ஞான உபதேசப்பதிவு : 507
ஒவ்வொரு உயிர்களும் இந்த பூமியில் ஏதோ ஒரு சதைப்பிண்டத்தை தேர்ந்தெடுத்து, பிறப்பு என்ற உருவாக்க நிகழ்வை
தேர்ந்தெடுத்துக் கொள்வதன் நோக்கம் என்னவென்று அறிவீர்களா?
இந்த நீலகிரகத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய அத்தனை செல்வ செழிப்புகளையும் அது முழுமையாக அனுபவித்து தீரவும், மகிழ்ச்சி
பேரானந்தம், எல்லையில்லாத மற்றும் நீண்ட மகிழ்ச்சியின் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒவ்வொரு கணமும் பரம ஆனந்தத்தை
தரக்கூடிய நித்திய வத்துவை அனுபவிப்பது மட்டுமே.
இப்படிப்பட்ட ஒரு உயிர் மற்றொரு உயிருக்கு துன்பம் விளைவுக்குமானால், அங்கு கர்மா என்ற மறு செயல் உருவாக்கம்
துவங்குகிறது. அதன் விளைவாக மீண்டும் மீண்டும் அதே தவறை அந்த உயிர் செய்து கொண்டே இருக்கிறது.
இந்த உயிரின் துன்புறுதலுக்கு காரணம் இதனுடைய தீய சிந்தனை தானே தவிர மற்ற எதுவும் இல்லை.
மனித அறிவால் பிரபஞ்சத்தை கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால், தான் நிலை கொண்டிருக்கும் உடற்கூறியல் நிகழ்வுகளையும் அதன் கட்டமைப்புகளையும் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாத அளவு அந்த பிரபஞ்சமே பல ரகசியங்களை உள்ளே பொதிந்து வைத்துள்ளது.
ஒரு சதை பிண்டத்தில் உயிர் ஆற்றல் இருக்கும்போது மட்டுமே அது இயல்புத் தன்மையிலும், அதனுடைய செழுமைத்தன்மையிலும், இயற்கைக்கு ஒத்திசைவுத் தன்மையிலும் இயங்க முடியும். அதிலிருந்து உயிர் (ஆற்றல் விளைவு தத்துவம்) அகன்று விட்டால், அது பூமியால் வெறுக்கப்படும் துர்நாற்றம் வீசும் வெறுக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.
இந்த விளைவு தத்துவம் தான் அனைத்து உயிர் ஆற்றல்களிலும் ஒரு ஒற்றுமையையும் வேற்றுமையையும் ஏற்படுத்துகிறது என்பதை மனிதனைத் தவிர அத்தனை உயிரினங்களும் புரிந்து கொண்டது. ஆனால் மனிதனோ, மாயை, கோபம், பேராசை, கொடுமையான சொற்கள், கர்வம், கொலை சிந்தனை, இறுமாப்பு போன்ற கொடுமையான பாவ கயிறுகளால் கட்டப்பட்டு இருக்கிறான்.
இதிலிருந்து சில மனிதர்களை விடுவிக்கவே ஒவ்வொரு நூற்றாண்டுகளில் இறுதியிலும் பிரபஞ்சத்தில் தூண்டுதலால் இயற்கையின் கால நிகழ்வுகளால் குருமார்கள் ஏற்படுத்தப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
இதைத்தான் அகத்தியர் பெருமான் சூசகமாக அறிவிக்கிறார்
மனிதனின் உலகத்தில் பல பிறவி உயிர்கள் வாழ்கின்றன, அதில் படைப்புகளும் பல விதமான கோடா கோடிகளாக உள்ளன, இந்த பூமியில் மட்டுமல்ல பல இடங்களிலும் உயிர்கள் வாழ்கின்றன, அவை அனைத்தும் வெட்ட வெளியில் நிலை கொண்டதை நீ பார்க்காமல் போனது என்ன?
அண்டவெளியில் நீ வாழும் இந்த சிறிய பூமி அணுவின் அளவில் உள்ளது, குழுவின் கூடு தன்னுடைய வலையை நன்கு அறியும் அது போல உன்னுடைய உடலில் இருக்கக்கூடிய சூட்சுமங்களை நீ அறிந்து கொண்டால் நீ அந்த சத்தியத்தை புரிந்து கொள்வாய்.
குருவின் துணையோடு உவமையாக எனக்கு அருளிய ஞானத்தை கூறு போட்டு உனக்கு பிரித்து 10 இல் மூன்றாக தந்திருக்கிறேன்.
அதன் பொருளையும் உனக்கு விளக்கமாக சொல்லிவிட்டேன். நீ அதன் பொருளை அறிந்தால் நிச்சயம் அனைத்தையும் பொருத்திப் பாரு.
இந்த மெய்ஞானத்தை நீ பழித்து பேசுவாயானால் நீ நரகத்தில் பிசாசுன நுழைந்து வாழ்வாய், ஆனால், குருவருளால் இதை ஆராய்ந்து பார்க்கும் எந்த மனிதராக இருந்தாலும், அவர்கள் ஆகாயத்தில் நிலை நிற்பார்கள் அதாவது பிரபஞ்சத்தை அடைவார்கள்(நிரந்தர நிலையான இருப்பை அடைவாய்)
முடிவுரை :
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு அதிர்வும், மொழியும் இருக்கின்ற பொழுது, அனைத்தையும் உருவாக்கிய பிரபஞ்சத்திற்கென்று, அதிர்வும், மொழியும் இருக்காதா என்ன? அதில் இருந்தே அனைத்தும் உருவாகியது. எவர் ஒருவர் இதை சரியாக செலுத்துகிறாரோ, அவர் அளப்பரிய ஆற்றலை பெற்று, அந்த ரகசியத்தை அறிந்து கொள்வார்.
அனைத்திற்கும் மூலமாக பிரபஞ்சத்திற்கு நன்றி










