“அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!”
– மாணிக்கவாசகர்.
அச்சமிலாத மாணிக்கவாசகர் அன்பிலாதவரைக் கண்டால் அஞ்சுகிறார். அன்பிலாதவர் உறவு, நட்பு பனைமரத்து நிழலனையது; கானல் நீர் போன்றது.
பனைமரத்து நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்க இயலாது; முடியாது. கானல் நீர் தாகம் தீர்க்காது.
அன்பிலாதவருடன் பழகி அவர்களைச் சுமப்பது பைத்தியக்காரத்தனம். அதனால் மாணிக்க வாசகர் ‘அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!’ என்று பாடுகிறார்.
ஆம்! அன்பிலாதவர் உறவு அஞ்சத்தக்கது. அன்பிலாதவர்கள் ஒழுக்கமுடைய வர்களாகவும் இருக்கமாட்டார்கள்; வஞ்சனை, ஏமாற்று, சூது முதலியனவும் கொண்டிருப்பார்கள்.
ஆதலால், ஒழுக்கமுடையவராக இருக்க விரும்பினால் அன்புடைய ராக வாழ்தல் வேண்டும்.
மனிதன் தன்னுடன் தொடர்புடையார் மாட்டும், தொடர்பிலாதார் மாட்டும், கடவுள் மாட்டும் அன்பு செலுத்தும் வரை ஒழுக்கமுடைய வனாக இருப்பான்.
அன்பு வளர, அன்பை அனுபவிக்க, அன்புகாட்ட யான்’ என்ற உணர்ச்சியைத் துறந்தேயாக வேண்டும்.










