கடிகாரம் – மாறிப் போனவைகள் 1970
நம்பினால் நம்புங்கள் ,நான் ஐந்தாவது படித்த நாட்களில் எங்கள் வீட்டில் கடிகாரம் இருந்ததில்லை. எப்படி மணி பார்ப்பது என்று எனக்கு கணக்கை கற்பிப்பது போல சொல்லி கொடுத்திருந்தார்கள்.
அப்பா வீட்டில் இல்லாத சமயங்களில் அவசரத்துக்கு ‘மணி’ பார்ப்பதற்கு நான்தான் போயாக வேண்டும். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளி ஒரு டைலர் வீடு இருந்தது .கதவைத் திறந்ததும் எதிர் சுவரில் தொங்கும் ஒரு மகா பழமையான சுவர் கடிகாரம் அது,
கரும் பிரவுன் வட்ட முகத்தில் முட்கள் எகிறி துரத்திக் கொண்டிருக்க, வால் பகுதியின் செவ்வக கண்ணாடிக்கு கூண்டினுள் மௌனமாய் ஆடும் பெண்டுலம் ஸ்லோ மோஷனில் யோசித்து அசையும்,
ஆனால் ஒவ்வொரு மணிக்கும் அடிக்கும் போதெல்லாம் அதிர்வது போல உதறி கதறி திடுக்கிட வைக்கும்.வைத்திருக்கிறது என்னை பலமுறை,
கடிகாரத்தில் இருப்பது ரோமன் நம்பர்கள் என்பதால் சற்றுத் தள்ளி இருந்து பார்த்தால் லேசில் புரியாது. அதுவும் பழுப்பு ஏறி இருக்கும் அதன் முகப்புக் கண்ணாடி வெளியில் இருப்பவைகளை
பிரதிபலிக்க மணி பார்ப்பதென்பது ஐந்தாவது படிக்கிற குள்ளமான பையனுக்கு சுலபமில்லை.
மணி பார்த்துச் சொல்ல டிர் ர் ர் ரிடும் டைலரிங் மிஷினை நிறுத்தி தன் கண்களை இடுக்கி உமாவின் அப்பாவும் உதவுவார் .ஆக நேரத்தை கண்டறிந்து போய் வீட்டில் சொல்லனும், சொல்வேன்.
கைக்கடிகாரமென்பதை அற்புத பரிசாக நினைத்திருந்த ஒரு தலைமுறை உண்டென்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக.










