நம் மனம் அமைதியாகவும், பதற்றம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
ஒரு பெரு வாய்ப்பு நம்மைத்தேடி வந்தவுடன், நம் மனம் பல திசைகளில்
ஓட ஆரம்பிக்கின்றன. அந்த ஓட்டம் வந்த வாய்ப்பை நம்மிடம் வர விடாமல்
செய்து விடுகின்றது;
அல்லது வந்த வாய்ப்பின் முழுப்பலனையும் நாம் பெற்றுக் கொள்ள விடாமல் செய்து விடுகின்றது. அன்னையின் அருளால் நம்மை நாடி வந்த வாய்ப்புப் பலனளிக்க வேண்டுமானால், நம் மனம் அமைதியாகவும், பதற்றம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
எங்கு அமைதியும், நிதானமும், பொறுமையும், நம்பிக்கையும் உள்ளனவோ, அங்கேதான் அன்னையின் அருள் நன்றாகச் செயல்பட்டு முழுப்பலனையும் பெற்றுத் தருகின்றது.
மனத்தைக் கட்டுப்படுத்த முடியா விட்டாலும், இந்த உண்மையை, அதாவது குறையை ஏற்றுக் கொண்டு, ‘எவ்வாறேனும் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்ற முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த முடிவை எடுத்த பிறகு, எண்ணங்களின் பாய்ச்சல்களும், ஓட்டங்களும் ஓரளவு குறைந்து விடும் என்றாலும் எண்ணங்கள் முழுவதுமாக ஓய்ந்து போய்விடுவதில்லை.
அப்போது அன்னையிடம், ‘எண்ணங்கள் என்னை விட்டு நீங்குமாறு செய்ய வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அன்னையின் அருளால் இருளான எண்ணங்கள் இற்று விழுந்து,
அதுவரை வாய்ப்பை நெருங்க விடாமல் செய்திருந்த தடைகள் ஒவ்வொன்றாக நீங்கி, அந்த வாய்ப்பின் முழுப் பலனும் கிட்டுமாறு அமைந்து விடும்.











