தூரத்தில் போய்த் தேடாதே..!
ஆங்கிலத்தில் இரண்டு அழகான வார்த்தைகள் இருக்கின்றன, Obvious. – நேர் எதிரில் இருப்பது என்று பொருள்.
நேர் எதிரில் என்ற பொருள் தரும் இலத்தீனிய மூலச் சொல்லில் இருந்து வந்தது அடுத்த வார்த்தை Problem இதற்கு மூலச்சொல் கிரேக்க மொழியில்
இருக்கிறது. அந்த மூலச் சொல்லுக்குப் பொருளும் நேர் எதிரில் என்பது தான்,
இரண்டு சொற்களுக்கும் மூலச்சொற்களின் பொருள் ஒன்றுதான். நேர் எதிரில் இருப்பதுதான் பிரச்சனையே. ஏனென்றால் அதை நீ பார்க்கத் தவறி விடுகிறாய்., தூரத்தில் இருப்பதைப் பார்க்க அலையும் கண்களுக்குப் பக்கத்தில் இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. நேர் எதிரில் இருப்பதே பிரச்சனையாகிப் போய்விட்டது.
ஞானம் என்பது அப்படி நேர் எதிரில் இருப்பதைத் தெரிந்து கொள்வதுதான். அதைத் தெரிந்து கொள்ளும்போது பிரச்சனை மறைந்து போகிறது. பிரச்சனையற்ற வாழ்வை வாழ்வதே ஞானத்தோடு வாழ்வதாகிறது.
அது முழுக்க வித்தியாசமான ஒரு ஜீவிதம், சாதனைகளுக்கும் அதற்கும் தொடர்பில்லை, படிப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை. முயற்சி, சாதகம்
என்பவற்றோடும் அது தொடர்புடையதல்ல.
வேண்டியதெல்லாம் அதைக் கவனிக்க, பார்க்க, நேர் எதிரில்
இருப்பதைத் தெரிந்து கொள்ளக் கொஞ்சம் சுறுசுறுப்பு. அவ்வளவுதான்.
தீர்வு நீ நினைத்திருப்பதை விடவும் அருகாமையில் இருக்கிறது..!
தூரத்தில் போய்த் தேடாதே. உனக்குள் இருக்கிறது.










