மாமன்னன் முதலாம் இராசராசனால் கி.பி. 1003ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்று 1010ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப் பெற்றது தஞ்சைப் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) கோயில் எனும் பெரிய கோயில். இக்கோயிலின் கருவறையில் அமைக்கப்பட்டுள்ள இலிங்கத் திருமேனி 3.66 மீட்டர் உயரமுடையது.
240 மீட்டர் நீளமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட பெரும் பரப்பில் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறை நடுவிருக்கச் சுற்றிலும் சண்டீசர், முருகன், விநாயகர், அரசகுருவாய் விளங்கிய கருவூர்த் தேவர் ஆகியோருக்குச் சிற்றாலயங்கள் தனித்தனியே வெளிச்சுற்றில் அமைக்கப்பெற்றுள்ளன. [கருவூர்த்தேவர் சிவபெருமான்மீது பாடிய தோத்திரப் பாடல்கள், பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.]
அம்மன் சன்னிதியும் தனியாய் உள்ளது. பெருவுடையாருக்கு ஏற்ற வகையில் அன்னை பெரியநாயகியும் உயர்ந்தோங்கி அற்புதமாய்க் காட்சியளிக்கின்றார். நந்திக்கு ஒன்றும், ஆடல்வல்லானுக்கு ஒன்றுமாக இரு மண்டபங்கள் உள்ளன. இவையனைத்தையும் சுற்றிக் கட்டப்பெற்ற திருச்சுற்று மாளிகை, இராசராசன் திருவாயில், கேரளாந்தகன் திருவாயில் ஆகியவை கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.
நந்தி மண்டபத்தில் இப்போது காணக் கிடைக்கின்ற பிரம்மாண்டமான நந்தி, நாயக்க மன்னர்கள் காலத்தில் ஒற்றைக் கல்லில் எழுப்பப்பட்டதாகும் (a monolithic sculpture). இந்த நந்தி, 3.65 மீட்டர் உயரமும், 5.94 மீட்டர் நீளமும், 2.59 மீட்டர் அகலமும் சுமார் 25 டன் எடையும் கொண்டதாகும். இராசராசன் எழுப்பியிருந்த நந்தி பழுதுபட்டதால் அது அப்புறப்படுத்தப்பட்டு வராகி அம்மன் சன்னிதிக்கு அருகில் அமைந்துள்ள தென்புற மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் அடித்தளத்திலும் சுவர்களிலும் சோழர் பாண்டியர் விஜயநகரர் நாயக்கர் மராத்தியர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலுக்கு அரசர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பிறரும் கொடுத்த கொடைகளும் செய்த அறங்களும் தெரிய வருகின்றன.










