சித்தர்கள் அனைவருக்கும் தலைவர் நந்தி தேவரே. இவர் தான் தலைமை சித்தர்.
சிவாகமங்கள் அனைத்தையும் அறிந்தவரும் நந்தி ஒருவரே. இவர் சிவனின் வாகனம்
என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அதன் பின்னே உள்ள வரலாறு என்ன
என்பது தெரியுமா?
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர்
தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில்
இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.
தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது.
இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.
ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.
வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட சிலாத முனிவர் சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை.
சிலாத முனிவர் திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறப்பர் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர்,
தம் உயிரான ஐயாறப்பரைப் பூசித்து கடும் தவம் செய்தார். தனக்கு அறிவார்ந்த மகன் வேண்டுமென்று பிரார்த்தித்தார்.
இறைவன் அசரீரியாக “சிலாத முனிவரே! என்னைப் போன்றே உனக்கொரு மகன் வேண்டும் என்றால் நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் செய்ய யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும்.
அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு மட்டுமே. அவனை எடுத்துக்கொள்!” என்று அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார்.
சிவனருளை எண்ணி சிலாத முனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது,
தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்கு நான்கு தோள்களும் மூன்று கண்களும் பிறையணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டு வணங்கினார்.
சிலாத முனிவரும் அவரது மனைவி சித்ராவதியாரும் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைந்தனர். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள்.
பெற்றோர் அக்குழந்தைக்கு செபேசுவரர் என்று நாமகரணம் செய்து வளர்த்து வந்தார்கள். செபேசுவரர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்கள் உட்பட சகல கலைகளிலும் வல்லவரானார்.
சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர்.
அழகிலும் அறிவிலும் சிறந்த இம்மைந்தனை இன்னும் இரண்டு வருடத்தில் இழக்க நேருமே என்று ஏங்கி வருந்திய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஐயாறப்பர் ஆலயத்தை அடைந்தார் செபேசுவரர். இறைவனைத் தொழுது வழிபட்டார்.
தனக்கு நீண்ட ஆயுளைத் தந்து பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தருளும்படி வேண்டினார்.
பின்னர் அங்கிருந்த அயனரி தீர்த்தத்திலே நீராடிய பிறகு, இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்தார். செபேசுவரரின் அருமைத் திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன.
செபேசுவரரின் உறுதியான தவத்தையும், வைராக்கியத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்த இறைவன் ஐயாறப்பர் அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் வேண்டிய படியே நிலையான நீண்ட ஆயுளைத் தந்தருளினார்.
மேலும், செபேசுவரரது புண்பட்ட உடலை நலமுறச் செய்தல் வேண்டுமெனத் திருவுளங் கொண்டு கங்கை நீர், மேகநீர், பிரமன் கமண்டலநீர், அம்மையின் முலைப்பால்,
இடப நந்தியின் வாய்நுரைநீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார், இறைவன். அதனால் செபேசுவரர் உடல் ஊறு நீங்கிச் சூரியன் போல் பிரகாசித்தார்.
இறுதியாக நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து,
அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார் இறைவன் ஐயாறப்பர்.
பின் செபேசுவரர் ஐயாறப்பரால் உபதேசம் பெற்று கைலாயத்தில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியும்; முதன்மைத் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும், சைவ ஆச்சார்யருள் முதல் குருவாகும் தன்மையும் பெற்றார்.
இறைவன் அருளால் இத்தகைய பேறு பெற்ற செபேசுவரர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார்.
தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.











