பூரண மௌனம்தான் பிரார்த்தனை என்பது
நடு ராத்திரி நேரம்…
ஒரு சபைக்குச் சென்று, அப்போதுதான் திரும்பி இருந்தேன்.
அங்கே ஒருவர் கூறிக் கொண்டு இருந்தார்:
“கடவுளைக் கூப்பிடுங்கள் அவனுடைய நாமத்தை ஜெபியுங்கள்
எந்நேரமும் அவனை அழைத்துக் கொண்டே இருந்தால் அவன் நிச்சயமாக கேட்கக் கூடியவன்.”
கபீர் சொன்னது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது:
“இறைவன் செவிடன் ஆகிவிட்டானா?”
மீண்டும் அவர் சொல்ல ஆரம்பித்தார்:
“பத்துப் பேர் படுத்துக் கொண்டிருக்கும் போது அதில் ஒருவரை பெயர் சொல்லிக் கூப்பிடும்போது உடனே அவர் எழுந்து வருவார் கடவுளின் விவகாரமே இப்படித்தான். அவனைக் கூப்பிடுங்கள் அவன் நிச்சயமாக கேட்பான்.”
அவருடைய பேச்சைக் கேட்டு எனக்குச் சிரிப்புதான் வந்தது.
முதல் விஷயம், நாம்தான் தூங்குகிறோம்.
கடவுள் தூங்குவதில்லை அவன் எப்போதும் விழித்துக்கொண்டிருப்பவன்.
உண்மையில் நாம்தான் விழித்திருக்க வேண்டும்.
“தூங்குபவன் விழித்திருப்பவனை எழுப்புவதா?”
மிகவும் வேடிக்கையான விஷயம்.
அவனை அழைக்க வேண்டியத் தேவையில்லை, அவனைச் செவியுற்றால் போதுமானது.
இது மௌன நிலையில் உண்டாகக் கூடியது.
பரிபூரணமான சாந்திப்பூர்வ மன நிலையில்தான் இது உண்டாகும்,
மனதில் எவ்வித ஓசையும் எழாத போதுதான்
அவனுடைய நாதம் நம் செவிகளுக்கு கேட்கும்
பூரண மௌனம்தான் பிரார்த்தனை என்பது
பிரார்த்தனை என்பது எதுவும் செய்வதல்ல.
மனதில் எண்ணங்கள் தோன்றாமல் மௌனத்தில் அமிழ்ந்திருக்கும்போது.
அவன் பிரார்த்தனையில் இருக்கிறான் என்று அர்த்தம்.
அவை அனைத்தையும் விட்ட பிறகே சத்தியத்தைச் சென்றடைய முடியும்.
எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிந்தவன் மட்டுமே
அவனை அடைவதற்குரிய எல்லா நிபந்தனைகளையும் ஏற்றவனாகிறான்.










