உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன்.
மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர், தான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பி, அதற்காக எல்லா
வகையிலும் முயற்சி செய்தார். ஆனால், ஒவ்வொன்றும் தோல்வி அடைந்தது. அவர் பல
வகையான தவ ஞானிகளைத் தேடிப் போனார். ஒருவர் யோசனை சொன்னார்: ‘‘நீங்கள் முல்லா
பாருங்கள். அவர் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்!’’
ஒரு பை நிறைய வைரங்கள் எடுத்துக் கொண்டு முல்லா போனார் செல்வந்தர். அவரிடம்
வைரங்களைக் காட்டிச் செல்வந்தர் சொன்னார்: ‘‘நான் மிகவும் துயரமுடைய மனிதன். எனக்கு
மகிழ்ச்சி தேவை. அதற்காக நான் எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். மகிழ்ச்சியை
ஒரு முறைகூட நான் அனுபவித்ததில்லை. சாவு என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உங்களால் எனக்கு உதவ முடியுமா?
உலகத்தில் உள்ள எல்லாமே என்னி டம் இருக்கிறது. ஆனாலும் நான் மகிழ்ச்சி இல்லாமல்
இருப்பது ஏன்?’’ சற்று நேரம் முல்லா அந்த மனிதரை ஊன்றிப் பார்த்தார். பிறகு, என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியாத வேகத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த செல்வந்தர் மீது பாய்ந்து, வைரங்கள் வைத்திருந்த பையை அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடினார் முல்லா.
‘‘நான் ஏமாற்றப்பட்டேன். கொள்ளையடிக்கப் பட்டேன்!’’ என்று செல்வந்தர் கதறியபடியே முல்லா வின் பின்னால் படுவேகமாக ஓடினார். அந்த நகரத்தின் எல்லாத் தெருக்களையும் முல்லா நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதனால் அவர் குறுக்கும் நெடுக்குமாக அப்படியும் இப்படியுமாகக் கண்டபடி ஓடினார். அந்தச் செல்வந்தர் தன் வாழ்நாளிலேயே அப்படி ஓர் ஓட்டம் ஓடியதில்லை. எதிர்ப்பட்ட அனைவரிடம், ‘‘நான் முழுவதுமாகக் கொள்ளையடிக் கப்பட்டு விட்டேன். எனது சம்பாத்தியம் எல்லாம் போய்விட்டது. என்னைக் காப்பாற்றுங்கள். ஓடி வாருங் கள்… எனக்கு உதவி செய்யுங்கள்!’’ என்று புலம்பிக் கொண்டே ஓடினார்.
ஒரு கூட்டம் அவர்களைப் பின்தொடர்ந்தது. முல்லாவின் ஓட்டத்துக்கு ஓரிடத்தில் முற்றுப் புள்ளி விழுந்தது. அந்த செல்வந்தர் எந்த இடத்தில் முதன்முதலாக முல்லாவைக் கண்டாரோ அதே இடத்துக்கு அப்போது அவர்கள் இருவருமே திரும்பி வந்திருந்தனர். கதறிக் கொண்டிருந்த செல்வந்தரிடம் வைரங்கள் அடங்கிய பையைத் திரும்பக் கொடுத்தார் முல்லா. அப்போது மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய செல்வந்தர் சொன்னார்: ‘‘கடவுளே, நன்றி!’’
முல்லா சொன்னார்: ‘‘இங்கே பார், நான் உன்னை மகிழ்ச்சியடைய வைத்து விட்டேன். இப்போது மகிழ்ச்சி என்பது என்னவென்று உனக்குத் தெரிந்து விட்டது. இந்தப் பை பல வருடங்களாக உன்னிடம் இருக்கிறது. ஆனால், நீ மகிழ்ச்சி யாக இருக்கவில்லை. அதை உன்னிடமிருந்து வெளியேற்ற வேண் டும். மகிழ்ச்சி என்பது துக்கத்தின் ஒரு பகுதி. அதனால், மகிழ்ச்சி மட்டுமே உங்களுடைய லட்சியமாக இருக்க வேண்டுமானால் நீங்கள் துக்கத்தையும் அனுபவிக்க வேண்டும். துக்கத்துடன் இருப்பவர்கள் அப்படி சில கணங்களே இருக்க முடியும். இரண்டுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை.
நமது நோக்கம் மகிழ்ச்சியல்ல. அது பேரானந்தம். மகிழ்ச்சியாக இருப்பது பயனில்லாதது. அது துக்கத்தைச் சார்ந்து இருக்கிறது. பேரானந்தம் என்பது அப்பால் செல்லும் நிலை. மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கடந்து முரணில்லாத எல்லையில் இருப்பது பேரானந்தம். இந்தப் பேரானந்தம் என்பது எதிர்நிலைகள் இல்லாதது!’’ செல்வந்தர் இப்போது தெளிவு பெற்றார்.










