அபிஷேகத்தின் போது லிங்கத்தில் நண்டு வெளிப்படும் அதிசயக் கோயில்.
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூரிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருத்தேவன்குடி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்.இக் கோயில் நண்டாங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்திரனின் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன், நண்டாக இந்த தலத்துக்கு வந்து சிவனை பூஜித்தான்.
அந்த நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்தக் குளத்தில் பூத்த தாமரை மலரை பறித்து, கோமுகம் வழியாக உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது.
இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர் சூட்டி வழிபடுவது வழக்கம் .தனக்கு முன்னர் ஈசனுக்கு மலர் சூட்டப்பட்டிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு கண்காணித்தான்.
அப்போது நள்ளிரவில் நண்டு ஒன்று தீர்த்த குளத்திலிருந்து தாமரை மலரை பறித்துக் கொண்டு கோமுகம் வழியே ஈசனிடம் செல்வதை கண்டு மிகவும் கோபம் கொண்டான் இந்திரன்.
இந்த நிகழ்வைக் கண்டு கோபம் கொண்ட இந்திரன்,லிங்கத்தின் மீதேறி தாமரை மலரை சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்டிக் கொன்றான். வெட்டு சிவபெருமான் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த கந்தர்வனை காப்பாற்ற நினைத்த சிவபெருமான், ,லிங்க திருமேனியின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த கந்தர்வனை தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டார்.
இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தர்வனே நண்டு உருவில் தன்னை பூசிப்பதை இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தனது தவறுக்கு வருந்தினான். அதனால் இந்த கோயிலுக்கு திருந்த தேவன் கொடி என்ற பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது .
கற்கடம் என்றால் நண்டு .நண்டின் பூசைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோயிலில் உள்ள ஒரு கற்தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது .கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டு தழும்புகள் காணப்படுகின்றன.
சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசுவின் பாலை கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால் நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கிறது .
இந்தத் தலத்தின் இறைவி அருமருந்தம்மை தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அம்மனுக்கு சாத்தப்படும் எண்ணெய் வேண்டுவோருக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அம்மனுக்கு சாத்தி தரப்படும் இந்த எண்ணெய் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாக உள்ளது.
சந்திரன் இந்த தலத்தில் இறைவனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றான். ஆகையால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருத்தேவன் குடியாகும். அனேகமாக அனைத்து சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் அதில் சந்திரன் நின்ற கோலத்தில் காணப்படுவார்.
இந்த தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி தருவது விசேஷம்.










