ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்-தீராத நோய் தீர்க்கும்
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் செட்டியாபத்து என்ற ஊரில் உள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.
இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுற அமைய பெற்றுள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம் ஒரு வாசலுமாக மூன்று வாசல்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம்.
வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.
பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்’ பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.
இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.
கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம்.
பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.
#Dubai to #Chennai Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது.
கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.
பூஜை கால அட்டவணை
காலசந்தி நடைதிறப்பு – காலை 7 மணி.
பூஜை ஆரம்பம் – காலை 8 மணி.
உச்சி காலை நடைதிறப்பு – பகல் 11 மணி.
பூஜை ஆரம்பம் – பகல் 12 மணி.
இராக்காலம் நடைதிறப்பு – மாலை 5.30 மணி.
பூஜை ஆரம்பம் – இரவு 7 மணி.
ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் முகவரி
————————————–
ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில்
செட்டியாபத்து-628 203
திருச்செந்தூர் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்
தமிழ் நாடு, இந்தியா
தொலை பேசி எண்:04639-250630
IYNTHUVEETU SWAMY THIRUKKOVIL
CHETTIYAPATHU- 628 203
THIRUCHENTHUR- TALUK
THOOTHUKUDI- DISTRIC
TAMILNADU– INDIA
PHONE-04639-250630










