குன்றுதோர் ஆடிய குமரன்
குன்றக்குடி அமர்ந்திட்டான்-அவன்
இன்றி ஓர் இயக்கமும் இல்லை,
அன்றி ஒரு தெய்வமும் இல்லை.
குன்றக்குடி முருகன் கோயில், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி எனும் ஊரின் குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளி – தெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.
மதுரையிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார்பட்டி கோயில் உள்ளது.
இந்த ஆலயத்தில் காவடி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மயில் உருவம் கொண்ட மலை மீது இந்த மூலவரான சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலைமீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.
ஒரு முறை அசுரர்கள், தேவர்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டனர். அப்போது முருகப்பெருமானின் மயிலிடம் அசுரர்கள், ‘நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள், வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன’ என்று பொய் கூறினர்.
இதைக் கேட்டு கண் மூடித்தனமாக கோபம் கொண்ட மயில், பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.
இதுபற்றி பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமான், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் தவறான வார்த்தைகளைக் கேட்டு, கண்மூடித்தனமாக நடந்துகொண்ட மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார்.
மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து மலையாகிப்போனது. மலையாக இருந்த படியே முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமான், மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். பின்னர் மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார்.
இந்த ஆலயம் அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலமாகும். இங்கு முருகப்பெருமான், சண்முகநாதர் என்ற திரு நாமத்துடன், ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும் எழுந்தருளியுள்ளார்.
செட்டி முருகன், மயூரகிரிநாதர், மயில் கலைக்கந்தன், குன்றை முருகன், குன்றையூருடையான், தேனாறுடையான் என்பது இந்தல முருகனின் வேறு பெயர்களாகும். இங்கு முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.










