ஸ்ரீபொன்னம்பல சித்தர் –“இரட்டை சித்தர்கள்”
ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் : திருச்சிற்றம்பல முதலியார், சொக்கம்மாள் ஆகிய இருவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்து செம்பாக்கத்தில் வாழ்ந்து வந்தனர். பல வருடங்கள் கழித்தும் மகப்பேறு வாய்க்காது பெரும் குறையாக இருந்து வந்தது.
திருப்போரூர் திருக்கார்த்திகை தினத்தையொட்டி பல்வேறு பகுதியில் இருந்து வந்த சன்யாசிகள் ஊரில் பிச்சையெடுத்து உண்டு, ஜம்புகேஸ்வரரை வணங்கி செல்வது வழக்கம். ஒரு முறை ஒரு அதி தீவிர சிவசன்யாசி ஒருவரை கோயிலில் தியானத்தில் இருந்தார்.
அவரை பார்த்த சிற்றம்பல முதலியாருக்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி. அவர் தியானத்தில் இருந்து விழித்ததும் அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று உணவு படைத்தது அருள்பெற வேண்டும் என நினைத்து காத்திருந்தார்.
ஆனால் சன்யாசியோ, வாரத்தில் ஒரு முறை, அதுவும் தானே சமைத்த உண்பதைத்தான் வழக்கமாக கொண்டு இருந்தார். சிற்றம்பல முதலியார் வணங்கி, தாங்களே சமைத்து உண்ணுங்கள், அதற்கு தேவையான அரிசியை தருகிறேன் என்று வேண்ட, சன்யாசியும் ஒத்து கொண்டார்.
தன் மனைவியிடம் சொல்லி சமைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு சந்நியாசியை சந்தித்தார். அவருக்கும் உப்பில்லாமல் சமைத்த உணவை சமைத்து உண்ணும் நேரத்தில், சொக்கம்மாள் அங்கு வந்து வணங்கி நிற்க! சிவசந்நியாசி மகிழ்ந்து உண்ணும் சாதத்தில் ஒரு பிடியை கொடுத்து
இதை சாப்பிடம்மா, என்று கூறி கிருத்திகைக்கு நெல்குத்தி அரிசியாக்கி வைத்துள்ளதை தனக்கு என்று சிறிதும் எடுக்காமல் கணவன் கேட்டதும் எடுத்து கொடுத்த சொக்க தங்கமே! உனக்கு “பொன்னம்பலம்” தருகிறேன் பெற்றுக்கொள் என்று கூறிதர அதை வாங்கிய சொக்கம்மாள் உண்டு மகிழ்ந்தாள்.
இந்நிகழ்ச்சி நடந்த சில மாதத்திலேயே சொக்கம்மாள் மணிவயிறு வாய்த்து 10 வது மாதம் ஒரு நன்நாளில் ஆண்மகவு பிறந்தது. பொன்னம்பலம் என்று நாமகரணம் சூட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
குல வழக்க படி சிதம்பரம் சென்று நடராச பெருமானை வணங்கி, வெளிப்பிரகாரம் திருவலம் வரும் பொழுது, திருச்சிற்றம்பலம் என்று அழைத்து அவரின் பின் புறத்தோளின் மீது திருக்கரத்தினால் தொட்டு அருளிட, மெய்சிலிர்த்த முதலியார் திரும்பி பார்க்க, செம்பாக்கம் வந்த சந்நியாசி என்றதும் பரவசம் முற்றனர்.
உனக்கு சித்த புருஷன் அவதரித்துள்ளான், கருத்தொடு வளர்ந்து உலகிற்கு உபகாரம் செய்வாய் என்று, விரைவாய் நீங்கி அருளினார்.பொன்னம்பல சுவாமிகள் கல்வியானது தம் தந்தையார் மூலமே தொடங்கப்பட்டது. சுவாமிகள் இப்பள்ளியில் தனியே பயின்றதில்லை. வேறு இடத்திலும் பயின்றதில்லை.
