மேல்கோட்டை நாராயணன் திருநாராயணபுரம் அல்லது மேல்கோட் என்றழைக்கப்படும்
இத்திருத்தலம்,தக்ஷிணபத்ரிநாத் என்றும் வழிபடப்படுகின்ற தலம். அவசியம் தரிசிக்குமாறு
அன்பர்களை பணிவுடன் வேண்டுகின்றோம் ஓம் நமோ நாராயணாய
திருநாராயணபுரம்(மேல்கோட்டை), மாண்டியா(கர்நாடகா), ஸ்ரீ நாராயண பெருமாள்
(செல்வப்பிள்ளை, ராம பிரியன் – உற்சவர்) திருக்கோயில்.ஸ்ரீ நாராயண பெருமாள் திவ்ய சேவை
கர்நாடகா திவ்ய ஷேத்ரம்….ராமானுஜ சம்பந்தம்.கர்நாடக மானிலத்தில் மாண்டியா
மாவட்டத்தில் 30கி.மீ பாண்டவபுரத்திருந்தும்,25கி.மீ.மாண்டியாவிலிருந்தும் 130 கி.மீ
பெங்களூரிலிருந்தும்,900 மீட்டர் கடல் மட்டத்துக்கு மேல் அமைந்துள்ள ரம்யமான
பூமி.”க்ருதயுக”த்தில் ”வேதகிரி”என்றும்,”த்ரேதா
யுகத்தில்“நாராயணாத்ரி”என்றும்”த்வாபர”யுகத்தில் “யாதவாத்ரி”என்றும் அழைக்கப்பட்டு
வந்தது.மூலவர் “செலுவனாராயணன்”த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராம்னாலும்,ஸ்ரீக்ருஷ்ணனாலும்
வணங்கப்பட்டவர்.
கலியுகத்தில் ஸ்ரீராமானுஜரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு
”யதிசைலா”என்றழைக்கப்படுகிறார்.தற்சமயம் திருநாராயணபுரம் அல்லது மேல்கோட்
என்றழைக்கப்படும் இத்திருத்தலம்,தக்ஷிணபத்ரிநாத் என்றும் வழிபட்ப்படுகின்றது.
ஆயினும் மேல்கோட்,தொண்டமனூர் மற்றும் சத்யாகாலம்,மத்ய ரெங்கம் ஒருங்கே பயணிக்க
மாண்டியாவில் தங்குவது இன்னும் சௌகரியம்..
அதென்ன கர்நாடகத்தில் வைணவ திவ்ய ஷேத்ரமா?ஆழ்வார்கள் மங்களாசாசனம்
செய்தாலொழிய(அது 100 பாட்டைக் கொண்ட திருநறையூரோ,திருக்கண்ணபுரமாகவோ
அல்லது ”ஆற்றங்கரைக்கிட்ந்த கண்ணன்”என்ற ஒற்றை வரிகளினால் திவ்ய ஷேத்ர
அந்தஸ்தை அடைந்த கபிஸ்தலம் ஆகட்டும்) ஒரு திருமாலது கோவில் திவ்ய ஷேத்ர
அந்தஸ்தை அடைந்ததாகாது.வைணவர்களுக்கு அபிமானமான
திருநாராயணபுரமோ,மன்னார்குடியோ,மதுராந்தகமோ இப்பேற்றை அடைய முடியவில்லை.
இருப்பினும் சம்சாரிகளான நமக்கு ஆழ்வார்கள் சமீபத்தில் வந்து காக்ஷி
கொடுக்கப்போவதில்லை.ஆனால் நம் ஆசார்யர்கள் தமது வைணவ படைப்புக்களை
ப்ரபலப்படுத்தவும்,பகவானே தன்னை ஆசார்யர்கள் மூலம் வெளிப்படுத்தி,
நன்கு ப்ரகாசப்படுத்திக் கொண்ட திருத்தலங்கள் ஆழ்வார்களால் மங்களாசாஸனம்
செய்விக்கப்பட்ட திவ்ய தேசங்களுக்கு ஈடானவை..
