ஸ்ரீ அகோர வீரபத்திரர் திருவடிகள் சரணம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அகோர வீரபத்திரர் சன்னிதி உள்ளது. தக்கன் யாகத்தைச் சிதைக்க சிவபெருமானால் தோற்று விக்கப்பட்டவர் என்ற வரலாறு உண்டு. அகோரமூர்த்தியின் கோலம் பார்க்க பரவசமூட்டும்.
இடக்காலை முன் வைத்து, வலக்கால் கட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கின்ற கோலம் அருமையாக இருக்கிறது.
இவர் தோன்றிய காலம் மாசிமாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூர நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை, இரவு 12.00 மணி எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்டு தோறும் விழா (அதாவது அகோரபூஜை) நடக்கிறது.
வீரபத்திரர் 108 போற்றி
அரனின் கரனே ஐய்யாபோற்றி!
ஆவுடையான் தந்த அருளேபோற்றி!
இழிந்த யாகத்தை இடறினாய்போற்றி!
ஈசன் மகனே இறைவாபோற்றி!
உருத்திரன் சேவகன் ஆனாய்போற்றி!
ஊக்கமும் அருளும் தருவாய்போற்றி!
எட்டுக் கைகள் உடையாய்போற்றி!
ஏறு ஊர்தியான் செல்வனேபோற்றி!
ஐயன் ஆணை முடித்தாய்போற்றி!
ஒன்றான வடிவம் கொண்டு ஒட்டாரை
ஓட்டம் பிடிக்கச் செய்தாய் (10)போற்றி!
ஒளடதத் தடை செய்தாய்போற்றி!
சிவனார் சிகையில் தோன்றினாய்போற்றி!
சீலம் அளித்துக் காப்பாய்போற்றி!
தும்பை சூட அதிர வருவாய் பொருதுபோற்றி!
பஞ்ச ஆயுதம் பஞ்சாய்ப் பறக்க செய்வாய் போற்றி!
வெஞ்சமர் புரிந்த வீரவா போற்றி!
அரக்கர் படையை ஓடச் செய்தாய்போற்றி!
காளிப் படையை முன்னே அனுப்பிக்
கவின்மிகு வெற்றி பெற்றாய் போற்றி!
பைரவர் துணை கொண்டாய்போற்றி!
பாங்காய் வெற்றி அடைந்தாய் (20)போற்றி!
திக்குப் பாலரைத் திக்குமுக்காடச் செய்து
திசையெல் லாம்வெற்றி பெற்றாய்போற்றி!
பகனின் கண்ணைப் பறித்தாய்போற்றி!
பகலவன் பற்களைப் பறித்தாய்போற்றி!
ஒளியால் உலகை ஆளும் கதிரவன்
ஒளியை இழக்கச் செய்தாய் போற்றி!
சந்திரனைக் காலால் தேய்த்தாய்போற்றி!
அக்னி நாவை அறுத்தாய்போற்றி!
அவனது தடக்கை தறித்தாய்போற்றி!
அமரர் வாழ்வை முடித்தாய்போற்றி!
குயிலின் சிறகை ஒடித்தாய்போற்றி!
வசிட்டர் காமதேனு பறித்தாய் (30)போற்றி!
அகத்தியனைக் குகையில் அடைத்தாய்போற்றி!
அமரர் ஆணவம் அழித்தாய்போற்றி!
எமனின் வாகனம் பற்றினாய்போற்றி!
ல்லா வாகனமும் அழித்தாய்போற்றி!
ஏகன் பணியை முடித்தாய்போற்றி!
எமனின் கொடியைப் பற்றியவாபோற்றி!
வருணன் தடக்கை பிணைத்தாய்போற்றி!
மலைகளைத் தகர்த்த மன்னவாபோற்றி!
காடு கொண்ட விருட்சப் படையைப்
பீடு கொன்றைக் கீழடக்கியவாபோற்றி!
முனிவர் வெருவ முடித்தாய் (40)போற்றி!
வேதியரை ஓடியே ஒளியச் செய்தாய் போற்றி!
தக்கன் தலையை அறுத்து ஒழித்து
தகரின் தலையை அளித்தாய்போற்றி!
மாமக மொடியத் தக்கனைத் தடிந்திடு
தமருகன் தந்த தனயனேபோற்றி!
தக்கன் செருக்கைச் சிதைத்து அழித்து
தாட்சாயணி சாபம் முடித்தாய்போற்றி!
காளியைத் துணையாய்க் கொண்டாய்போற்றி!
காக்கும் தெய்வமேபோற்றி!
வேள்வியை அழித்த வெவ்வுருவேபோற்றி!
தோல்வியே அறியாத் தூயவரேபோற்றி!
