சுபிட்சம்அருளும் சுக்கிரவாரப் பிரதோஷம்.
சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே
சிறப்பு வாய்ந்தது. 13 ம் தேதி சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம்
செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன் தொல்லையெல்லாம் தீரும்.
கவலைகளெல்லாம் பறந்தோடும் என்பது உறுதி.
☘
சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம்
தரிசிக்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே… பிரதோஷ பூஜை! இந்த நாளில்…
சுக்கிரவாரம் என்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும்
சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
☘
இந்த பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். வில்வமும்
அரளியும் mசார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் அரளி மாலையும் வழங்கி
வழிபடுங்கள். பிரதோஷ வேளையில், சிவபெருமானை வணங்குவது மிகுந்த பலன்களை
வழங்கவல்லது.
☘️
சித்திரை மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு நீர் மோரும், தயிர் சாதமும்
நிவேதனமாக படைத்து பின்னர் சிறு சிறு பிள்ளைகளுக்கு அவற்றை தானம் கொடுப்பதனால்
மூலம், பவுத்திரம், எலும்பு தேய்மானம் முதலிய நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.
சுக்ரவார பிரதோஷம்.
‘சிவனை வழிபடுவதே இந்த வாழ்வின் பயன்’ என்பர் சிவனடியார். அதுவும் பிரதோஷ நாளில் சிவனை வணங்குவது மிகவும் சிறப்புமிக்கது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததை நினைவூட்டும் பிரதோஷ வழிபாடு,
நம் வாழ்வோடு நெருங்கி உணரவேண்டிய ஒரு வழிபாடு. மரணமில்லாப் பெருவாழ்வினை அடைய, அமிர்தம் வேண்டி தேவர்கள் பாற்கடல் கடைந்தனர்.
மரணமில்லாப் பெருவாழ்வு அருளும் ஈசனை அவர்கள் அறிந்திருந்தும், மார்க்கண்டேயரைப் போல அவரைச் சரணடைந்து மரணத்தை வென்றிருக்கலாம். ஆனால், அவர்கள் அதை விடுத்து வேறு வழி தேடினர்.
பேராசையின் விளைவாக ஆலகாலம் பிறந்தது. துன்பம் சூழ்ந்தபோது அவர்கள் ஈசனை நாடினர். ஈசன் ஓடிவந்து அவர்களுக்கு உதவினான்.
☘️
பிரதோஷ வழிபாட்டின் சிறப்பே ‘துன்பத்திலிருந்து விடுதலையாவதுதான்.’ தேவர்களைப் போலவே நாமும் அன்றாடம் ஆசைகளினால் அல்லல்படுகிறோம். துன்பம் ஒரு விஷம்போல நம்மைச் சூழ்ந்து பயமுறுத்துகிறது. அதிலிருந்து நாம் வெளியேற நமக்குக் கிடைத்திருக்கும் அருமருந்தே பிரதோஷ வழிபாடு.
☘️
ஈசன் தயாபரன். அவர் குறித்து திருமூலர், ‘மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்’ என்பார். தேவர்களுக்காக நஞ்சை உண்ட தேவன் சிறிது நேரம் மயங்கியிருந்தார். உண்ட விஷம் வயிற்றுக்குள் செல்லாதவாறு அன்னை உமையவள் கழுத்தோடு நிறுத்தி, அவரை நீலகண்டர் ஆக்கினாள். இந்தப் பிரபஞ்சத்து உயிர்கள் எல்லாம் ஆலகாலத்திலிருந்து தப்பின.
தேவர்கள் மயக்கமுற்ற ஈசனைக் கண்டு வருந்தினர். அவர் மீண்டும் மயக்கம் தெளிந்து எழவேண்டும் என்று உண்ணா நோன்பிருந்தனர். அன்று ஏகாதசி திதியாக இருந்ததால் அவர்களின் விரதம் பலித்தது. மறுநாள் துவாதசி அன்று அவர்கள் பாரணை செய்து விரதம் முடித்தனர்.
