தொள்ளைக் காது சித்தர் – புதுச்சேரி
“தொள்ளைக் காது சித்தர்” பற்றி புதுச்சேரி சித்தர்களின் பூமி ஆகும். 41 சித்தர்கள் இங்கு இருந்தார்கள். அவர்களின் ஜீவ சமாதி இங்குள்ளது.
இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டு போய் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார்.
அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன் தான் தன் நிலை அடைந்தார். அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை அடைந்து அம்மனை வேண்டினார்.
இடைவிடாது தாயை வணங்கிக் கொண்டேயிருந்தார். அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்கண்டார்.
வாய் பேசா ஊமையானார்.
ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு –யாவற்றையும் உணர்ந்தார்.
அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது.
அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று-
கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார்.
தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார்.
இது அவரின் தினசரி வாடிக்கையானது.
முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக் கொண்டு தங்கினார்.
மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய
சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார்.
தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.
அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை தினமும் இரு வேளையும் வழிபட செல்ல
சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது.
பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின் மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார்.காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார்.
அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்றுஅழைத்து வந்தனர்.
இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.











