புரட்டாசி கடைசி சனிக்கிழமை பூஜை செய்யும் முறை.
செல்வங்கள் நிலைக்கச் செய்யும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை பூஜை செய்யும் முறை.
புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாள் மாதம். இந்த மாதம் முழுவதுமே அசைவம் தவிர்த்து காக்கும் கடவுளான விஷ்ணுவை நினைத்து விரதம் இருப்பது நன்று. இயலாதவர்கள் புரட்டாசி கடைசி சனிக்கிழமையாவது வீட்டில் பெருமாளுக்கு படையலிட வேண்டும்.அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை நாளை அனுஷ்டிக்கப்படுகிறது .
அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்து கோலமிட வேண்டும். வாசனைப் பூக்கள் துளசி கொண்டு பெருமாளையும் தாயாரையும் அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையில் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்கலாம். விநாயகரை தொழுது குலதெய்வத்திடம் வேண்டியது நிறைவேற பிரார்த்தனை செய்திட வேண்டும்.
ராகு காலம், எமகண்டம் நேரம் தவிர்த்து நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜை செய்வது சிறப்பான பலன்களை தரும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை இவைகளை நைவேத்தியமாக படையலிடலாம்.அரிசிமாவு, வெல்லம் கலந்த மாவில் சிறிது இளநீர் விட்டு பிசைந்து தீபம் செய்து அதில் சுத்த நெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும் . அவரவர் வழக்கப்படி பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காய் சேர்த்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். அத்துடன் துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் என கலந்த சாதங்கள் செய்வதும் சிறப்பு. சனிக்கிழமைகளில் பெருமாளை துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது கூடுதல் சிறப்பு. இப்படி செய்வதால் குலதெய்வத்தின் அருள் கிட்டும். முன்வினைப் பாவங்கள் விலகும். குலதெய்வத்தின் மூலம் செல்வங்களும் வந்து சேரும்.











