சோட்டானிக்கரை பகவதி அம்மன்
கன்னியாகுமரியில இருக்குற, ”மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்”.கடற்கரை
ஓரமா இருக்கிற, கேரள கட்டிட கலை பாணில கட்டப்பட்ட கோவில் இது.
நாகர்கோயில்ல இருந்து நேரடியாவும், தமிழகம், கேரளாவில இருந்தும் பல்வேறு
இடங்களிருந்தும் பேருந்து வசதி இருக்கு. இந்த கோவிலில் தமிழ் நாட்டிலிருந்து தரிசனம்
பண்ண வந்தவங்களை விட, கேரளா செட் புடவையும், நெத்தில சந்தன பொட்டோட, கேரள
பெண்கள்தான் அதிகமா இருந்தாங்க.
மேற்கூரை கேரளா பாணியில் சிவப்பு ஓடுகளால் ஆனது. மேற்கூரையை தாங்கும் பெரிய
தூண்களுடன் அழகாக காட்சியளிக்குது இக்கோவில். பிரமாண்டமா இல்லாம எளிமையா அதே
நேரத்துல அழகாவும் இருக்கு கோவில்.
கோவில் நுழைவாயிலினுள் மேடை போன்ற ஒரு அமைப்பு இருக்கு. அதில் பக்தர்கள் அமர்ந்து
அம்மனை தரிசிக்கவும், பாடல்களை பாடுவதுமா இருந்தாங்க. நாங்களும் கொஞ்ச நேரம் அங்க
உட்கார்ந்து அம்மனை தரிசித்தோம். அழகா அலங்கரிக்கப்பட்டு இருந்த அம்மனை
பார்க்கும்போதே பரவச நிலையை தந்தது.
சிலர் அங்கே இருந்த கடைகளில் சின்ன, சின்னதான தலை, கால், மண்டை போன்ற உருவங்கள்
செஞ்ச தகட்டை வாங்கி காணிக்கையா செலுத்தினாங்க. அதனால உடல் நோய்கள் குறையும்
ன்னு ஒரு ஐதீகம் .
மேலும் தீராத தலைவலி தீர்வதற்கு பச்சரிசி மாவு வெல்லம்
சேர்த்து ”மண்டையப்பம்” என்னும் வகையான உணவு செய்து அம்மனுக்கு நைவேத்தியம்
பண்ணினால் தீராத தலைவலி குணமாகும் என்பதும் ஐதீகம்.
கோவிலின் இடப்பாகத்திலும், வலப்பாகத்திலையும் அம்மன் கோவில்கள் காணபடுது. அந்த
வளாகத்தினுள் நிறைய நேர்த்திகடன் பொருட்கள் விற்பனை செய்யபடுது. கோவிலிலுக்கு
வெளியிலேயும், உள்ளேயும் அம்மனுக்கு பூக்கடைகள் விற்கிறாங்க. நாங்களும் பூக்களை
வாங்கி கொண்டு அம்மனை தரிசிக்க போனோம்.
பூஜைகள் எல்லாம் 4 கால பூஜைகளாக கேரளா பாணியில் இருக்கு. நாங்க போன நாள்
வெள்ளிகிழமை. அதனால ”புட்டமுது”ன்னு ஒரு பிரஸாதம் கொடுத்தாங்க. ரொம்ப சுவையா
இருந்துச்சு. அதெல்லாம் சாப்பிட்டு கொண்டு அங்க இருந்தப்ப ஒரு வயதான அம்மா
இருந்தாங்க.
அவங்க அடிக்கடி, ”அம்மே பகவதி அனுகிறகிகனே”ன்னு சொல்லி கிட்டு இருந்தாங்க. அவங்க
கிட்ட அம்மா இந்த கோவில் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமான்னு கொறைச்சு கொறைச்சு
மலையாளத்துல விளிச்சதை கேட்டு நொந்து போய் நீங்க தமிழா!?ன்னு கேட்டு அசடு வழிய
வச்சு கோவிலின் ஸ்தல வரலாற்றை சொன்னாங்க.
400 வருஷத்துக்கு முன்பு இருந்த சங்கராச்சார்யர்ல ஒருத்தர், தன்னுடைய கேரள சீடர்களோட தங்கி இருந்த குடில்ல, ஒரு ஸ்ரீ சக்ரம் வச்சு வழிபட்டு வந்தாராம். ஒருநாள் ஸ்ரீசக்ரம் திரும்ப வரவே இல்லையாம். எடுத்து பார்த்தும் வரவே இல்லையாம்.
அதனால, அங்கயே அவர் தங்கியிருந்து பல சித்துக்கள் செய்து சமாதியாகிட்டாராம். அந்த ஸ்ரீ சக்ரம் இருந்த இடத்தில புற்று வளர ஆரம்பிச்சுச்சாம்.
அப்ப அங்க விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதன்மேல் தடுக்கி விழ அதிலிருந்து இரத்தம் வந்துச்சாம். உடனே ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் சொன்னாங்களாம் . மன்னரும், நம்பூதிரிகளை வர வச்சு தேவ பிரசன்னம் பார்த்ததில் அங்க தேவி குடியிருப்பது தெரிஞ்சதாம்.
உடனே மன்னர் அதை சுற்றி சிறிய கோவில் கட்டினாராம். காலபோக்கில் அம்மன் சக்தி அறிந்து பெரிய கோவிலாக கட்டினார்களாம். ஆரம்பத்தில மந்தைகாடுன்னு ஆடு மாடு மேய்க்கும் இடமா இருந்துச்சாம்.
அதுதான் காலப்போக்கில் மருவி ”மண்டைக்காடு” ன்னு பெயர் வந்துச்சாம். இங்க இருக்கும் புற்று வளர்ந்து கிட்டே இருக்கிறதாம். இப்ப 15 அடிக்கு மேல அந்த புற்று வளர்ந்திருக்குதாம்.
காலைல மட்டும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுமாம். பங்குனி சித்திரை மாதங்கள்ல பத்து நாள் விரதம் இருந்து கருப்பு உடை தரித்து இருமுடியில் பூஜைக்கு வேண்டிய பொருட்களை கட்டிக்கொண்டு இங்க கடலில் கால் நனைத்து கொண்டு வழிபடுவார்களாம். இங்க சிறப்பு என்னன்னா, இங்க இருக்கிற கிறிஸ்துவ மத பெண்களும் அம்மனை வழி பட்டு வந்தார்களாம் .
”மண்டைக்காடு” இந்த பகுதிகள்ல வந்த ஒரு மத கலவரம், மத நல்லிணக்கதோடு வாழ்ந்த மக்களை பிரிவினையாக்கிவிட்டதாம். அம்மன் அருளால, இப்ப எந்த பிரச்சனையும் இல்லாம அமைதியா காணப்படுது.
இந்த கதை எல்லாம் கேட்டுட்டு , கோவிலுக்கு வெளிய வரும்போது அங்க “வெடி வழிப்பாடு”ன்னு தனியே பட்டாசு வெடித்து ஒரு வழிப்பாடு கோவிலுக்கு வெளியே இருக்கும் மண்டபத்தில் நடத்துறாங்க. அதையெல்லாம் பார்த்துட்டு கோவிலின் இடபக்க வழியாக கடற்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.