அத்தகைய திருத்தலங்களில் பிரதானமான இரண்டு,நம் ஆசர்யன் ஸ்ரீ ராமானுஜரும்,ஸ்ரீ
வேதாந்த தேசிகரும் சம்பந்தப்பட்டது என்று புரிந்த பின் அவற்றின் ஏற்றத்துக்கு மென்மேலும்
மெருகு ஏறுகிறது.
முதலில் ராமானுஜ சம்பந்தம் பெற்ற மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் பற்றிய சிறு குறிப்பு.
கர்நாடக மாநிலம் வைஷ்ணவ சம்ப்ரதாயத்திற்கு ஸ்ரீஅனந்தாழ்வார்,ஸ்ரீநஞ்சீயர்,ஸ்ரீஆதிவண்சடகோபன் போன்ற மகானுபாவர்களைத் தந்தருளிய பூமி!
கர்நாடக மானிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் 30கி.மீ பாண்டவபுரத்திருந்தும்,25கி.மீ.மாண்டியாவிலிருந்தும் 130 கி.மீ பெங்களூரிலிருந்தும்,900 மீட்டர் கடல் மட்டத்துக்கு மேல் அமைந்துள்ள ரம்யமான பூமி.”க்ருதயுக”த்தில்
”வேதகிரி”என்றும்,”த்ரேதா யுகத்தில் “நாராயணாத்ரி”என்றும்”த்வாபர”யுகத்தில் “யாதவாத்ரி”என்றும் அழைக்கப்பட்டு வந்தது.மூலவர் “செலுவனாராயணன்”த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராம்னாலும்,ஸ்ரீக்ருஷ்ணனாலும் வணங்கப்பட்டவர்.
கலியுகத்தில் ஸ்ரீராமானுஜரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு ”யதிசைலா”என்றழைக்கப்படுகிறார்.தற்சமயம் திருநாராயணபுரம் அல்லது மேல்கோட் என்றழைக்கப்படும் இத்திருத்தலம்,தக்ஷிணபத்ரிநாத் என்றும் வழிபட்ப்படுகின்றது.
ஸ்ருஷ்டிக்கும் செயலில் சித்திபெறவும் தினசரி பூஜைகளுக்கு ஆதாரமாகத் தமக்கு ஒரு விக்ரக மூர்த்தி வேணுமெனக்கேட்ட ப்ரம்மனுக்கு விஷ்ணு தன் ஆத்மகலசத்திலிருந்து வ்ருத்தி செய்யப்பட்ட விக்ரஹம் ஒன்றைக் கொடுக்கிறார்.ப்ரம்மன் பின்பு அவ்விக்கிரகத்தை தம் மானசீக புத்ரனான சனத்குமாரனுக்குக் கொடுக்கிறார்.
சனத்குமாரர் அதனை பூலோகத்தில் மேல்கோட்டையில் “நாராயணாத்ரி”என்ற பேரில் ஸ்தாபிதம் செய்கிறார்.
பூஜிக்க தனக்கு வேறொரு மூர்த்தி வேண்டும் என்று கேட்ட ப்ரம்மனுக்கு விஷ்ணு தானும்,பூதேவி,ஸ்ரீதேவி சமேதராக இருக்கும் விக்ரகத்தைக் கொடுத்தருளினார்.த்ரேதா யுகத்தில் ஸ்ரீராமசந்த்ர மூர்த்தி தான் வழிபட மூர்த்தி ஒன்றைக் கேட்க ப்ரம்மன் தன்னுடன் இருந்த அந்த விக்ரகத்தை அளிக்கிறான்.
ஸ்ரீராமருக்கு அவ்விக்கிரஹம் மிகவும் பிரியமாகப் போக அம்மூர்த்தி”ராமபிரியா”என்றழைக்கப்படுகிறது.ராமர் தன் காலத்துக்குப் பின் குசனுக்கு அளிக்க, குசனும் அவனது பெண்ணான கனகமாலினியின் கல்யாணத்தின் போது( குசனின் பெண் யாதவகுல மன்னனுக்கு வாழ்க்கைப்படுகிறாள்.
இவ்வாறாக சூர்யகுலதனம் சந்திரகுலத்துக்கு இடம் பெயர்ந்தது) ராமபிரியாவை பெண்ணுடன் அனுப்புகிறான்.துவாபர யுகத்தில் ஸ்ரீக்ருஷ்ணனும்,ஸ்ரீபலராமனும் இவ்விக்ரகத்தை ஸ்வீகரித்தனர்.
