கிருஷ்ணரைக் காண வழிகாட்ட முடியுமா?
ஒரு பக்தர் ஸ்ரீ கிருஷ்ணரைத் தன் இஷ்ட தெய்வமாகக் கொண்டிருந்தார். அவரைக் காண விரும்பினார். அதற்காக வழிகாட்டுதல்
பெற விரும்பினார். “கிருஷ்ணரைக் காண உதவ முடியுமா?”- இவ்வாறு தான் சந்தித்த சில பக்தர்களைக் கேட்டார்.
அவர்கள் “தாங்களும் அவரைக் கண்டதில்லை. எனவே அவருக்கு வழி காட்ட முடியாது” என்று கூறினர். பிருந்தாவனத்தில் சில
பக்தர்கள் இருக்கின்றனர். ஒருவேளை அவர்களிடம் இதுபற்றி சரியான யோசனை பெறலாம் என்று அறிவுறுத்தினார். கிருஷ்ண
பக்தர் தன் தேடலை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினார். அந்த நோக்கத்தோடு நேராகப் பிருந்தாவனம் சென்றார்.
அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் பல கோவில்களுக்கும் சென்றார். அங்கே பூசாரிகளும், பக்தர்களும் இருந்தனர். “கிருஷ்ணரைக் காண வழிகாட்ட முடியுமா?” என்று அவர்களிடம் கேட்டார். தாங்களே கிருஷ்ணரைச் சந்தித்ததில்லை என்று அவர்கள் ஒரே குரலில் கூறினர். எனவே அவரது தேடலில் அவர்களாலும் உதவ முடியவில்லை. அவர்கள் அவரைக் கோகுலம் செல்லும்படி கூறினர்.
ஒரு வேளை அங்கே அவர் கிருஷ்ணரைக் காணும் முயற்சியில் வெற்றி பெறலாம் என்று நினைத்து கோகுலத்திற்கு சென்றார். ஆனால் அவரது நோக்கம் நிறைவேறவில்லை. அங்கிருந்தவர்கள் கூறியபடி அவர் கோவர்த்தனம், மதுரா, துவாரகை இன்னும் பிற இடங்களுக்கும் சென்றார்.
கிருஷ்ணரின் கோவில்கள் இருந்த இடமெல்லாம் சென்றார். பகவானின் பக்தர்கள் வசித்த இடமெல்லாம் தேடித்தேடி கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் அவர் சுற்றி விட்டார். ஆனால் எதுவும் பயனில்லை.
பக்தர் விரக்தியினால் பீடிக்கப்பட்டார். அடுத்து என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. பெரும் மனவருத்தத்துடன் இறுதியாகத் தனிமையான ஓர் இடத்தை நாடி ஒரு கல்லின் மேல் அமர்ந்தார். “பகவானே, உன்னைத் தேடி நான் ஒய்ந்து விட்டேன். உன்னை எங்கே காண்பேன்? உன் தரிசனம் எப்படிப் பெறுவேன்? பகவானே. நான் உன் பக்தன். உன்னைக் காணத் தீவிரமான ஏக்கம் கொண்டிருக்கிறேன். இதை நீ அறிவாய். உன் தெய்வீகக் காட்சியைத் தருவாய்” என்று துயரத்துடன் கூறினார்.
அப்பொழுது ஒரு வினோதம் நிகழ்ந்தது. அவருடைய இதயத்தில் இருந்தே ஓர் அழகான, இனிய குரல் எழுந்தது: ”குழந்தாய், நான் உன் இதயத்திலேயே அமர்ந்திருக்கின்றேன். திரும்பி என்னைப் பார். ஜொலிக்கும் என் உருவத்தைப் பார். என்றென்றும் பேறு பெற்றவனாக ஆவாய்.”










