எங்கோ காசிக்குப் பக்கத்தில் ஒரு ஜோதி உதயமாயிற்று. அன்றுஅதன் பெருமையை யாரும் உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த ஜோதி பெரிதாக வளர்ந்து, ஜோதிமயமாக உயர்ந்து நின்ற அண்ணாமலைக்கு வந்து சேர்ந்தது இங்குள்ள மக்களின் பெரும் புண்ணியமே ஆகும்.
அந்த ஜோதிதான் “கடவுள் குழந்தை”யாகப் பொங்கிப் பொங்கிச் சிரிக்கும் சிரிப்புடன் நம்முடனே விளையாடும் யோகி ராம்சுரத்குமார்ஜி மகராஜ்.
புன்னை மரத்தின் நிழலிலே, அந்தத் தவயோகியை முதலில் நான் கண்டேன். அவருடைய நயனங்களிலே சுடர்விடும் ஜோதியையும் கண்டேன். உலகையெல்லாம் துச்சமாக, அதன் மாயைகளுக்கெல்லாம் எட்டாத தூரத்தில் அந்த ஜோதி கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளி நிற்பதை நான் உணர்ந்தேன். என் தாயோ, என் தந்தையோ, என் முன்னோர்களோ, யாரோ செய்த தவம் எனக்கு இப்படிப் பலித்திருக்கிறது; இது எனது பாக்கியமாகும் .
அவரை அடைந்தால் அவர் அருள் பெற்று வாழ்வோம், வாழ்வோம், முக்காலும் வாழ்வோம் என்பது திண்ணம்.
குருதேவர் துதி
சின்னக் குழந்தையாய்த் தோன்றுவான் – மனதில் தெய்வக் குழந்தையாய் ஊன்றுவான் எனனென்னவோ பல பாடல்கள் – ஞானம்
எண்டிசை வீசுரை யாடல்கள்
கண்ணிலே பேரொளி வீசுதே – அதைக் காண்பதற்கே மிகக் கூசுதே
எண்ணரும் ராம்சுரத் யோகியாம் – தந்தை
ஈசனைக் காட்டும் நல் தேகியாம்
வல்ல பிணிகளை ஓட்டுவான் – என்றும்
வாதனை தவிர்த்தின்பம் ஊட்டுவான்
எல்லையில் அன்பெனும் ஜோதியாம் – நமக்
கேற்றம் தருவதில் ஆதியான்
மெல்ல வரும் தென்றல் போன்றவன் – ஞான மெய்ப்பொருள் காட்டிடும் சான்றவன்
சொல்லரும் வேத மெய்த் தந்தையாம் – ராம்
சுரத் குமாரென்னும் எந்தையாம்.










