பிரச்சனைகள் சரி செய்ய வேண்டும்
வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம் பிரச்சனைகள், சுடுகாட்டில் இருக்கின்ற மனிதர்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் உள்ள மனிதர்கள் பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்பிரச்சனைகளை மனிதர்கள் அனைவரும் ஒரே மனப்பக்குவத்துடன் சந்திப்பதில்லை.
அ) பிரச்சனைகளைத் தவிர்ப்பவர்கள்: பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது ஒரு சிலரை வேதனைப்படுத்த வேண்டிவரும் என்பதால் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தயங்குபவர்கள். எந்தத் தீர்வும் எடுக்காமல் தள்ளிப்போடுவது இவர் களது வழக்கம்.
இவர்களை உந்தித்தள்ளுவது பயம் என்கின்ற உணர்வு. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சரியான காலத்திற்காகக் காத்திருப்பதாகச் சொல்லி, காலம் முழுவதும் காத்திருப்பார்கள்.
தள்ளிப்போடுவதே ஒரு பிரச்சனை என்பதையும், தள்ளிப் போடுவதால் பிரச்சனை இன்னும் பெரிதாகும் என்பதையும் இவர்கள் உணர்வதில்லை உணர்வதில்லை.
ஆ) உடனடி முடிவெடுப்பவர்கள்
தடாலடியாக முடிவெடுப்பவர்கள் இவர்கள். உணர்ச்சிகளின் உந்துதலால் யோசிக்காமல் முடிவெடுப்பதன் காரணமாக சிக்கல்களில் இவர்கள் மாட்டிக்கொள்வதுண்டு. பொறுமையாய் இருப்பது இவர்களைப் பொறுத்த அளவில் கையாலாகத்தனம்.
மூளையைவிட, இதயத்தால் அதிகமாக இயக்கப்படுபவர்கள். அவசரத்தில் முடிவெடுப்பதால், பிரச்சனைகளைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையைப் பெற்றுக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள்.
இ) சரியான தீர்வெடுப்பவர்கள்
பிரச்சனைகளைப் பற்றிய ஓரளவு முழுமையான தெளிவு கிடைத்தவுடன், துணிவோடு இறங்கி முடிவெடுப்பார்கள் இவர்கள். மூளையையும் இதயத்தையும் சம அளவில் பயன்படுத்த முயற்சி எடுப்பவர்கள்.
மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதைவிட சரியானவற்றைச் செய்ய வேண்டும் என்பதில் அதிக நாட்டம் உள்ளவர்கள். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சரியான காலத்திற்காக விழிப்புணர்வோடு காத்திருப்பவர்கள்