கற்க வேண்டியது எதுவோ, அதை இறைவனிடமே கற்றார். ஒருமுறை முதலியார் சிவாலயம் சென்று இறைவனிடம், பொன்னம்பலத்தை எந்த மயாத்திரையும் மூடாமல் இருக்க இறைவனை வேண்டி கொண்டார்.
இதை ஞானத்தால் உணர்ந்த வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், “என்னை ப் பற்றிய கவலை வேண்டாம்! எக்காரணத்தாலும் என் ஞானத்தினை தைரோகித காற்றால் மாயை என்ற திரை என்மீது விழாது! உலகமாயையை தண்ணீரில் வெண்ணைபோல் ஒட்டாமல் வாழ்வோம்” என்று தந்தையை பார்த்து உரைத்தார்.
ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் தன் தந்தையிடத்திலே சைவசமய தீட்சையை பெற்றவர். ஒரு ஆண்டு பங்குனி உத்திர ப்ரமோச்சவத்தின் போது திருக்கயிலை சென்று இறைவனை வழிப்பட்டு ஸ்ரீலஸ்ரீ முத்தையா சுவாமிகள் காண வீரசைவ மடத்தில் தங்கினர்.
நிஷ்டையில் இருந்த முத்தையா சுவாமிகள், “இவன் நம் அடிமை, அதிதீவிரதரபக்குபவன், ஆகையால் நீ சிவலிங்கத்தாரணமும், சிவதீட்சையும் செய்தருள்க!” என சிவபரம்பொருள் ஞானாதீதத்தில் உணர்த்தியதை சிரமேற்கொண்டு நிஷ்டை நீக்கி, பொன்னம்பலத்தை அழைத்து வீரசைவ தீக்ஷை செய்வித்து ஞானமார்க்கத்தை போதித்து அருள் செய்தார்.
பொன்னம்பல சுவாமிகள் அவ்வப்போது நிஷ்டையில் பல மணி நேரங்கள் தொடர் தவத்தை கண்டு தந்தை மகிழ்ந்தபோதிலும், தாயார் கவலையுற்றார். திருமணம் செய்விக்க முடிவு செய்தார். சென்னை சைதாப்பேட்டையில் வளர்ந்த அமிர்தம்மாள் என்ற நங்கையை சுவாமிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இரண்டாண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண்மகவும் பிறந்தது. அது நாள் முதல் இல்லறத்தில் இருந்ததே துறவு வாழ்வை கை கொண்டு, தன் குடும்பத்தையும் தன் தந்தையின் நெசவு தொழிலையும் மேற்கொண்டு பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்.
முதலியார் ஒரு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபூசை முடித்து எழுந்து வந்து அமர்ந்த பொழுது பிராணன் உடலை விட்டு நீங்கி சிவகதி பெற்றார். தந்தையின் மறைவுக்கு பிறகு, பொருள் பற்று அற்றவர். சிதிலமடைந்த வீட்டை இடித்து விட்டு புது வீடு கட்ட வேண்டும் என்று அமிர்த்தம்மாள் சுவாமிகளிடம் விருப்பம் தெரிவித்தார். பண பற்றாக்குறையால்
வீடு பாதியில் நின்றுவிடும் என்பதால், சுவாமிகள் மௌனமாகவே இருந்தார் – . அமிர்த்தம்மாள் தன் தந்தையிடம் நிலைமையை கூறினார். சுவாமிகள் மாமனார் தன்னிடம் இருந்த பணத்தை கடனாக கொடுத்து வீட்டை கட்டிகொள்ள சொன்னார். வீடுகட்டி முடிக்க பட்டு கிரகபிரவேசம் செய்வித்தனர்.
சுவாமிகள் சிவயோகத்தில் திளைத்து நின்றதால் உடல்மென்மை தன்மை அடைந்து அதனால் உடல் உழைப்பு மிக குறைந்தது. தினம் அரைநாள் நெசவும், அரைநாள் தவமும் செய்து வந்தார். இதை அறிந்த மாமனார் கோவம் மூண்டது.