ஒரு சமயம் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஸ்ரீபலராமன் நாராயணாத்ரியில் வீற்றிருந்த மூல விக்ரகமான “செலுவநாரணன்”தங்களிடம் உள்ள ராமபிரியா விகரகத்தை முற்றிலும் ஒத்திருந்தமை கண்டு ஆச்சர்யம் மேலிட்டு மேல்கோட்டில் உத்சவமூர்த்தியாக “ராமபிரியா”வை ப்ரதிஷ்டை செய்கிறார்.அதுமுதல் இத்தலம் “யாதவாத்ரி”ஆயிற்று.
மேல்கோட் அல்லது திருநாராயணபுரத்தின் சமீபத்திய சரித்திரம்.
புகழ்பெற்ற யாதவாத்ரிக்கும் சோதனைகாலம் ஹிந்து அரசர்களுக்கிடையேயான சண்டை மற்றும் துலுக்கர்கள் படையெடுப்பு என்ற வடிவில் வந்தது.மூல விக்ரகம் செலுவநாராயணப்பெருமாள் பூமிக்கடியில் புதையுண்டது.உற்சவர் ராமப்ரியா துலுக்கர் படையெடுப்பில் களவாடப்பட்டு தில்லி பாதுஷாவின் பொக்கிஷ அறையில் முடங்கியது.
ராமானுஜர் என்னும் மாமுனியும் கர்நாடகம் செய்த புண்ணியமும்.
சரித்திரத்தில் எதிர்மறையான நிகழ்வுகள் இறைவன் நடத்தும் பெரும் நாடகத்தின் ஒரு அங்கமே என்ற பேருண்மையை நிரூபிக்கும் நிகழ்வுகள் சோழ தேசத்தில் மிக வேகமாக் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ துவேஷம் மிகுந்து சோழராஜன் ராமானுஜரின் ஆசார்யரான பெரியநம்பிகளையும் அவரது அந்தரங்க சிஷ்யரான கூரத்தாழ்வானின் கண்களையும் பறித்தனன்.
ராமானுஜரை இழக்க விரும்பாத வைணவப்பெருந்தகைகள் அவரை கொள்ளிடத்திற்கு அப்புறமாக அனுப்பி வைத்து,நிலைமை சீரானபின் கூட்டிக் கொள்வதாகச் சொல்லி அனுப்பி வைத்தனர்.ராமானுஜரும் கர்நாடகாவில் உள்ள தொண்டமனூர் என்னும் ஊர் வரை வந்து விட்டார்.அவ்வூரில் ஊர்மக்களுடன் கலந்து சமுதாய ஏரி ஒன்றை நிர்மாணித்தார்.
அவ்வமயம் .அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த பிட்டிதேவன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான்.
ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான். -ஒரு நாள் அவர் நெற்றியில் இட்டுக் கொள்ள திருமண் இல்லாமல் தவிக்க அவரது கனவில் எம்பெருமான் தோன்றி
அருகில் இருக்கும் யாதவகிரியில் உள்ள யோக புஷ்கரணியில் ஒரு மரத்துக்கடியில் எறும்பு புற்றில் தாம் மூலவ்ராக புதைந்து இருக்கும் நிலையையும் கல்யாணிபுஷ்கரணியில் அவருக்கு திருமண் கிடைக்கும் என்று கூறுகிறார்.(ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது )
ராஜா விஷ்ணூவர்த்தனனின் ராணுவ வீரகள் உதவியால் புற்றில் பால் இட்டு மண்ணைக் கறைத்து,உள்ளே புதைந்து இருக்கும் மூலவரை மீட்கின்றார் ராமானுஜர்.திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார் – இது நடந்தது அன்றுமுதல் அவ்விடம் “யதிசைலா(முனிவர் மலை)” எனப்பட்டது.
மூலவரை அடையாளம் காட்டிய பெருமாளே மறுபடியும் ராமானுஜருக்கு உதசவர் இருக்குமிடத்தையும் காட்டிக் கொடுக்கிறார்.மேல்கோட்டை பொக்கிஷங்களைக் களவாடிய தில்லி பாதுஷாவின் பொக்கிஷ அறையில் இருப்பதை செவியுற்ற ராமானுஜர் தன் தள்ளாத வயதிலும் தில்லிக்குச் சென்று பாதுஷாவிடம் உற்சவரைக் கேட்கிறார்.
