சீடன் : குருவே ! கடவுளை ஏன் வணங்க வேண்டும் ?
குரு : நமக்கு வந்த துன்பத்தை கடவுளிடம் முறையிட்டுத்தான் போக்க முடியும்.
சீடன் : உலகில் உள்ள மக்களில் பெரும்பாலோர் அவரவர் கடவுளை வணங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் துன்பம் சாகும் வரை தீரவில்லையே, ஏன் ?
குரு : கடவுள் இருக்கும் இடத்திற் சென்று அல்லவா வணங்க வேண்டும். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லையே.
சீடன் : குருவே ! எல்லோரும் கடவுள் இருக்கும் கோவிலுக்கு சென்றுதானே வணங்கி கொண்டு இருக்கிறார்கள்.?
குரு : அன்பார்ந்த சீடா கேள் ! எல்லோரும் நினைப்பது போல உண்மையான கடவுள் இருக்கும் இடம் கற்களால் கட்டப்பட்ட கோயிலில் இல்லை. அவரவர் உள்ளத்தில் ஆகும்.
கடவுள் சிலை இருக்கும் கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வதைப் போல, உடலையும், உள்ளத்தையும் புனிதமானதாக கருத வேண்டும். உடல்நலம் காத்து, உள்ளத்தை கெடுக்கும் களங்கங்களான
1. பேராசை,
2. சினம்,
3. கடும்பற்று,
4. முறையற்ற காமம்,
5. உயர்வுதாழ்வு மனப்பான்மை,
6. வஞ்சம், எனப்படும்
1. காம,
2. க்ரோத,
3. லோப,
4. மோக,
5. மத,
6. மாச்சரியம் ஆகிய அறுகுணங்களை அடியோடு போக்கி
1. நிறைமனம்,
2. பொறையுடைமை,
3. ஈகை,
4. கற்பொழுக்கம், 5. நேர்நிறை உணர்வு,
6. மன்னிப்பு என்ற குணநலப்பேற்றை அடையும் போதுதான் மனிதனுக்கு வந்துற்ற துன்பம் அடியோடு போகும்.
நமது அருந்தமிழ் சித்தர்கள் பரம்பரையினரான திருமூலர், திருவள்ளுவர், பட்டினத்தார் போன்ற எண்ணற்ற ஞானியர்கள் இதைப்பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டுமானால் தக்க குருவை அடைய வேண்டும்.
குருவருள் இன்றேல், திருவருள் இல்லை…
குரு வாழ்க ! குருவே துணை !!
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !!









