சைவத் திருத்தல விருட்சங்களில் முதன்மையாக விளங்குவது வில்வ மரம் ஆகும்
வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும்.
சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25
அடி வரை வளரும். இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3
இலைகள் இருக்கும். ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட மரத்தை மகாவில்வம் என்பர். ஆனால்,
மகா வில்வம் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.
வில்வப்பழங்கள் கோடைக்காலத்தில் பழுக்கும் தன்மை கொண்டது. இதன் தோல் பகுதி
வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும்.
வில்வம் காய் பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பானதாகவும்
மாறிவிடும். கோடைக்கால துவக்கத்தின் போது மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து
விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். நாளடைவில் பச்சை
நிறமாக மாறிவிடும்.
வில்வம் வேறு பெயர்கள்
வில்வமானது கூவிளம், சரபீதலம், அலுவீகம், அல்லூரம், ஆலூகம், சட்டாம், சிறிய பலகியம், திரிபத்ர, பில்வம், பூவிதாத, சலய, மாங்கல்ய, சாண்டல்லியம், கற்கடக நிலை மல்லிகம், குசாபி, வில்வை போன்ற பல பெயர்களால் அழைக்கபடுகிறது.
பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்.
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.
வில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.
ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
வில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.











