மேஷ ராசி
2018-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
குருவின் பார்வை பதிகிறது! கோடி நன்மை பெறுகிறது!
பாசத்தோடு பழகும் மேஷ ராசி அன்பர்களே!
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு வந்துவிட்டது. உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில், குருவின் பார்வை பதியும் அமைப்பில் ஆண்டின் தொடக்க ஜாதகம் அமைகின்றது.
பார்க்கும் குருவால் பலன்கள் உங்களுக்கு அதிகமாகவே கிடைக்கும். செல்வங்களும் ஏராளமாகவே சேரும். சுய முயற்சியால் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்லப்போகிறீர்கள்.
உங்களிடம் பணிவு, துணிவோடு, பேச்சில் கனிவும் இருப்பதால் தான் காரியங்களில் வெற்றி கிடைக்கின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் தைரியகாரன் என்று அழைக்கப்படுபவர்.
உங்களின் தனாதிபதி சுக்ரன் அள்ளிக் கொடுக்கும் குணம் பெற்றவர். அப்புறமென்ன கவலை? அந்த இரண்டு கிரகங்களும் நலம் தரும் விதத்தில் சஞ்சரிக்கிறார்கள். எனவே ஆண்டு முழுவதும் உங்களுக்கு வேண்டிய நற்பலன்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
புத்தாண்டின் (2018) தொடக்கத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கலாம். அஷ்டமத்துச் சனி விலகி விட்டது. நவக்கிரகங் களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு, உங்கள் ராசிநாதன் செவ்வாயோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே குரு-மங்கல யோகத்தோடும் குரு-சந்திர யோகத்தோடும் புத்தாண்டு பிறக்கிறது.
ஒளிமயமான எதிர்காலத்தை எடுத்துரைக்கும் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். 8-ல் புதன் மறைந் திருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த தன லாபத்தைக் கொடுப்பார்.
சுக ஸ்தானத்தில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். எனவே இனி நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். நடக்கும் செயல்கள் நலமாகவே இருக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். தொழிலில் லாபம் குவியும்.
இருப்பினும் உங்களின் சுய ஜாதகப் படி, திசாபுத்தி பலன்கள் மற்றும் பார்க்கும் கிரகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றைக் கொண்டு பலன்களை நாம் காண வேண்டும்.
சுயஜாதகத்தோடு வருடப் பிறப்பு நாள், மாபெரும் கிரகங்களின் மாற்றங்களை அடிப் படையாக வைத்து யோகம் தரும் நேரத்தில் செயல்பட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.