ராமானுஜரின் கீர்த்தி,தேஜஸ் இவற்றைக் கண்டு மரியாதை கொண்ட பாதுஷா விக்ரஹம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுகிறான்.அவ்விக்கிரகம் பாதுஷாவின் பெண்ணின் செல்ல விளையாட்டு பொம்மையாக இருந்தது.
விக்ரஹத்தின் பொலிவைக் கண்டு தம் வயம் இழந்த ராமானுஜர்,”செல்ல்லப்பிள்ளையே வா!”என்றழைக்க காலில் அணிந்த சலங்கை கலீர்,கலீரென சத்தமிட்டுக் கொண்டு அவ்விக்ரகம் தளர் நடை இட்டுக் கொண்டு ராமானுஜரின் மடியில் அமர்ந்தது.”செல்லப்பிள்ளையுடன்”தெற்கு நோக்கிச் செல்லும் ராமானுஜருடன் பாதுஷாவின் பெண்ணும் பித்துப் பிடித்தாற்போல தொடர்ந்து மேல்கோட் வரையிலும் வருகிறாள்.
அவளை லக்ஷ்மியின் அம்சமாகக் கருதும் வைஷ்ணவர்கள் செல்லப்பிள்ளை விக்ரஹத்தின் பாதத்தில் ”பீபிநாச்சியாராக”வணங்குகின்றனர்.அன்றிலிருந்து யதிராஜ சம்பத் குமாரன் என்று அழைக்கப் பெற்றார்
உற்சவர். செல்வப்பிள்ளை திருநாராயணபுரம் வந்த நாளான மாசி கேட்டை “டில்லி உத்சவம்” என்று இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் எல்லாம் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. டில்லியிலிருந்து செல்வப்பிள்ளையை கொண்டு வந்தபோது அவருக்கு ஜாதி பேதம் பார்க்காமல் ஹரிஜன மக்களும், மலைவாழ் மக்களும் உதவினர்.
அவர்களுக்கு ‘திருக்குலத்தவர்’ என்ற பெயரிட்டு அவர்களுக்கு ஆலயப் பிரவேச அனுமதி கொடுத்து கௌரவித்தார் ராமானுஜர்.
அவர்களுக்கு வைரமுடி போன்ற பல உற்சவங்களுக்கு விசேஷ தரிசனம் செய்து கொடுத்தார். பெருமாள் புறப்பாட்டின்போது, வாத்தியம் வாசிக்கும் உரிமை ஹரிஜன இனத்தைச் சேர்ந்தவருக்கே இன்றும் உள்ளது.
ராமானுஜர் மேல்கோட்டையில் 12 வருஷம் இருந்துவிட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது, அங்கிருந்த அவரது சீடர்கள் துயரமாக இருப்பதைக்கண்டு அவரை மாதிரியே ஒரு விக்ரஹம் செய்து அதை அவர்களுக்குத் தன் நினைவாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இது இன்றும் ‘தமர் உகந்த திருமேனி’ என்று போற்றப்படுகிறது. ஊர் மக்கள், அவரைப் பார்த்தால் உங்களிடம் பேசுவது போல இருப்பதால், இந்த விக்ரஹத்தைப் ‘பேசும் ராமானுஜர்’ என்று அழைக்கிறார்கள்.
தென்னாட்டில் நான்கு முக்கிய ஸ்ரீவைஷ்ணவ ஷேத்ரங்களில் திருநாராயணபுரம் என்ற மேல்கோட்ட்டும் பிரசித்தமாக வணங்கப்பெருகின்றது. மற்ற மூன்றும் முறையே ஸ்ரீரங்கம் திருமலை,காஞ்சிபுரம் ஆகும்.