மறுநாள் திரயோதசி. ஈசன் தன் யோக நித்திரை போன்ற மயக்கத்தில் இருந்து மீண்டார். பாற்கடலை மீண்டும் கடைய உத்தரவிட்டார். அஷ்ட ஐஸ்வர்யங்களும் வந்தது. ஈசன் மனம் மகிழ்ந்து, அந்த நாளின் மாலையில் ஆனந்தக் கூத்தாடினார். அதுகண்டு தேவர்கள் அனைவரும் sஅவரைத் துதித்தனர். அந்த வேளையே பிரதோஷமாக போற்றப்பட்டது.
☘️
நம்பியவருக்கு ஈசன் அருளும் வேளை பிரதோஷ வேளை. தோஷங்கள் யாவும் அண்டும் வேளையில், நாம் ஈசனின் சந்நிதியில் இருக்க வேண்டும் என்பதே இந்த வழிபாட்டின் நோக்கம்.
ஒரு மாதத்தில் வரும் இரு பிரதோஷ தினங்களிலும், சிவ ஆலயங்களுக்குச் சென்று நந்தி தேவரை முதலில் வழிபட்டு, பின் ‘சோம சூக்த பிரதக்ஷணம்’ செய்து, பின் நந்தியின் கொம்புகளின் வழி ஈசனை வழிபட வேண்டும். நந்தி, தர்மத்தின் வடிவம்.
அதனால்தான் ஈசனை வழிபடும்போது தர்மத்தின் பின் நின்றே பேசவேண்டும் என்பது அதன் தத்துவம். ஈசனையும் நந்தியையும் அர்ச்சிக்க உகந்தவை வில்வ இலைகள். அந்த வில்வ இலைகளைக் கொண்டு பிரதோஷ நாளில் வழிபட வேண்டும்.
‘த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்கிறது வில்வாஸ்டகம். அதாவது ‘மூன்று ஜன்மங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஒரு வில்வ இலையை பக்தியோடு பரமனுக்குப் படைப்பதன் மூலமே தீர்ந்துவிடும்’ என்பது இதன் பொருள்.
‘ஈசன், வில்வ இலைகளையும் வில்வக் காடுகளையும் விரும்புகிறவன்’ என்று புராணங்கள் கூறுகின்றன.
☘️
வில்வம் அன்னை மகாலட்சுமியின் அம்சம். பாற்கடலில் அன்னை மகாலட்சுமி அவதரித்தபோது, அவரின் திருக்கரங்களில் வில்வ இலை இருந்தது என்று வராக புராணம் சொல்கிறது.
வில்வ இலைகள், ‘இச்சா சக்தி’, ‘கிரியா சக்தி’, ‘ஞான சக்தி’ ஆகியவற்றைத் தன்னுள்ளே கொண்டவை. சௌபாக்கிய சஞ்சீவினி என்னும் நூலும், காளிகா புராணமும் மகாலட்சுமித் தாயார் வில்வக் காட்டில் தவம் செய்பவள் என்று சொல்கின்றன.
எனவே வில்வத்தில் அன்னை மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்றே நம்பப்படுகிறது. திருவந்திபுரத்திலும், சென்னை ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலும் தாயாருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
இத்தகைய மகிமை நிறைந்த வில்வ இலை கொண்டு ஈசனை பிரதோஷ தினத்தில் வழிபடுவது மிகவும் பலன் தரும். பிரதோஷம் வரும் மாதம், கிழமை ஆகியனவற்றைக்கொண்டு அதை வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஒரு தனிச் சிறப்பும் பலனும் கூறப்படுகிறது. இன்று நிகழும் பிரதோஷம், ‘சுக்ர வார பிரதோஷம்’ என்று போற்றப்படுகிறது. சுக்ரன் என்றால் வெள்ளி. வெள்ளிக்குரிய இந்த நாளில் வரும் பிரதோஷம் ஆதலால் சுக்ரவாரப் பிரதோஷம் எனப்படுகிறது.
☘️
வெள்ளிக்கிழமைகள், அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாள். பிரதோஷ காலத்தில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி மற்றும் சிவனுக்கு நிகழும் அபிஷேகங்களைக் கண்டு வழிபடுவது சிறப்பாகும்.
இன்று ஈசனுக்கு, மகாலட்சுமியின் அம்சமான வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்ய, கடன் தொல்லைகள் நீங்கும். செல்வ வளம் சேரும் என்று நம்பப்படுகிறது. இன்று ஈசனுக்கு பால் சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்க, சகல பாவங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.