அட்டமா ஆயுதம் ஏந்தினாய்போற்றி!
இட்ட பணியை முடித்தாய் (50)போற்றி!
தக்கன் அவனின் வேள்விக் களமே
நன்காட்டுக் களமாய் மாற்றினாய்போற்றி!
தண்டமிழ் போற்றும் செந்தமிழ் கடவுளே நாட்டில்போற்றி!
தனித்த கோயில் கொண்டாய்போற்றி!
தரணி எங்கும் நிறைந்தாய்போற்றி!
தமிழர் வாழ்வைக் காப்பாய்போற்றி!
ஆசறு ஆதி வானவனேபோற்றி!
ஆந்திராவில் அழகுற அமர்ந்தாய்போற்றி!
கர்நாடகத்தில் கவினுற இருந்தாய்போற்றி!
கேரளாவில் கோயில் கொண்டாய்போற்றி!
பர்வத மலையுறை பாலனே (60)போற்றி!
காஷ்மீர் மாநிலத்தில் உறைத்தாய்போற்றி!
பேசும் தெய்வம் ஆனாய்போற்றி!
தேவாரப் பண்ணில் மிளிர்ந்தாய்போற்றி!
திருவாசக உந்தியில் அமர்ந்தாய்போற்றி!
வேதத்தில் சிறப்பிடம் பெற்றாய்போற்றி!
நாட்டுப்புற பாடல்களில் நல்லிடம் பெற்றவரேபோற்றி!
சிவனின் திருஉரு பெற்றாய்போற்றி! தீமைகளை அழித்துக்
காப்பாய்போற்றி! நல்இடம் பெற்ற இனியவாபோற்றி!
சூலம் ஏந்திச் சூறாவளியாய் வந்து
ஓலமிட்டு ஒடச் செய்தாய் (70) போற்றி!
சசிமுடி கண்டும் அஞ்சா தவரேபோற்றி!
சக்கரம் அடங்க அதட்டொலி செய்த அற்புத வாயுடைய
வீரபத்ரா போற்றி! சினத் தீயின் வெம்மையே போற்றி!
சிந்தனையில் நிறைந்த சிவஉருவேபோற்றி!
சிவனின் தோற்றம் கொண்டாய்போற்றி!
சீராய் வினைகள் முடித்தாய்போற்றி!
அல்லோரை அழித்து ஒழிப்பாய்போற்றி!
நல்லோரை வாழ வைப்பாய்போற்றி!
கற்கும் பிள்ளைகட் கருள்வாய்போற்றி!
கவலைகள் தீர்த்து அருள்வாய் (80)போற்றி!
கருவைக் காத்து நிற்பாய்போற்றி!
காலம் தோறும் சிறப்பாய்போற்றி!
கணபதியின் கருணைமிகு சோதராபோற்றி!
முருகனுக்கு மூத்த முதல்வனேபோற்றி!
அருள்மிகு வீரபத்ர தெய்வமேபோற்றி!
அடிப்பெருங் கடவுள் ஆனாய்போற்றி!
வினைகள் அறுக்கும் வீரனேபோற்றி!
வீரத்தை வழங்கும் வித்தகாபோற்றி!
நித்தம் அருளைப் பொழிவாய்போற்றி!
உன்னத வாழ்வை அளிப்பாய் (90)போற்றி!
காவல் தெய்வம் ஆனாய்போற்றி!
சைவம் தழைக்கச் செய்தாய்போற்றி!
சிவந்த செம்பொற் கழலடிபோற்றி!
வம்சம் செழிக்கச் செய்வாய்போற்றி!
வளமான வாழ்வு அளிப்பாய்போற்றி!
நாமகள் நாசியை அரிந்தாய் போற்றி!
நானிலம் சிறக்கச் செய்வாய்போற்றி!
திண்மை நிறைந்த தோளாய் போற்றி!
தீமை மனத்தைத் தீய்ப்பாய்போற்றி!
உலகம் உய்யச் செய்வாய் (100)போற்றி!
உத்தமத் தெய்வமே பத்திராபோற்றி!
தேவரை விரட்டிய தேவரேபோற்றி!
தேயமெலாம் போற்றும் வீரரேபோற்றி!
மாண்டவர்க்கு மீண்டுயிர் கொடுத்தவரேபோற்றி!
மீண்டும் போரிட்ட புத்திராபோற்றி!
மங்கையர் மாங்கல்யம் காப்பாய்போற்றி!
மாண்புறு தெய்வமாய் ஆனாய்போற்றி!
போற்றி போற்றி வீரபத்திரரேபோற்றி!
