பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் ஜீவசமாதி
சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் ஜீவசமாதியில் வீற்றிருக்கும் பரமஹம்ச ஓம்கார சுவாமிகளின் ஞானோதய ஆலயத்திலும் நமக்கு ஜோதி தான் காட்சியளிக்கிறது.
செல்லராஜூ என்ற இயற்பெயர் கொண்ட ஓம்கார சுவாமிகள், திருத்தணிக்கு மேற்கே பத்து மைல் தொலைவிலுள்ள ‘தும்மலசெருவு கண்டிரிகா’ கிராமத்தில் அஸ்தி வெங்கடராஜூ, அஸ்தி சுப்பம்மா ஆகியோருக்கு இரண்டாவது மைந்தனாக 1921-ம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி அவதரித்தார்.
1940களில் ஆண்டுகளில் மாநில அரசுப் பணி மற்றும் மத்திய அரசுப் பணியில் இருந்தபோது ‘ஞானோதயம்’ என்ற வார்த்தை அவரைப் பற்றிக் கொண்டது. தம்மை வழிநடத்துவதற்கென்று ஓரு குரு வேண்டுமென்று நினைத்தபோது, இறைவன் சாமி சண்முகாநந்தா என்ற குருவை அடையாளம் காட்டினார்.
அதுவரை ராம நாமத்தை உச்சரித்துவந்த செல்லராஜூவுக்கு அவரது குரு ‘ஓம்’ என்ற பிரணவத்தை உபதேசம் செய்தார். குருவின் வழிகாட்டுதலில் 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி தைப்பூச தினத்தில் இரவு 12 மணிக்கு அவருக்கு நிர்விகல்ப சமாதி கிட்டியது. அதன்பிறகு ஆன்மீகப் பயணங்களும், மக்களுக்கு உபதேசமும் செய்து கொண்டிருந்தார்.
1949-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி, விஜயதசமியன்று கோடம்பாக்கத்தில் ஞானோதய மன்றத்தைத் துவக்கினார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகியவற்றில் பாண்டித்தியம் உள்ள சுவாமிகள் இந்த மொழிகளில் தமது அனுபவங்களையும் உபதேசங்களையும் நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.
தாம் ஜோதியில் ஐக்கியமாகும் நாளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமது பக்தர்களுக்கு அறிவித்துவிட்டார். அதற்காக முறைப்படி அரசிடம் அனுமதியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அறிவித்தபடி 1967-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் நாள் அமாவாசையன்று அதிகாலை மூன்று மணிக்குத் தமது பக்தர்களின் முன்னிலையில் பரி்பூரணம் அடைந்தார்.
அந்தச் சமயத்தில் ஞானோதய ஆலயம் முழுவதும் மல்லிகைப் பூ நறுமணம் சூழ்ந்திருந்ததாகவும், மின்சார விளக்கு திடீரென்று மிகப் பிரகாசமாக எரிந்து பின்னர் சிறிதுநேரம் அணைந்துவிட்டு மீண்டும் எரிந்தது என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் சுவாமிகளின் உடல் அடக்கம் அவரது குரு சுவாமி சண்முகானந்தா அவர்களின் கையால் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.சுவாமிகளின் ஜீவ சமாதியில் அவர் உருவாக்கிய ஐந்து படிகளைக் காணலாம். இந்த ஐந்து படிகளும் நாம் ஞானம் பெறுவதற்கான ஐந்து நிலைகளாகும்.
நமக்குப் பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே பக்தி என்ற முதல் படியை அடைய முடியும். எப்போது நமது மனம் பக்தி என்ற தேடலைத் துவங்குகிறதோ அடுத்து நம்மைச் சுற்றியுள்ள புற உலக சப்தங்களை மறப்பதற்கு ஜெபம் ஒன்று தேவைப்படுகிறது.
அது தான் ‘ஓம்’ என்ற பிரணவம் . இதனை உச்சரிப்பதால் நமக்குக் கிடைக்கும் பேரின்பம் என்னவென்று சுவாமிகள் தமது பக்தர்களுக்கு நிரூபித்தருக்கிறார்.பக்தியும் ஜெபமும் ஒன்று சேரும்போது நாம் இறைவனுடன் ஒன்றுவதற்கான தாரண நிலைக்கு வந்துவிடுகிறோம்.
சமாதி நிலையான ஐந்தாவது படியைக் கடந்ததும் நாம் ஜோதியைக் காண்கிறோம். அதனை அடுத்து ஓங்காரமே நம்மை வழி நடத்திச் செல்கிறது என்பதைக் காட்டுவதற்காக ‘ஓம்’ என்ற படம் வைக்கப்பட்டிருக்கிறது.