இந்நான்கு ஷேத்ரங்களின் பெருமையாக ராமானுஜர் இய்ற்றிய ஸ்லோகம் சான்று.சந்தியாவந்தனத்தின் இறுதியில் இந்த ஸ்லோகம் சொல்லப்படும்..”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்…மேலும் ”ராமானுஜ தயாபாத்ரம்” என்ற தனியனும் இத்தலத்தையே குறிக்கும்..சயனகோலத்தில் இருக்கும் ராங்கனாதன்வாழும் திருவரங்கம் ”போகமண்டபம்(விடையாற்றும்”என்றும்
சேவையாய் திருமலையில்”புஷ்ப மண்டபமாகவும்” காஞ்சியில் “தியாகமண்டபமாகவும்” திருநாரணபுரத்தில் பெருமாள்”ஞானமண்ட்பமாகவும்”காக்ஷி அளிக்கிறார்.ஸ்ரீரங்கம்,ஆழ்வார்திருநகரி,ஸ்ரீவில்லிபுத்தூர் போன்று இங்கும் அரையர் சேவை விமரிசையாக நடைபெறுகின்றது.
திருநாராயணபுரச் சிறப்பு வைரமுடி சேவை.
அழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சி,காஞ்சியில் கருட சேவை,திருப்பதி பிரம்மோத்சவம் என்று விமரிசையான முக்கிய நிகழ்வுகள் மனசில் நிற்பதுபோலத்தான் திருநாராயண்புரத்து வைரமுடி சேவையும்.பங்குனியில் நடக்கும் இந்த உதசவத்தைக் காண மாலை 6 முதல் மறுனாள் காலை மூன்று மணி வரை சுமார் 4லக்ஷம் பக்தர்கள் செல்லப்பிள்ளையின் தரிசனத்தைக் கண்டு களிக்கின்றனர்.
செல்லப்பிள்ளை அணிந்து கொள்ளும் வைரமுடி மாண்டியா கருவூலத்தில் இருந்து பல்லக்கில் பயபக்தியுடன் கொண்டு வரப்படுகிறது.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்படும் இவ்வாபரணம் கலெக்டர்
முன்னிலையில் சீல் திறந்து கோவில் நிரவாகிகள் ம்ற்றும் புரோகிதர்கள் கையொப்பத்துடன் ஒப்படைக்கப்படும் அந்நிகழ்ச்சி சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும்.வைரமுடியினை செலுவநாராயணன் சிரசில் அணியும் வரை தன் கண்ணைத் திறப்பதில்லை என்று அவ்வலங்காரத்தில் ஈடு பட்டிருக்கும் பரம்பரை பட்டாச்சார் நெகிழ்ந்து கூறுவார்
வைரமுடியின் சரித்திரம்.
பகவான் க்ருஷ்ணனே இந்த கிரீடத்தை பகவான் செலுவ நாராணனுக்கு பரிசளித்ததாக நமபப்படுகின்றது.பாற்கடலில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த ஸ்ரீமந்நாராயணனின் வைரகிரீடத்தை ப்ரஹலாதன் பரம்பரையில் வந்த வ்ரோசனன் களவாடி பாதாள லோகத்தில் ஒளித்து வைக்கிறான்.
வைனதேயன் எனப்படும் கருடன் அதனை மீட்டு வருகையில் ப்ரிந்தாவனத்தில் விளையாடும் கண்ணன் அருகில் வருகையில் மேலே செல்லமுடியாமல் இறைவன் சித்தமது என்றுணர்ந்து அம்முடியை க்ருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கிறான்.
இதற்குள்ளே ராமப்ரியாவென்னும் அந்த உற்சவ மூர்த்தி க்ருஷ்ணனிடம் இருக்க அம்முடியினை அம்மூர்த்திக்கு அணிவித்து மகிழ்கிறான்.பின்னொருனாள் பகவான் பலராமன் திருநாராயணபுரத்தில் இருக்கும் மூலவரது அழகு தம் ராமபிரியாவுடன் ஒத்துப்போக (வைனதேவன் கொண்டு வந்த முடி என்பதனாலும் வைரமுடி) வைரமுடியுடன் ராமபிரியாவை இக்கோவிலில் சேர்த்தான் என்பது ஐதீஹம்..
வைரமுடி அணிந்த செலுவநாராயணப்பெருமாள் பவனி வரும் முன்பு கருடன் வலம் வருவார்.