வீரபத்திரர் விரதத்தை, சித்திரை மாதம், முதல் செவ்வாய்க்கிழமை தொடங்குவார்கள். அன்று பூரண கும்ப கலசத்தில் வீரபத்திரர் திருவுருவை அமைத்து அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை செய்து பூஜை செய்ய வேண்டும். அன்று முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை உபவாசம் முடித்து கொள்ள வேண்டும்.
பிறகு இறைவனுக்கு படைத்த உணவை உண்ணுதல் வேண்டும். இந்த விரதத்தை மேற்கொண்டதால் பிரம்மன் வீரபத்திரருக்குத் தோச்சாரதியாகும் பேறு பெற்றான்.
இந்திரன் கற்பக நாட்டு அரசுரிமையைப் பெற்றான். வேதியர்கள் மெய்ஞ்ஞான நிலை, முக்தி நிலை அடைந்தனர்.
இந்த விரதத்தின் போது செந்நிறமுடைய மலர்கள், சந்தன உருண்டைகள், வெண்ணெய், வெற்றிலை, வில்வ தலங்களால் வீரபத்திரர் போற்றித் துதிகளைக் கூறி அர்ச்சனை செய்தால் சிறப்பாகும். காரமான புளிசாதத்தை நைவேத்தியம் செய்து தானம் அளித்தால் பகை நீங்கும். குழந்தைப் பேறு உண்டாகும். உடன் பிறந்தோரிடம் ஒற்றுமை ஏற்படும்.
நல்வழியில் நடக்கும் மனஉறுதி கிடைக்கும். அகோர வீரபத்திரருக்கு விரதமிருக்க விரும்புவோர் மாசி மாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூரம் நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையன்று விரதம் தொடங்க வேண்டும்.
பெருந்துறையில் சித்திரை மாதம் செவ்வாய்தோறும் வீரபத்திரர் விரதம் இருக்கின்றனர்.
மகாஅஷ்டமி விரதம்:
ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை அஷ்டமியில் நோற்கப்படும் விரதம், மகா அஷ்டமி விரதம் எனப்படும். இது தட்ச யாகத்தை அழித்த பத்ரகாளியையும், வீரபத்திர மூர்த்தியையும் குறித்து நோற்கப்படும் விரதமாகும்.
இந்நாளில் தும்பை, வலம்புரி முதலிய வெண்மலர்களாலும் வெண்பட்டாலும் அலங்கரித்து மகாநிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.
வீரபத்திரர் தலங்கள்
திருப்பறியலூர்:-
தட்சனின் யாகத்திற்கு வந்தவர் அனைவரின் தீமைகளையும் பறித்துக் கொண்டதால் பறியலூர் என்றழைக்கப்படலாயிற்று. மாமனின் தலையைப் பறித்ததால் மாமன் பறியல் என்றும், தட்சன் வேள்வி செய்த தலமாதலால் தட்சபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
அட்டவீரட்டத் தலங்களில், எம்பெருமான், தானே வராமல், தனது கண்ணில் இருந்து தோன்றிய வீரபத்திரரை அனுப்பி, தட்சனுக்குப் பாடம் புகட்டிய தலம் இது.
மயிலாடுதுறை – பொறையார் சாலையில் செம்பொனார்கோவில் என்ற திருத்தலத்திற்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. தீமைகளை அகற்றும் பரிகாரத்தலம் ஆனதால், மேற்குத் திசை நோக்கியபடி வீரட்டேசுவரர் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆலயத்திற்குத் தெற்கே உள்ள உத்தரவேதி தீர்த்தமே, தட்சன் செய்த வேள்விக் குண்டம் என்றும் கூறுவர்.
பெரும்பேர் கண்டிகை:-
சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் இது. ஊருக்குள்ளே மையமாக, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வீரபத்திரர் திருக்கோயில். வடமேற்கு முனையில் பத்திரகாளி சன்னதியும் உள்ளது.
வீராவாடி:-
திருவாரூருக்கு வடக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பன், அம்பாசுரனைக் கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட, அதனை விரட்டிடவே சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியதாகத் தல வரலாறு கூறுகிறது.
மூலவராக நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார். வீரபத்திரர் அடிபதித்த தலம் என்பதால் வீராவடி என்று அழைக்கப்படுகிறது.
பெருந்துறை:–
கும்பகோணம் – காரைக் கால் வழியில் நாச்சியார் கோவில் அருகில் இரவாஞ்சேரியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் வீரபத்திரசாமி கோவில் உள்ளது.
இத்தலத்து வீரபத் திரர் செவ்வாய் தோசத்தைப் போக்கவல்லவர் என்றும், நேர்மையான வழியில் வாழ்பவர்களுக்கு துணையாக இருந்து காப்பவர் என்றும் போற்றப்படுகின்றார்.
