திருமால் சிவபெருமானை வணங்கி-சுதர்சன சக்கரம் பெற்ற ஸ்தலம்.
அருள்மிகு மணிகண்டீஸ்வரர் (மால்வணங்கீஸ்வரர்) திருக்கோயில் திருமால்பூர் என்கிற திருமாற்பேறு.
Sri Manikandeeswarar Temple ~ Thirumalpur.
பார்வதி தேவியால் விருத சீர நதி கரையில் மணலால் செய்து வணங்க பட்ட சிவலிங்கமே இங்கு மூலவர். திருமால் சிவபெருமானை வணங்கி சுதர்சன சக்கரம் பெற்ற ஸ்தலம்.
இந்த ஆலயத்தில் சிவ முறை படி விபூதி வழங்கபடுவதுடன், தீபாராதனை முடிந்தபின்பு சடாரி சாற்றி, துளசி தீர்த்தம் தரும் மரபும் உள்ளது.
மஹாவிஷ்ணு தன் கண்ணையே கொடுத்து ஈசனை அர்ச்சித்த தலம். திருமால், ஈசனிடம் பேறு பெற்றதால் திருமாற்பேறு.
இறைவன்: மணிகண்டேஸ்வரர், மால்வணங்கீஸ்வரர்
இறைவி: கருணைநாயகி, அஞ்சனாக்ஷியம்மை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சக்கர தீர்த்தம்
பழமை: 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: ஹரிசக்கரபும், திருமாற்பேறு
தல வரலாறு:
ஜலந்திரன் எனும் அரக்கனை கொல்ல சிவபெருமான் சக்ராயுதம் ஒன்றை உருவாக்கியிருந்தார். ததிசி முனிவரை கொல்ல திருமால் ஏவிய சக்ராயுதம், முனிவரின் தெய்வீக தன்மையால் செயலிழந்து போனது. அதனால் சிவபெருமானிடம் சக்ராயுதம் பெறுவதற்காக திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசை செய்துவந்தார்.
ஒரு நாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்று சிவபெருமானின் அருளால் மறைந்தது. தனது பூசையை நிறைவு செய்வதற்காக திருமால் தனது கண்களில் ஒன்றை தாமரையாக மாற்றி பூசித்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலிற்கு பார்வை வழங்கியதுடன், சக்ராயுதத்தினையும் அளித்தார்.
சிறப்பம்சம்:
பார்வதி தேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது.
சிவலிங்கத்திருமேனி – தீண்டாத திருமேனி, அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாற்றியே அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வப்போது புனுகு சாற்றபடுகிறது.
மூலவருக்கு எதிரே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் “செந்தாமரைக் கண்ணப்பெருமாள்’ என்ற நாமத்துடன் உள்ளார்.
மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார்.
சுமார் 1.2 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்களுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.
கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம். சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. உள் பிரகாரத்தில் விநாயகர்,
சிதம்பரேஸ்வரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், கஜலட்சுமி முதலிய சன்னதிகள் உள்ளன.
திருமாலின் உற்சவத் திருமேனி – ஒரு கையில் தாமரை மலர், மறு கையில் ‘கண்’, நின்ற திருக் கோலம். பத்து கரங்களுடன் வல்லபை விநாயகரும் அனுக்கிரகம் புரிகிறார்.
பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எட்டு கரத்துடன் துர்க்கை நளினமாக காட்சி தருகிறாள்.
மாசிமாதம் நடக்கும் 10 நாள் பிரமோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கும். திருவிழாவில் பெருமாளுக்குரிய கருட சேவையும் நடக்கிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையும் விசேஷம்.
இங்கு வழிபட கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும். பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம்.
தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவார்.
இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
சுந்தரர் திருமுறை பதிகம்”ஆலம் தான் உகந்து” என்னும் பதிகத்தை 48 நாட்கள் பாராயணம் செய்து வர கூடுதல் பலன் உண்டு.
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.
அஞ்சனாட்சி அம்மன் உடனுறை மணிகண்டேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த சித்திரை 12ஆம் நாள் 25.04.2016 இனிதே நிறைவுற்றது.
இங்கு உள்ள ஈசன் வாடி நின்ற திருமாலின் வாட்டம் போக்கியவர் இதனால் இத்தல ஈசனை ”வாட்டந்தவிர்த்தார்”என்றும் அழைப்பர்.
நாமும் அன்புடன் வழிபட நம் வாட்டமும் அடியோடு நீங்கும்..
தரிசன நேரம்
காலை 07:00am – 12:00pm
மாலை 05:00pm – 08:30pm
தொடர்புக்கு: 04177-293470/248 220, 9095222708 / 9345449339 / 9965367272
முகவரி:
அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில்,
திருமால்பூர்-631 053. திருமாற்பேறு, வேலூர் மாவட்டம்.
இருப்பிடம்:
காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருமால்பூர் ரயில்நிலையத்தை (பள்ளூர் பஸ் ஸ்டாப்) ஒட்டி தண்டவாளத்தின் கீழே செல்லும் சாலையில் சுமார் 5 கிமீ சென்றால் திருமால்பூர் அடையலாம்.
காஞ்சிபுரத்திலிருந்து (22கிமீ) பனப்பாக்கம் வழியாக ஆற்காடு செல்லும் பஸ்சில் கோயிலுக்கு செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம்: திருமால்பூர் / அரக்கோணம் / காஞ்சிபுரம்.











