ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்:
திருப்பருப்பதம் ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் திருக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஆந்நிர மாநிலத்தில் அமைந்திருக்கின்ற திருக்கோயிலாகும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற இத்தலம், ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தமும் ஒன்றாகும். புராணப்பெயர்: திருப்பருப்பதம்.
திருக்கோயில்அமைவிடம்.
அருள்மிகு மல்லிகார்ஜுன் திருக்கோயில்.
கர்நூல் மாவட்டம்.ஆந்திரா மாநிலம்.
திருசைலம் இந்தியா.
இறைவர்: மல்லிகார்ஜுனர், (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
இறைவி: பிரமராம்பாள், பருப்பநாயகி.
தல விருட்சம்: மருதமரம்
தல தீர்த்தம் : பாலாநதி
தேவாரம்பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்.
ஆலயப் பூஜை காலம்: திறக்கும் நேரம்:
காலை 5.00 மணி,மதியம் 3.00 மணி,
மாலை 5.30 மணி.இரவு 10.00 மணி.
காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.
ஆலயத் தொன்மை: புராதனக்கோயில்
கோயில் அமைப்பு: மூன்றாவது நாளாக நாம்
நந்தியால் புறப்பட நினைத்து, ஏற்கனவே நமக்கு வந்த வாடகைக்காரை வரவழைக்க போன் செய்தோம்.
மல்லிகார்ஜுனர் சத்திரத்திற்கு பக்கத்திற்கு (தங்கள் இருப்பிடத்திற்கு) கார் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். வேறொரு வாடகையில் சென்று கொண்டிருக்கிறேன் என்றார் டிரைவர்.
சரி சரி வாடகை சவாரியை முடித்துவிட்டு வாருங்கள், நாங்கள் காத்திருக்கிறோம் என கூறிவிட்டோம்.
இந்த இரண்டு மணி நேரத்தில் மறுபடியும் மல்லிகார்ஜுனரைத் தரிசித்து விடலாமா? என எண்ணம் உணாடானது.
கூடயிருந்தவர்களும் சரி என்று சொல்ல, போய் வரலாம் என்று கிளம்பினோம்.
அங்கு டிக்கட் கொடுக்கும் கவுண்டரில் யாரும் இல்லை. ஆலயத்தில் கூட்டமும் இல்லை. இதனால் நாமும் டிக்கட் எடுக்காமல் ஆலயத்துக்கு உள் புகுந்தோம். உள் புகுந்ததும் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்தது.
நேரே சுவாமி கருவறைக்குள் நின்றிருந்த அர்ச்சகர்கள் வாருங்கள் வாருங்கள் என்று கையை அசைத்து அழைத்து விரட்டினார்கள். எங்களுக்கு முன்பாக ஒரு பதினைந்து பக்தர்கள் இருந்தார்கள். சந்நிதியை நோக்கிப் போகும் போதே சுவாமியைப் பார்த்துக் கொண்டே போனோம்.
கவசம் எதுவும் சாற்றாமல் சிவன் அழகாய் காட்சி தந்தார். உடலின் உரோமக் கால்கள் குத்திட்ட உணர்வு பெற்று நகர்ந்தோம். சுவாமிக்கு நம்மை அபிஷேகம் செய்ய வைத்து தலையை சிவன் மேல் வைத்து வணங்கி எழ சொன்னார்கள்.
தலையை வைத்து வணங்க நமக்குத் தயக்கமாக இருந்தது. ஏனெனில் நம்நாட்டில் எந்தத் திருமேனியை மும் நான் தீண்டி வணங்கிய தில்லையே!, அதனால்தான் நமக்கு தயக்கமாகத் தெரிந்தது.
நம் தயக்கத்தைத் தெரிந்து கொண்ட குருக்கள், நம் தலையை கீழே அமுக்கி வணங்க உதவி செய்தார். இறைவனை கண்களில் நீர் தளும்ப வழிந்து, வணங்கி மகிழ்ந்தோம். ஆனந்தித்தோம். உடலின் உள்ளார ஏதோ ஒரு உத்வேகம் பிரவாகமானதுபோல ஒரு உணர்வைப் பெற்றோம்.
