ஒரு மனிதர், சில ஆரஞ்சுப் பழங்களை வயதான பெண்மணி ஒருவரிடமிருந்து அடிக்கடி வாங்கி, அதன் தோலை உரித்து, சுவை பார்த்து, புளிப்பாக இருக்கிறது என்று அவரிடம் புகார் கூறி, பெண்மணியையும் ருசி பார்க்கச் சொல்லி வற்புறுத்துவார்.
அந்த வயதான பெண்மணியும் அந்த ஆரஞ்சுத் துண்டை வாயில் போட்டுக் கொண்டு, “இனிப்பாகத் தானே இருக்கிறது; ஏன் இப்படி புகார் கூறுகிறாய்?” என சுருக்கென்று பதில் கூறுவதற்கு முன்னாலேயே அந்த மனிதரும் அங்கிருந்து கிளம்பி விடுவார்.
அம்மனிதரின் மனைவி, தினமும் நடக்கின்ற இந்த வேடிக்கயைப் பார்த்து கணவரிடம் விசாரித்தாள். அவர் புன்சிரிப்புடன், “அப்பெண்மணி இனிப்பான ஆரஞ்சுகளை மட்டுமே விற்பனை செய்கிறார்; ஆனால் ஒன்றைக் கூட தான் சாப்பிடுவதில்லை.
அதனால், நான் இப்படி செய்வதனால், செலவு ஒன்றுமே இல்லாமல் அப்பெண்மணி ஆரஞ்சை சாப்பிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா? அதைப் பார்ப்பதற்கு எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.
அருகில் இருந்த காய்கறி விற்பனையாளர் தினமும் நடக்கின்ற இந்த நிகழ்வைப் பார்த்து, கேலித்தனமாக வயதான பெண்மணியிடம், “அம்மனிதன் ஆரஞ்சுகளைப் பற்றி அப்படிச் சொல்லும் போது, நீங்கள் ஒவ்வொரு முறையும் அதிகமான எடை போட்டு, அதிகமான ஆரஞ்சுகளை கொடுக்கிறீர்களே. ஏன்?” என்று கேட்டான்.
வயதான பெண்மணி புன்சிரிப்புடன், “எனக்கு ஒரு பழம் தினமும் கொடுப்பதற்கு தான் அவர் அப்படி செய்கிறார் என்று எனக்குத் தெரியும்; ஆனால், அவருக்கு அது புரியவில்லை. நான் அதிக எடை போடுவது இல்லை. அவரின் அன்பின் காரணமாக தானாகவே அந்த எடை அதிகமாகிறது” என்றார்.
நீதி: கொடுப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சிறு அன்பான செயலினால் மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதை விட நமக்கு வேறு எதுவுமே அதிக இன்பத்தை அளிக்காது.
நம்முடன் இருப்பவர்கள் எல்லோரிடமும் அன்பும், மரியாதையும் செலுத்தி வாழ்வதில் மட்டுமே, வாழ்க்கையின் இன்பங்கள் அடங்கியுள்ளன. கொடுப்பதில் மட்டுமே; பறித்துக் கொள்வதில் அல்ல. பணத்திலும் அல்ல.










