தூரத்தில் தரிசித்தால் சிவலிங்கம்;
அருகில் தரிசித்தால் விநாயகர். இந்த அற்புத லிங்க உருவ விநாயகரை
தரிசிக்க தீவனூர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். செஞ்சி- திண்டிவனம்
மார்க்கத்தில் உள்ளது இந்த ஸ்ரீசுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயம்.
இவருக்கு, ‘நெற்குத்தி சுவாமிகள்’ என்றொரு பெயரும் உண்டு.
தேசிங்குராஜாவின் காலத்தில், ஆடு- மாடு மேய்க் கும் சிறுவர்கள் நெற்கதிர்களைப் பறித்து
வந்து ஓய்வு நேரத்தில் அதைக் குத்தி அரிசியாக்கித் தின்பர். ஒரு நாள் அப்படி நெல் குத்தி
அரிசியாக்கக் கல் ஒன்றைத் தேடியலைந்தனர். அப்போது ஐந்தரை அங்குலமுள்ள
யானைத்தலை போன்ற குழவிக்கல் ஒன்றைக் கண்டெடுத்தனர் மேய்ச்சல்காரச் சிறுவர்கள்.
அது நெல் குத்த உதவாது என்று, அதை நெற் குவியலின் மீது வைத்துவிட்டு, வேறு கல்லைத்
தேடிச் சென்றனர். மீண்டும் வந்து பார்த்தபோது நெற்குவியல் குத்தப்பட்டு அரிசி, உமி, தவிடு
என எல்லாமே தனித்தனியே இருந்தது. இதனால் பிரமிப் படைந்த சிறுவர்கள், ‘இது நெற்குத்தி
சுவாமியாக இருக்க வேண்டும்!’ என்று அதை ஓரிடத்தில் பத்திர மாக வைத்துவிட்டுச்
சென்றனர். மறு நாள் நெல் குத்த தேடியபோது கல்லைக் காணவில்லை. அப்போது அருகில்
உள்ள தடாகம் ஒன்றில் நீர் குமிழியிட்டுக் கிளம்பியது. சிறுவர்கள் உடனே நீரில் மூழ்கிப் பார்த்
தனர். அங்கு அவர்கள் தேடிய கல் கிடந்தது. உடனே அதை எடுத்துக் கரையில் பத்திரமாகக் கட்டி
வைத்துச் சென்றனர்.
அடிக்கடி நெல் திருட்டுப் போவதாக அந்த ஊர் பெரியதனக்காரரிடம் விவசாயிகள் முறையிட்டனர். விசாரணையில் கிழவி ஒருத்தியின் வீட்டில் உமிக் குவியல் இருப்பதைக் கண்டுபிடித்தனர். மாடு மேய்க்கும் சிறுவர்களிடம் இருந்து வாங்கியதாகத் கிழவி தெரிவித்தாள். இறுதியில் சிறுவர்களிடம் இருந்த கல்லை வாங்கிக் கொண்டுபோய் தனது வீட்டில் வைத்துக் கொண்டார் பெரியதனக்காரர். அன்றிரவு விநாயகர், அவரின் கனவில் தோன்றி, ‘‘நீ கொண்டு வந்திருப்பது சாதாரணமான கல் அல்ல ஓங்கார ஒளியாக விளங்கும் நானே. விபூதி மற்றும் ருத்திராட்சத்துடன் பூஜித்தால் என்னை அடையும் பேறு உனக்கு ஸித்திக்கும்!’’ என்று கூறி மறைந்தார்.
அவரோ தீவிரமான வைணவர். எனவே, விபூதி- ருத்திராட்சம் அணிவது தனது கொள்கைக்கு முரணானது என்பதால் அதற்கு உடன் படவில்லை. ஆனால், அவரின் தம்பி வேங்கடாசலம் என்பவர் தெய்வ வாக்கை இகழக் கூடாது என்பதற்காக சிறு குடிசை ஒன்றைக் கட்டி சுயம்பு விநாயகரை அங்கே வைத்துப் பூஜித்து வந்தார். நாளுக்கு நாள் அந்த மூர்த்தி வளர்ந்து வந்தது. பின்னர் விநாயகரின் பெருமையை உணர்ந்த பெரியதனக்காரரும் அவரை பூஜிக்கத் தொடங்கினார்.
இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது குழிகளாக பிராகாரத்தில் காட்சி அளிக்கின்றனர். இரு முனைகளில் கையை வைத்து ஒருவர் வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் நிறைவேறுமானால், இரு பக்கக் கைகளும் இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தப் பொய்யாமொழி விநாயகரின் திருவிளையாடல்கள் ஏராளம். ஒரு முறை முருகப்ப செட்டியார் என்பவர் 100 பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த விநா யகர் கோயிலுக்கு அருகே தங்கி சமையல் செய்து சாப்பிட நேர்ந்தது. விநாயகருக்குப் பொங்கல் செய்து நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு செட்டியார், ‘‘மூட்டையில் உள்ளது அத்தனையும் உளுந்து! என்னிடம் மிளகு இல்லையே’’ என்றார். எனவே, அன்றைக்கு மிளகு இல்லாமல் பொங்கல் செய்து நிவேதித்தனர்.
செட்டியார் சந்தைக்குப் போய்ப் பார்த்தபோது, அனைத்து மூட்டைகளிலும் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. செட்டியார் கதறி அழுதபோது அசரீரி ஒன்று கேட்டது: ‘‘நானே பொய்யாமொழியுடையோன். என் சந்நிதியில் நீ கூறியபடி மிளகு எல்லாம் உளுந்தாகி விட்டது. எனது ஆலயத்துக்கு வந்து உன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிக்குமாறு வேண்டினால், அவை மீண்டும் மிளகு ஆகி விடும்!’’
அவரும் உளுந்து மூட்டைகளோடு சந்நிதானத்துக்குத் திரும்பி தனது தவறை ஒப்புக் கொண்டு, கிடைக்கும் லாபத்தில் பாதியை விநாயகருக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டார். விநாயகரின் அருளால் உளுந்து, மீண்டும் மிளகாகி லாபம் அவர் நினைத்ததைவிட இரு மடங்கு அதிகமாகக் கிடைத்தது. முருகப்பச் செட்டியார், இறைவனின் அருளை வியந்து விநாயகருக்குக் கோயில் எழுப்பி, பொய்யாமொழி விநாயகர் பதிகமும் பாடினார்.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக விழுதில்லா ஆலமரம் உள்ளது. இங்கு மூன்று ஆல மரங்கள் ஒன்றிணைந்து காணப்படுகிறது. இவற்றை மும்மூர்த்திகள் என்று பக்தர்கள் வணங்குகிறார்கள். இந்த மரத்தைச் சுற்றி வந்தால், திருமணம் தடைப்படுபவர்களுக்குத் திருமணம் விரைவில் நடைபெறுகிறதாம்.
செஞ்சியில் இருந்து இந்த ஆலயத்துக்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது
திருவண்ணாமலைக்கு போகும் மார்க்கத்தில் உள்ளது இந்தத் திருக்கோயில்.










