ஆன்மிகம் சார்ந்த பழக்கவழக்கங்கள்
காலையில் கண் விழித்தவுடன் தன் முகம் அல்லது வலது உள்ளங்கை ஆகியவற்றை முதலில் பார்க்க வேண்டும்.
அதிகாலையில் முதலில் கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்த பின்னரே தலைவாசலை திறக்க வேண்டும்.
பெண்கள் காலையில் முதலில் வீட்டு கதவை திறக்கும் பொழுது ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி என்ற அஷ்டலட்சுமிகளின்
பெயரை உச்சரித்தபடி திறந்தால் அவர்கள் வீட்டிற்குள் வருவார்கள் என்பது ஐதீகம்.
வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவங்களுக்கு மஞ்சள் கொடுப்பதால் பாவங்கள் விலகி பாக்கியங்கள் பெருகும்.
வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்கினால் சகல செல்வங்களும் சேரும் என்பது நம்பிக்கை.
பூஜை செய்த பழங்களை நகம் படாமல் உரிக்க வேண்டும். அரைத்த சந்தனத்தை நகத்தால் வைத்தல் கூடாது. பூவை நகத்தை பயன்படுத்தி சுவரிலோ, தரையிலோ வைத்து துண்டிக்கக்கூடாது.
வீட்டிற்கு பின்புற வழியாக வெளியே போவதை தவிர்ப்பது நல்லது. தாட்சாயணி தேவி அப்படி செய்ததால், தட்சனின் யாகமும் அழிந்து, தன் உடலையும் விட்டாள். மக்களுக்கு அதை உணர்த்தவே அவ்வாறு செய்தாள்.
பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், பலகை, படுக்கை, ஆகியவற்றை தக்க காரணமில்லாமல் உபயோகிப்பதால் பாவம் சேரும்.
கைகளால் பரிமாறப்படும் அன்னம், நெய், உப்பு ஆகியவை நல்ல பலனை அளிக்காது.
லட்சுமி கடாட்சம் பெற்ற தங்கம், வெள்ளி பாத்திரங்கள் ஒருவருக்கு சீராக கிடைத்துள்ள நிலையில், அவற்றை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது. அவர்களது காலத்திற்குப் பின்னரே
மற்றவர்களுக்கு அவை சேர வேண்டும் என்ற நியதி பல குடும்பங்களில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. மற்றவருக்கு தர வேண்டும் என்றால் வேறொன்றை வாங்கிக் கொடுக்கலாம்.
கிழக்கு நோக்கி சாப்பிட்டால் ஆயுள் விருத்தி. மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வ விருத்தி. தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் வளரும். வடக்கு நோக்கி உணவு அருந்துவதை சாஸ்திரங்கள் அனுமதிக்கவில்லை.
கோலம் போடப்பட்ட வீட்டுக்குள் துர்தேவதைகள் நுழையாது. எனவே காலை, மாலையில் சாணம் தெளித்து கோலம் போடும் வழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
திருமணமானவர்கள் அரக்கு, பச்சை, காவி, போன்ற நிறங்களில் வேட்டி அணியலாம்.
பிரம்மச்சாரிகள் வெள்ளை நிற வேட்டி அணியவேண்டும். யாரும் வெறும் வேட்டியை மட்டும் அணியக்கூடாது. மேலே அங்க வஸ்திரம் அல்லது துண்டு சேர்த்தே அணியவேண்டும்.










