தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள்!
தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்தர்பிரான் சுவாமிகள் ஔஷத ருத்ர பூஷணத்தில் தலை சிறந்த சித்தர்கள் சங்கம வகையைச் சார்ந்த சித்தர் பெருமான்!
அதாவது ஸ்ரீதன்வந்த்ரீ சித்தர் பெருமானின் குருகுல சக்கரவாக சீலராய் அன்றும், இன்றும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் ஒளிர்பவர் ருத்ர பூஷண சித்தர்கள் என்றால் பெறுதற்கரிய தேவாக்னியைத் தங்களுடைய பிராணாயாம யோக சக்தியால் தேவ சித்த லோகங்களிலிருந்து கிரகிக்கும் தேவ சித்தி பெற்றவர்கள் ஆவர்.
தேனிமலையின் அதி அற்புத தேவ பாறைகளில் ஆங்காங்கே குறித்த ஹோரை நேரங்களில் தியானங்களில் அமர்ந்து பெறுதற்கு அரிய தேவாக்னி சக்தியையும் தேனிமலை முருகப் பெருமானுடைய ஸ்கந்தாக்னி (ஆறு நட்சத்திர ஜோதி சக்திகள்) மற்றும் ருத்ர சித்தாக்னி சக்தியையும் தம்முடைய 72000 நாடிகளிலும்
ஆறுமுக பெருமானின் திருவருளால் நிரவி தேனிமலை தேவமயப் பாறைகளின் ஆழ்உள்நீரோட்டத்தில் கலந்து இத்தகைய தெய்வீக சக்திகள் எப்போதும் தேவமயப் பாறைகளிலிருந்து (திருஅண்ணாமலைபோல்) ஒளிரும்படி இறைப்பணி ஆற்றுபவரே தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள்!
தேனிமலை மேல்மட்டத்தில் உள்ள பாறை தீர்த்தங்களிலும் இந்த ஸ்கந்த சீலசக்திகள் நிறைந்து ஜல தீபச்சுடராய் எப்போதும் பரவெளியில் நிரவுகின்றன.
கால்களில் பாதணிகள் இல்லாது மலையில் ஏறிச்செல்கையில் பாறைகளில் படர்ந்திருக்கும் ஆழ்உள் தேவ நீரோட்டச் சக்தியானது பக்தர்களுடைய கால்ரேகைகள் மூலமாக தேகத்தில் கூடுகின்றன.
எவ்வாறு பூமியின் அடியில் உள்ள கனிமங்கள் நிலக்கரி, நில எண்ணெய் தாதுக்களை ரிபைனரீஸ் போன்றவை மூலமாக ஜீவன்களுக்குப் பயன்படும்படி செய்கின்றோமோ, அதேபோல பூமியின் உள்ளும், மேலும், பரவெளியிலும்,
எங்கும், எதிலும், நிறைந்திருக்கின்ற இறைப்பெரும் ஜோதியை 1. தீர்த்தங்கள் (நீர்) 2. பாறைகள் (நிலம்) 3. வில்வம், அரசு, ஆல் போன்ற விருட்சங்கள் உ(ரா)றையும் (காற்று) 4. சூரிய சந்திர நட்சத்திர ஜோதிப் பரிமாணம் (நெருப்பு) 5. ஆகாயம் (உச்சிப் பாறை விளக்குக் காம்புகள்) ஆகிய பஞ்சபூத வடிப் பொருட்கள் மூலமாக நமக்கு பெற்றுத் தருவதற்காகவே சித்தர்கள், மகான்கள் நம்முடன் சமுதாயத்தில் உறைகின்றார்கள்.
தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த ஸ்வாமிகள் போன்ற சித்புருஷர்கள் பிறப்பு இறப்பு இல்லா ஏகாந்த ஜோதிகள், மானுட உடலில் இறையாணையால், குருவருளால் அவர்கள் குடி கொண்டாலும் அவர்கள் என்றும் உறங்குவது கிடையாது, ஓய்வு கொள்வதும் கிடையாது.
