முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் நேரம் எப்போது?
முழுவிபரம் இதோ…!!
முருகப்பெருமான் திருக்கல்யாணம்…!!
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கந்தசஷ்டி விரதத்தின் தொடர்ச்சியாக அக்டோபர் 31ஆம் தேதி ( இன்று) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் சகல முருகன் ஆலயங்கள் மற்றும் பல ஆலயங்களில் நடைபெறவுள்ளது.
முருகப்பெருமான் திருக்கல்யாணம் :
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் முருகன்-தெய்வானை திருமண வைபவம் நடைபெறும்.
கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.
இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடக்கிறது.
மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.
கிராமங்களில் திருவிழாவின் போது கன்னி பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். அதுபோல திருச்செந்தூர் தலத்தில் முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடைபெறும்.
கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.
திருப்பரங்குன்றம் : அக்டோபர் 31ஆம் தேதி (இன்று) சீர்தட்டு அழைத்தல், திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
திருச்செந்தூர் : அக்டோபர் 31ஆம் தேதி ( இன்று) இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.
பழனி : அக்டோபர் 31ஆம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும்.
சுவாமிமலை : அக்டோபர் 31ஆம் தேதி (இன்று) இரவு 7.00 மணிக்கு முருகன், தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
திருத்தணி : அக்டோபர் 31ஆம் தேதி (இன்று) காலை 10.00 மணிக்கு கல்யாண உற்சவருக்குத் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும்.
பழமுதிர்சோலை : அக்டோபர் 31ஆம் தேதி (இன்று) காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
திருமணம் ஆகாதவர்கள், தெய்வ திருமணங்களை கண்டு வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குறிப்பாக தெய்வ திருமணங்களை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்கின்றனர்.