தன் உபய நாச்சிமார்களுடன் சந்திரப்பிரபையில் பவனி வரும் செலுவ நாராயணனை,ஜொலிக்கும் அந்த சுந்தரனை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் வெவ்வேறு கோணங்களில்
ஸ்ரீபாதம் தாங்கிகள் சுமந்து காண்பிக்கும் அந்த நேர்த்தியினால்தான் கூடி இருக்கும் நாலு லக்ஷ ஜனாங்களுக்கும் பெருமாள் தரிசனம் நமக்குக் கண்டிப்பாகக் கண் குளிர உண்டு என்ற நம்பிக்கை வருகிறது.
மேல்கோட் வைரமுடி சேவைக்கு வந்தவர்கள் பெருமாள் தரிசனம் செய்யவில்லை என்றால் அவர்கள் உண்மைக்கு மாறாகப் பேசுகின்றனர் என்றே அர்த்தம்..வைரமுடி சேவை தவிர சித்திரையில் ராமானுஜ ஜெயந்தியும் மிக விசேஷம்.
கார்த்திகை மாசம் நடக்கும் அஷ்ட தீர்த்தோத்சவம்,தைபுனர்வசுவன்று ராமானுஜர் திருநாராயணபுரம் வந்ததைக் கொண்டாடும் உற்சவம்,க்ருஷ்ணராஜ திருநாள்9 நாள்) மற்றும் ஆடிப்பூரம் போன்றவை இத்தல்த்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் மற்றைய விசேஷங்கள்.
திருநாராயணபுரம் குழந்தைப் பேறு வேண்டி 9 நாள் விரதமிருந்து கல்யாணி புஷ்கரணியில் தீர்த்தமாடும் பக்தர்கள் நாடும் ஸ்தலம்.
திருநாராயணபுரத்தைச் சுற்றிய மற்றைய திருக்கோவில்கள்.
ஸ்ரீமஹா லக்ஷ்மி குஞ்சா நரசிம்மப்பெருமாள் கோவில்.இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக உள்ளன.ஊர் தொண்டமனூரில் ராமானுஜர் தோற்றிவைத்த ஏரி,கோபாலக்ருஷ்ணஸ்வாமி ஆலயம்,நம்பி நாராயணஸ்வாமி ஆலயம் மற்றும் ஸ்வாமி ராமானுஜர் ஆலயம் பார்க்கவேண்டிய கோவில்கள்.
யோகநரசிம்ஹ ஆலயமும் ஸ்வாமி ராமானுஜர் சேஷ அம்சத்தில் ஒருங்கே வீற்றிருக்கும் ஆலயம் ராஜா விஷ்னூவர்த்தனனால் கட்டப்பட்டது.ஆலயத்திலுள்ள நரசிம்ஹன் ஜொலிக்கும் தேஜஸு.ராமானுஜர் அனந்தனின் அம்சம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதிசேஷனின் படங்கலுடன் காக்ஷி அளிக்கும் விக்கிரகம் நேர்த்தி.
மாலை 6 மணி அளவில் இன்றும் விக்ர்கத்துக்குப் பின் வீற்றிருக்கும் சேஷன் தினம் வருவதாக ஐதீகம்.கஞ்சம் என்னும் காவேரிக்கரையில் வீற்றிருக்கும் நிமிஷாம்பா ஆலயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று..
திருநாராயணபுரம் கோவில் தெய்வங்கள்.
மூலவர் – திருநாராணன்.
தாயார் – யதுகிரி நாச்சியார்.
உற்சவர் – செல்வப்பிள்ளை,சம்பத்குமாரர்.
உற்சவர் தாயார் – கல்யாணி,செல்வநாயகி.
தொடர்புக்கு பாங்கூர் சத்திரம் இன்சார்ஜ் திரு.ரங்கசாமி ரகுநந்தனன் – 9620606866
கோவில் நேரம்…காலை 7.30 முதல் மதியம் 1 மணி…மாலை 4 முதல் 6 வரை மீண்டும் 7 முதல் 8.30 வரை.
ஆயினும் மேல்கோட்,தொண்டமனூர் மற்றும் சத்யாகாலம்,மத்ய ரெங்கம் ஒருங்கே பயணிக்க மாண்டியாவில் தங்குவது இன்னும் சௌகரியம்.
ஓம் நமோ நாராயணாய