அவர்கள் உறங்குவது போல் வெளிப்படையாகத் தோன்றினாலும், தம் பூத உடலைக் கிடத்தி விட்டு தேவ உடலில் எத்தனையோ தேவ லோகங்களுக்குச் சென்று எத்தனையோ கோடி ஜீவன்களுக்கு நன்மை செய்கின்றார்கள்.
ஸ்ரீபெருமானந்த சித்த ஸ்வாமிகள், பதினெண் சித்தர்களில் ஸ்ரீதந்வந்த்ரீ சித்தருக்குரித்தான ஔஷத மாதவ லோகத்தில் ஸ்கந்த ஜோதியாய்ப் பிரகாசித்து எத்தனையோ சித்தர் பெருமான்களுக்கு குருகுலவாசம் பெற்றுத் தந்தவர் ஆதலின், அவருடைய (மானுட) உறக்க நிலைகளில் அவர்தம் சூட்சும தரணி ஜீவ ஜோதி ஸ்கந்த லோகத்தில் பெருந்தவம் பூண்டிருக்கும்.
இத்தகைய நித்ய தேவ தியான நிலைகளைப் பூண்டு இப்பூவுலகில் ஸ்கந்த சக்திகள் நிறைந்து விளங்குகின்ற புனிதமான இறைத்தலங்களுள் ஒன்றான தேனிமலையின் தேவச் சந்திரப் பாறைகளில் தவம் செய்து யோகம் கூட்டி ஆசனங்கள் உய்த்துத் தாம் பெற்ற தேவாதி நல்வர சக்திகளைப் பாறைகளின் நுண் நீரோட்ட சக்திகளுக்கு மாற்றுவிக்கின்றனர்.
இவைதாம் மலையைச் சுற்றி கிரிவலம் வரும் அடியார்களுக்கும், மலைமேல் ஏறி வழிபடும் பக்தர்களுக்கும் 72000 நாடி நரம்புகளில் சேர்ந்துள்ள துன்பங்களைத் தீர்த்து நல்வழி காட்டுகின்றது.
மாதக் கார்த்திகை, விசாகம், பரணி, அஸ்வினி போன்ற அக்னி பகவானுக்கு உரித்தான நாட்கள், பௌர்ணமித் திதி, செவ்வாய்க் கிழமை, தினந்தோறும் அமைகின்ற செவ்வாய் ஹோரை நேரங்கள் தேனிமலையில் கிரிவலம் வருவதற்கான மிகவும் விசேஷமான நாட்களாகும்.
மேலும் இங்கு தினந்தோறும் கிரிவலம் வந்திடலாம். பொதுவாக, பலவிதமான நோய்களிலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக கிரிவலம் வர விரும்புவோர்கள் தங்கள் நோய்களுக்கான மருந்துகளைக் கையில் தாங்கிக் கொண்டு,
அட்டவணைப்படி செவ்வாய் ஹோரை நேரத்திலும் மற்றும் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய விசேஷமான நாட்களான ஆயில்யம், திருவாதிரை, மூலம், கேட்டை நாட்களில்
தேனிமலையைக் கிரிவலம் வந்து முருகனுக்கும் நட்சத்திர தேவதைகளுக்கும் ப்ரீதியான நட்சத்திர வடிவ பூக்களைக் கொண்ட காய்கறி உணவு வகைகளைக் கொண்டு படைத்து (கத்தரி, பூசணி, பறங்கி) அன்னதானமாக அளித்து வர தோல்,
நரம்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். நன்றி வழிபாடாக இறுதியில் தேனிமலை அடிவாரத்தில் ஜீவாலயம் கொண்டிருக்கும் ஸ்ரீபெருமானந்த சித்த ஸ்வாமிகளை அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குவதால் யோக சக்திகள் நிறைந்து நல்ல ஆரோக்யம் பெறுவர் !
எங்கே இருக்கு: பொன்னமராவதியிலிருந்து (காரையூர் வழியாக) 7 கி.மீ, தூரத்தில் புதுக்கோட்டை செல்லும் வழியில் தேனிமலை அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 28 கி.மீ.,
தரிசன நேரம்: காலை 9-1; மாலை 5-6











