வாழை இலையும், மந்தாரை இலை(தைஇலையும்)
நாம் சிறியவர்களாக இருக்கும் போது உணவகங்களுக்கு சென்றால் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவார்கள், கொஞ்சம் சின்ன கடையாக இருந்தால் ஆபத்பாந்தவனாக கிடைப்பது தைஇலைதான், அந்த தைஇலை தற்போது எந்த கிராமத்து கடைகளிலாவது கிடைக்கிறதா?
தைஇலை தயாரிக்க பயன்படும் இந்த இலை, மந்தாரை வகை மர இனத்தை சேர்ந்தது. இது மரம் என்றும் கூறமுடியாத, கொடி என்றும் கூறமுடியாத ஒரு வகை.
ஆரம்பத்தில் கொடி போல் தெரிந்தாலும் வளர்ந்த பின் மரம்போல் தெரியும், இதன் கிளைகள் மற்ற மரங்களின் மேல் படர்ந்தும் வளரும்.
பாஹினியா வாஹ்லி (Bauhinia Vahlli) என்ற இந்த இலைமந்தாரையின் பூர்வீகம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் நன்றாக வளரக்கூடியது.
மந்தாரை இலை சிறந்த மருத்துவகுணம் உடையது என்பதை இந்த பழமொழி விளக்குகிறது,
“மந்தாரை உண்ணுமிடத்து நொந்தாரை காண்ப தரிது”
கர்நாடகாவில் இலைபுரசு இலைகளால் செய்யப்பட்ட சாப்பாடு இலைகள் தற்போதும் கிராமங்களில் பயன்படுகிறது.
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக வாழை இலை பயன்பாட்டில் இருந்தாலும், இலைமந்தாரையும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இவ்வாறு பாரம்பரியமாக பயன்பாட்டிலிருந்த இருந்த ஒரு இலையின் பயன்பாடு தற்போது தொன்னை செய்ய மட்டுமே பயன்படுகிறது.

இலைமந்தாரையை விவசாயிகள் வேலி ஓரங்களில் அவசியம் வளர்க்க வேண்டும், எதிர்காலத்தில் நல்ல வருமானம் நிச்சயம். வீடுகளில் வளர்க்கும் போது அவசரத் தேவைக்கு இலையை தைத்து சாப்பாட்டு இலையாக பயன்படுத்த முடியும்.
மந்தாரை இலைக்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது, கேரளா மற்றும் கன்னியாகுமரி மலைபகுதிகளில் இயற்கையாக கிடைப்பதால் அவற்றை அங்குவாழும் பழங்குடியினர் மூலமாக சேகரித்து ஏற்றுமதி செய்கிறார்கள்.

இதனால் நாம் விரும்பினாலும் நம்மால் மந்தாரை இலைகளை நியாயமான விலைக்கு வாங்க முடியுமா என்பது சந்தேகமே. எங்கெல்லாம் மந்தாரை (Bauhinia purpurea) மரங்கள் வளருமோ அங்கெல்லாம் இந்த இலைமந்தாரை மரங்களும் வளரக்கூடியவை.