சுவாமிகள் வீட்டிற்கு வந்து “வீடு கட்ட வாங்கிய கடன் இருக்க, தவம் என்ன வேண்டி இருக்கிறது? சாமி என்ன வடை, பாயசத்தோடு சோறு போடுமா?” என்று கடிந்து கொண்டார். மனம் நொந்த சுவாமிகள், பூசை அறைக்குள் சென்று கதவை தாழ்பாள் போட்டு
தவத்தில் அமர்ந்தார். மாத அன்னபூரணி வேண்ட, அறுசுவை உணவோடு வடை பாயசத்தோடு பெரிய தலை வாழையிலையில் சித்திர அன்னங்களோடு அன்னபூரணி மாதா கொடுக்க சில நிமிடங்களில் வீடு முழுவதும் மூக்கை துளைக்கும் வாசனை வீச அறையை திறந்து வடைப்பாயாசத்தோடு
அன்னத்தையும் சுற்றி இருந்த தன் மாமனார் மற்றும் உறவினருக்கும் காண்பித்து, விரைவில் உங்கள் கடனை தரிசெய்து அடைத்து விடுவேன் என சுவாமிகள் கூறி ” அன்ன பூரணியின் அருள் இறைவனை உள் அன்போடு தியானித்தால் உலகில் அடைய முடியாதில்லை” என்று உரைத்து சென்றார்.
சுவாமிகள் ஒருநாள் நள்ளிரவில் உள்ளிருளைத் துரத்தி, கருஇருளை விலக்கி ஆன்ம ஓளியை பரப்பி ஓர் ஓளி பிழம்பாக இருந்தார். கண் விழித்து பார்த்த மனைவி, கொள்ளிவாய் பிசாசு போலும் என்று அஞ்சி அங்கே மூர்ச்சையானார். விடிந்ததும் நம்மால் ஒருவர் ஏன் வீண் அச்சம் அடைந்து கலங்க வேண்டாம் என்று நினைத்து,
வேறிடத்துக்கு சென்று விடுவோம் என்று எண்ணியவராய் அம்மானையை விட்டு நீங்கி, சில நாட்களிலேயே தன் தந்தை சமாதி அருகே சிறிய தவக்குடில் அமைத்து நிஷ்டை மேற்கொண்டார்.
மாந்தரீகத்தால் ஏவல் செய்து கொண்டும் ,செவிட்டுத்தனமும், முரட்டு குணமும் கொண்ட வீர வைணவர் ஒருவரை அடக்கியது, ஊர் மக்களுக்கு, காவல் தெய்வமான பிடாரி செல்லியமானால் ஏற்பட்ட பிணியை, திருநீறு கொண்டு போக்கியது, பிடாரி அம்மனை விபூதியால் கட்டி வைத்து அடக்கியது, இவரை சோதிக்க இறந்தவனைப் போல் நடித்தவனை இறக்க வைத்து, பின்பு திருநீறு தூவி அவனை பிழைத்து போக வைத்தது,
முன்வினையால் இறக்கும் தருவாயில் இருந்த ஒருவனை நெற்றியில் திருநீறு பூசி உடல் நலம் பெற செய்தது, வராகி பக்தனை முருக பக்தனாக மாற்றியது போன்ற பல அற்புதங்களை செய்து காட்டினார்.
கதிர்வேல் என்ற பக்தர் தன் தீராத வயிற்று வலி கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும் படி திருக்கழுக்குன்றம் வேதமலையை கிரி வலம் தினமும் வந்தார். ஒரு முறை கிரி வலம் வரும் பொழுது தீராத வயிற்று வலியால் அவதி பட,
அருகில் இருந்த பொன்னம்பல சுவாமிகள் சீடர்களின் ஒருவர், சுவாமிகளின் விபூதியை கதிர்வேல் வயிற்றில் தடவ, வயிற்று வலி நின்றது. சுவாமிகளின் மகிமையை உணர்ந்த கதிர்வேல், சுவாமிகளை காண செம்பாக்கம் சென்றார்.