முன்தினம் பணம் செலுத்தி ஈசனை சரியாக தரிசித்த திருப்தி இல்லாததே திரும்பியிருந்தோம். இன்றோ, கட்டணம் கண்டிப்பு என்று எதுவும் இல்லாது, எந்த பேதமும் இல்லாமல் அனைவரையும் இறைவனைக் கட்டித் தழுவி வணங்க வைத்ததை குருக்களா? அல்லது நம் இறைவனா? என்று நமக்குத் தெரியவில்லை. எப்படியாயினும் ஈசனுக்கே நன்றி! சொல்லிக் கொண்டோம்.
கருவறையை விட்டு வெளியே வரும் வழியில், போகும் வழியில், சுவரின் இருபுறங்களிலும் அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை செதுக்கி வைத்திருந்தார்கள்.
இதனின் நிகழ்வை கீழே தெலுங்கில் விவரித்து காட்டியிருக்கிறார்கள். நம்மால் காணப் பெறமுடிந்ததே தவிர, நம்மால் அதை வாசிக்க தெலுங்கு மொழி நமக்குத் தெரியாது போயிற்று.
ஒரு பெண் கண்களில் கண்ணீருடன் இறைவனை வணங்கும் காட்சி இருந்தது. சிவனை அடியார்கள் சூழ வணங்கிய காட்சி எல்லாம் இருந்தது.
வெளியேறியபோது, பாலில், பழம் சீனி போட்டு கலக்கி அதைப் பிரசாதமாக கொடுத்தார்கள், வாங்கி சாப்பிட்டுக் கொண்டோம்.
வெளியில் வந்தால் விபூதியை, கடினத்தம்மையுடனான விபூதிக்கட்டிகளாக்கி விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
நாம் சின்னதான விபூதிக் கட்டி ஒன்றை வாங்கிக் கொண்டோம். அடுத்து ஒரு இடத்தில் ருத்ராட்சம், ருத்ராட்ச மாலை விற்பனைக் கடையைக் கண்டோம்.
எங்கள் இல்லத்திலும், ஆபீசிலும் நடராஜ திருமேனி வைத்திருக்கிறோம். இதற்கு அணிவிப்பதற்கு நடராஜத் திருமேனியின் அளவுக்கு இரண்டு ருத்ராட்ச மாலைகள் வாங்கி வைத்துக் கொண்டோம்.
மல்லிகாபுரி இளவரசி, மல்லிகை மலர்களாலும், அர்ஜுனா(மருதமரம்) மலர்களால் வணங்கியாதல் மல்லிகார்ஜுனர் என்று அழைக்கப்பட்டதாக, அங்கிருப்போர் கூறினார்கள்.
மேலும், ஸ்ரீசைலத்துக்கு வந்து ஈசனை, ஈஸ்வரியை வணங்கியவர்களுக்கு மறுபிறவி இல்லையெனவும் கூறக் கேட்டோம்.மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு மூன்று தலங்கள் உள்ளன. வடதிசையில் உள்ள மல்லிகார்ஜுனம் ஸ்ரீசைலம். மத்தியில் உள்ளது மத்தியார்ஜுனம் திருவிடைமருதூர்(மகாலிங்கேஸ்வரர்).
தெற்கில் உள்ளது புடார்ஜுனம் திருப்புடைமருதூர், நாறும்பூநாதர் திருக்கோயில்,நெல்லை மாவட்டம். (முக்கூடல் அனைத்து)
ஆலயத்தை விட்டு வெளியே சற்று தூரத்தில் கோயில் வாசல் பக்கமாக நாகலிங்க மரம் இருக்கிறது. மரப்பருமன் முழுமையும் மஞ்சளால் மெழுகி அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள். காண்பதற்கு அழகாகத் தெரிந்தது.
