மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.
காரணம் அன்று மாசி பௌர்ணமி திதி நாளாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும் திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருகளுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.
இப்படி பல சிறப்புகள் பெற்ற நட்சத்திரம் மகம் ஆகும். பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும் நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். மகமும் பௌர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இதனால் இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது.
திருமால் மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
காரடையான் நோன்பும், சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.
மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும், மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம் அல்லது கேட்கலாம்.. அதுவும் புண்ணியமே.
மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
மாசி மக நட்சத்திரத்தில் எந்த தெய்வத்தை வழிபடலாம்
சிவபெருமான் வருணனிற்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம்.
உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது.
தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம் தான். இதனால் முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாளாக மாசி மகம் அமைகிறது.
பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது.
எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசி மகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.
மாசி மகம் அன்று முறைப்படி விரதமிருந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.