மதுரை:-
மீனாட்சி யம்மன் கோவிலில் அகோர வீரபத்திரர் சன்னிதி உள்ளது. தக்கன் யாகத்தைச் சிதைக்க சிவபெருமானால் தோற்று விக்கப்பட்டவர் என்ற வரலாறு உண்டு. அகோரமூர்த்தியின் கோலம் பார்க்க பரவசமூட்டும்.
இடக்காலை முன் வைத்து, வலக்கால் கட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கின்ற கோலம் அருமையாக இருக்கிறது. இவர் தோன்றிய காலம் மாசிமாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூர நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை, இரவு 12.00 மணி எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்டு தோறும் விழா (அதாவது அகோரபூஜை) நடக்கிறது.
திருவெண்காடு:-
சீர்காழிக்குத் தென்கிழக்கில் 1 கி.மீ தொலைவில் அகோர மூர்த்தி கோவில் உள்ளது. சிவனின் கோபத்தில் உதித்தவர் என்பதால் திருவெண்காடு வீரபத்திரரை நமஸ்தே ருத்ர மன்யவே என வணங்க வேண்டும் என்கிறார்கள்.
அம்மாபேட்டை ஸ்ரீஅகோர வீரபத்திரசாமி:-
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள வீரபத்திர சாமிக்கு எழுமிச்சை மாலை சாற்றி வழிபட்டால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினை கள் அகன்று அவர்களுக்கு நல் வாழ்வு கிடைக்கும். வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வந்தால் திரு மணம், புத்திர (குழந்தை) பாக்கியம் கிடைக்கும்.
நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்தால் வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். இந்த பூஜையில் வீடு கட்டுபவர்கள் மணல் வைத்து பூஜை செய்து அதை கட்டிடத்தில் வைத்து கலந்து கட்டுவது இன்று வரை நடந்து வருகிறது.
பில்லி சூனியத்தை நீக்கும் அகோர வீரபத்திரர்:-
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. பில்லி, சூனியம் விலக பக்தர்கள் இங்குள்ள அகோர வீரபத்திரரை வணங்கி செல்கிறார்கள்.
பயம் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கவும் இவரை வழிபட்டு செல்கிறார்கள். குடும்ப ஒற்றுமையை அளிக்கும்சேலம் குகை வீரபத்திரர்:- சேலம் குகையில் உள்ள நரசிங்கபுரம் தெருவில் வீரபத்திரசாமி கோவில் உள்ளது.
ஜங்கம குலத்தின் குல தெய்வமாக விளங்கும் வீரபத்திரர் இங்கு நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். வீரபத்திரருக்கு மொச்சைப்பயிறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை படைக்கின்றனர்.
குடும்ப ஒற்றுமைக்கும், பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேரவும் வீரபத்திரரை வேண்டிக் கொண்டால் வேண்டுதல் பலித்ததும் மூங்கில் இலைகளால் வீரபத்திரருக்கு மாலை அணிவிக்கிறார்கள்.
கயத்தாறு வீரபத்திரர் கோவில்:-
நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளத்தில் அமைந்துள்ளது வீரபுத்திரசுவாமி கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவதுதான்.
மேலும் ஆண்கள் மட்டுமே சுவாமிக்கு பூஜைகள் உள்பட பல்வேறு பணிவிடை களை செய்கின்றனர். பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.
தென்காசி கோவில் :-
தென்காசி கோவிலில் தனியாக 2 கல்தூணில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில் களிலேயே இங்குள்ள வீரபத்திரர் சிலைதான் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வீரபத்திரருக்கு தனியாக எந்த வழிபாடும் நடத்தப்படுவதில்லை.
திருவானைக்காவல் வீரபத்திரர்:-
எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற இங்குள்ள வீரபத்திரரை வழிபடுகின்றனர். தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும், வெண்பட்டாலும் இவரை அலங்கரித்து வழிபடுகின்றனர்.
திருஷ்டி நீக்கும் ஆரணிவீரபத்திரர்:-
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் பகுதியில் ஆற்றங்கரை அருகே குழந்தைபேறு அருளும் ஸ்ரீபெரிய நாயகி புத்திர காமேட்டீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்குள்ள வீரபத்திரரை வழிபட்டால் சிருஷ்டி உபாதை சத்ரு உபாதைகள் மறையும், மாசி மாதம் இவருக்கு உகந்த மாதமாகும். இந்த கோவிலில் காணும் பொங்கல் அன்று சுற்றுபடி திருவிழா நடைபெறும்.
நிலம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க இத்தல வீரபத்திரரை வேண்டி தரிசிக்கின்றனர்.