கோயில் தெப்பக்குளம் சீரமைத்துக் கொண்டு இருந்தார்கள். இறங்கிச் செல்ல முடியவில்லை.நாகலிங்க மரத்திற்கும் குளத்திற்கும் நடுவில் ஒரு கோயில் இருந்தது. இங்கு வீரபத்திரர் இருக்கிறார்.
கோயிலுக்கு வெளியே இருபுறமும் சிவலிங்கங்கள். முன் புறம் நந்தியும் இருந்தன. லிங்கங்களையும், நந்தியை மும் வணங்கிக் கொண்டோம்.
எல்லா லிங்கங்களுக்கு முன்பும், தேங்காய் உடைத்து வைத்து இருக்கிறார்கள். தொன்னையில் பிரசாதம் வைத்து படைத்து இருந்தார்கள். பிறகு கோயில் தரிசனம் முடித்து வந்தபின் சத்திரம் பக்கத்திலேயே சாப்பிட்டு முடிக்க, வாடகைக் கார் வந்து சேர்ந்தது.
டிரைவரிடம் ஸ்ரீ சைலத்தில் பார்க்க வேண்டிய முக்கிய கோவில் இருக்கும் இடம் கூட்டிப் போங்கள் என்றோம். முதலில் சாட்சி கணபதி கோயிலுக்குக் கூட்டிப் போனார்.
ஸ்ரீசைலம் ஆலயம் செல்லும் முன் இந்த கணபதியை வணங்கி விட்டுத் தான் போகனுமாம். இது நமக்குக் தெரியாது விட்டிருந்தோம். நாங்கள் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனரை வணங்கி விட்டு இறங்கும் போது, சாட்சி கணபதி கோயிலுக்கு வந்து வணங்கினோம்.
தெரியாமல் செய்த தப்பை மன்னித்து விடுவாயாக! எனக்கூறி, விநாயகர் முன்பு நின்று காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
பாதாள கங்கை செல்லும் வழி :
சாட்சி கணபதிக்கு பின் பாதாள கங்கை கூட்டி போனார் டிரைவர். ஆனால் வெகு தூரம் வரை குரங்குகளின் சேட்டை இருந்தது. இதுகளுக்கு எதுவும் நேர்ந்து விடாதபடி, டிரைவர் லாவகமாக காரை ஓட்டினார்.
கீழே கங்கையைப் பார்க்கலாம் ஆனால்போய் பார்த்தாலும் இப்போது தண்ணீர் இல்லை என்றார் டிரைவர் அதனால் அங்கு போகவில்லை.
அடுத்து சிகரம் என்ற இடத்திற்கு கூட்டிப் போனார். நல்ல உயரமான இடம் அங்கு இருந்து பார்த்தால் ஊரின் அழகு முழுவதும் தெரிகிறது. மனதிற்கு ரம்மியமாக இருந்தது.
இங்கு போக படிகளும் இருந்தது , வாகனங்களும் நிறைய வருகிறது. கார் மேலே போக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இங்கு இருக்கும் கோயிலுக்குள் கீழே சிவலிங்கம் இருக்க சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம். இன்னும் கொஞ்சம் படிகள் ஏறிப்போனபோது, கைலாயம் மலை போல் ஒரு மலை முழுவதும் சிவலிங்களை நிறுவி இருந்தார்கள். கண்டு வணங்கி ரசித்தோம்.
இதற்கு மேல் கொஞ்சம் படிகள் ஏறி போனபோது, ஒரு கல்லின் மேல் நாகம் சுற்றியது போல் ஒரு அமைப்பு இருந்தது. இந்த வட்டகல்லின் மேல் நந்தியும் இருந்தது. நந்திக்கும் அந்த வட்டகல்லுக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளியும் இருந்தது.
இங்கு வருபவர்கள், இந்த இடைவெளிக்குள் எள்ளும் அரிசியும் போட்டுச் சென்றதைக் கண்டோம்.
