காவிடில் அதில் ஓர் அங்கத்தினரான தன் நபரும் சுகமாக வாழ முடியாது.
பல குடும்பங்கள் சேர்ந்தது ஒரு சமூகம். சமூகம் சிதறிப் போனால் குடும்பங்கள் நல்ல முறையில் வாழ முடியாது. தனி மனிதர்கள் இத்தகைய கோட்பாடுகளைக் கடைபிடித்தால் தான் நல்ல முறையில் இணைந்த சமூகம் சீரிய முறையில் செயல்படும்.
இதுவே சமூக தர்மம் எனப்படுகிறது. பல்வேற வகைப்பட்ட தியாகங்களைச் செய்வது என்பது சமுதாய தர்மத்தின் அடிக்கல்லாக அமைகிறது.
கொல்லாமையைக் கடைபிடிப்பது , திருடாமல் இருப்பது, வாய்மையைக்கடைபிடித்தல், பிறருக்குத் துன்பத்தை தரவல்ல உண்மையைத் தவிர்த்தல் , கோபத்தை அடக்குவது, கீழ்தரமான உணர்ச்சிகளை அடக்குவது , அனைவரிடமும் அன்பு காட்டுவது, ஈகையைக் கடைபிடித்தல், புறங்கூறாதிருத்தல், விருந்தோம்பல் போன்றவை சமாஜ தர்மத்தில் அடங்கும்.