அப்பொழுது சுவாமிகள் நெசவு செய்து கொண்டு இருந்தார். சுவாமிகளை வணங்கி, நடந்ததை சொன்னார். சிவ தீக்ஷை அளிக்க வேண்டினார்.சுவாமிகளோ, இப்பொழுதே தருகிறேன் என்று சொல்லி அருகில் போய் நிற்க நூல் சுற்றிய தாரை தண்ணிரில் ஊற வைத்துள்ள மண்பானைக்குள் தனது வலது உள்ளங்கை விட்டு தார் ஊறிய தண்ணீரை அள்ளி இதுதான் உனக்கு முக்தி கொடுக்கவல்ல அமுதாகும் இதை அருந்தினால்
ஞான நிலை சித்திக்கும் என்று சொல்லி கதிர்வேலின் புறங்கையில் தீர்த்தம் சிந்தாவண்ணம் சாதாரணதார் ஊரவைத்துள்ள பானை தண்ணீரை தீர்த்தம் என்பதா? இது ஞானம் தரவல்லாத? இது அழுக்கு தண்ணீர் தானே என்றுஎண்ணியவராய் குடிப்பது போல பாவனை செய்து உள்ளங்கை தண்ணீரை தன் துண்டில் நழுவவிட்டார்.
கதிர்வேல் வீட்டை அடைந்தார். துண்டை வீட்டின் திண்ணையில் விட்டெறிந்தார். படுத்து உறங்கினார். உறக்கத்தில் இருந்த பொழுது சன்யாசி ஒருவர் தாகத்தை தீர்க்க, தண்ணீர் கேட்க, வீட்டு பெண்மணி, குளத்து நீர் இருக்கும் பானையை கொண்டு வந்து, திண்ணையில் இருந்த துண்டை வடிகட்டியாக வைத்து நீர் குடிக்க தந்தார்.
நீரை குடித்த உடன், சந்நியாசியின் பார்வை மேல்நோக்கி புருவமைத்திய உணர ஆரம்பித்தது அவ்விடத்திலேயே பத்மாசனம் போட்டு சித்தம் சிவன்பால் ஒடுங்கி நிற்க சிவயோகத்தில் திளைக்க ஆரம்பித்தார். தன்னை மறந்து பல மணி நேரம் அசைவற்ற தீபம்போல உடலும் உள்ளமும் நிலைத்தது. பயந்த பெண்மணி, தன் கணவரை எழுப்பி நடந்ததை சொன்னார்.
அதிர்ந்த கதிர்வேல் தான் செய்த பிழையை எண்ணி வருந்தினார். “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே” என்ற பழ மொழியை உரக்க சொல்லி அழுது புலம்பினார். சுவாமிகளை காண சென்றார். கதிர்வேலை பார்த்த சுவாமிகள், “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையா?”
குருவின் மீது நம்பிக்கை அற்றவனின் ஜபம், தீட்சை, தவம், விரதம், யாகம், தானம் அனைத்தும் வீண். தார் ஊரிய பானை தண்ணீரை தரும்பொழுது குரு மீது இருந்த நம்பிக்கையை இழந்தாய், ஞான வாழ்க்கையும் இழந்தாய் என்று கூறிட, கார்த்திவேல் கதறி அழுதார்.
சுவாமிகள் காலம் கனிந்து வரும் பொழுது உனக்கு தீக்ஷை அளிக்கிறேன் என கூறி அனுப்பினார். பின்னாளில் கதிர்வேல், சுவாமிகள் அருள் பெற்று திருக்கழுக்குன்றத்தில் கதிர்வேல் சுவாமிகள் என்ற பெயரில் சன்யாசியாக விளங்கினார்.











