“காட்டாற்று வெள்ளத்தை ஓர் அணைக்கட்டாகக் கட்டி கால்வாயில் விட்டு பாசனவசதி செய்தால் எவ்வாளவு நன்றாக இருக்கும்? அந்த மாதிரி மனிதனின் ஆற்றலை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டுமானால் இறைநிலையை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
இறைநிலை இல்லாத மனித வளம் என்பதோ மனித செயல் என்பதோ இல்லை. இறையாற்றல் இல்லாத இடமே இல்லை. இறையாற்றல் இல்லாத அசைவே இல்லை. அவனன்றி அணுவும் அசையாது என்பது தான் உண்மை.
அப்படியானால் உடலுக்குள்ளாகவும் அந்த ஆற்றல் இருக்கத்தானே வேண்டும். உடலுக்குள்ளாக இறைநிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வேறு எங்கே போய் கண்டுபிடிப்பது? என்ற சிந்தனையைச் செலுத்த முடியுமேயானால் வெகு சீக்கிரத்தில் இறைநிலையை பற்றி உணர்ந்து கொள்ள முடியும்.
அதற்கான வழி இறைநிலையை உணர்ந்த குருவின் மூலம் கிடைக்கும் தத்துவ விளக்கங்களை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு, முறையான அகத்தவப் பயிற்சியாகிய குண்டலினி யோகமும் தற்சோதனை என்கிற அகத்தாய்வு பயிற்சியும் (Introspection) கற்று பயன் கொள்ள வேண்டும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * *
“உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற
முயற்சிக்கு இந்த உடல் தேவைப்படுகிறது”.
“மன அலைச்சுழல் விரைவை குறைத்து நுணுக்கமான அமைதி நிலைக்கு மனதை பழக்க, மனம், உயிர், மெய்(Truth) ஆகிய மறைபொருட்களை உணர்ந்து கொள்ள உயிர்ச்சக்தியின் மேல் மனம் வைத்துப் பழகும் எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி தவத்தால் தான் சித்தியாகும்.”
பழிச்சுமை கழி:
“ஐயுணர்வின் வயம் ஏற்ற ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி மிக எளிதில் கழித்திடலாம்;
தெய்வ நிலையுடன் அறிவைச் சேர்த் தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால் உலகீர் உடனே என் தொடர்பு கொள்வீர்”.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.