இதனருகிலேயே எள்ளும் அரிசியும் ஒரு கவரில் போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். நாமும் இதை வாங்கி, நந்தி இடைவெளிக்குள் போட்டு பிரவேகித்து வணங்கி நகர்ந்தோம்.
ஒவ்வொன்றையும் நமக்கு முந்தி சென்றவர்கள் (ஏற்கனவே இங்கு வந்தவர்கள் போல) எப்படி வணங்கிச் செல்கின்றனர் என்பதை கவணித்துக் கொண்டே வந்தோம்.
இதை கவணித்துத் தொடர்ந்ததால் நமக்கு ஆலய வணக்கம் எளிதாக இருந்தது.
பின்பு அவர்கள், நந்தியின் இரண்டு கொம்புகளைப் பிடித்துக் கொண்டு கொம்புகளுக்கு இடையில் தூரத்தில் தெரியும் எதையோ பார்த்து வணங்கி நகர்ந்தார்கள்.
அவர்களுக்குப் பின்னால் அடுத்து, நாமும் நந்தியின் இருகொம்புகளை இரு கைகளால் பிடித்து, கொம்புகளின் இடைவெளியில் முகத்தை வைத்து எதிரே பார்த்தோம்.
*சிவ சிவ, சிவ சிவ’* பிரமாதம்! நந்தியின் கொம்புகளுக்கிடையே மல்லிகார்ஜுனர் ஆலயம் தெரிந்தது. பிரதோஷத்தின்போது நந்தியின் கொம்புகளுக்கிடையே ஈசன் நடனமாடுவதை தெரிந்து வைத்திருப்போம்.
ஆனால் இங்கு வந்து பார்த்தால், நந்தியின் கொம்புகளுக்கிடையில் மல்லிகார்ஜுனர் இருக்கும் ஆலயமே தெரிகிறது. சிவ சிவ.
நந்தி தவம் இருந்து நீண்ட ஆயுளைப் பெற்று சிவனுக்கு வாகனமானது இங்குதானாம்.
அதனால் நந்தி தவம் இருந்த இந்த இடம் நன்தியால் எனப்படுகிறது.
இங்கு நந்தி கோயில்கள் ஒன்பது இருக்கிறதாம். நாங்கள் இரண்டுதான் பார்த்தோம். இந்த நந்தியும். மகாநந்தி எனும் இடத்தில் உள்ள நந்தி பார்க்கில் மகா நந்தியையும் பார்த்து தரிசனம் செய்திருந்தோம்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்திதேவர் அவதரித்த தலமும் இது.தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது.
ஸ்ரீசைலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் ஐம்பத்தோர் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே.
ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி அமைந்தருள்கிறார்.
ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு மிக மிக பிரமிப்பாகத் தெரியும்.
ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன இங்கு தரிசிக்க வேண்டியவைகளாகும்.
தெற்கு வாயில் கோபுரம் *ரங்க மண்டபம்* எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமும் உள்ளது. இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி இருக்கிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் நிறைய உள்ளன. மலையின் கீழேயிருந்து மூன்று மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும்.
பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை.
அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் ஒன்பது இடங்களில் நந்தி பெருமான் அமைந்திருக்கிறார்.
ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம் என்பது சிறப்பு.
சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இத்துடன் அம்மனின் ஐம்பத்தோர் சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் எத்தனை முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.
நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார்.
நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி முப்பது படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.
மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் இருக்கிறது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.
தல அருமை:
சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார்.
சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர்.
அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.
சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, தந்தையே! கலங்காதீர்கள் என்றார்.
நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் எனப் சொல்லி தவமிருந்தார்.
தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.
நந்தி தவம் செய்த நந்தியால் என்ற இடம் மலையின் கீழே இருக்கிறது.
இத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரத்தைப் பெற்றான்.
தல பெருமை:
மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள்.
இதனால் இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜுனர் எனப்படுகிறார்.











