ஜீவ சமாதி என்றால் என்ன? உண்மையிலேயே இது சாத்தியமா?!
{ ஜீவ சமாதி பற்றிய நமக்குள் உள்ள முழுமையான கேள்விகளும் அதற்காக
பதில்களும் சித்தர்களால் சொல்லப்பட்ட சுக்சுமமான உண்மைகளும் அதன்
பின்னால் ஒளிந்துள்ள மர்மங்களும்……….. இந்த தேவரகசியத்தை நமக்கு அருளிய
மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். }
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை
பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும். ஜீவன் நீங்கிய பிறகும்
அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி
இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப்
போய் இருக்கும்.
ஆனால் நம்மால் எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை
உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர
முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும்.
அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது.
இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும்
அவர்களால் முடியும்.இதைத்தான் ஜீவ சமாதி என்கிறோம்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ,
மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும்
யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது
கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி
அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது
எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது.
பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும்
யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே
ஒடுங்கிவிடுகின்றன.
அந்திவேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின்
மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது.
உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும்
மெதுவாக விலகுகிறது.யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது.
அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே
இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின்
வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித்
அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார். மேலைத்துவாரம் வழியாக ஜீவனை
பரமனோடு இணைத்துக் கொள்வரர்.
இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ
ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு
அடையும் நிலை.
அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக்
கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள்
தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். இது ஜீவ ஐக்கியம்.
இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று
சொல்லப்படுவதுண்டு. உண்மை தான் ,அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும்
இருக்கிறார்கள்.
இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்,
சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு
வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மையாக
விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற
ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்ட நாள் தன்
ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா?
என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின்
வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற
பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக்
கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள்.
அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று
தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல்
மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக
வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று.
இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி
வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயு மட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?
அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி,
அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும்
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன்,
தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடி இருக்கும்.
அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும்
இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன்
என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும்,
இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால் தான் இந்த
தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கி விடுகிறது.
இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை
அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால் தான்
இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும்
இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில்
இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன்
மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.
மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை
எரித்துவிடக்கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக
எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.
வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து
கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல்
போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது,
உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு. முருக
கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.
யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி
அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும்.
அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில்
மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள்
இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.
அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை
சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும்.
அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை
அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி
படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச்
செய்தோமானால்,
அவர்களுக்கு மூச்சு வந்து விடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக்
கொள்ளவும் கூடும்.
நடப்பு காலங்களில் யோகிகளின் ஜீவ சமாதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது
எனும் போது, யோகிகள் என்ன செய்வார்கள் ?
பண்டைய காலங்களில் மக்கள் எண்ணிக்கை குறைவு. பொது இடங்களில், திறந்த
வெளிகளில் விலங்குகளால், மனிதர்களால், இயற்கை சீற்றங்களால் ஏதேனும்
இடையூறு நேராமல் இருக்க பூமிக்கடியில் அறை அமைத்து சமாதி கூடினார்கள்.
அத்தகைய ஜீவ சமாதி மறுக்கப்பட்ட பிறகு, யோகிகள் அவரவர், ஆசிரமங்களில்,
குடில்களில், மலைக் குகைகளில், வனாந்திரங்களில் தங்கள் உடலை விட்டு
பரத்தில் கூடுகிறார்கள்.
நாம் ஊனக் கண் கொண்டு பார்த்து விட்டு அறியாமையால் அவர்களும் நம்மைப்
போல மரணம் அடைந்து விட்டார்கள் என்று எண்ணுகிறோம். தாங்கள் இன்ன
நேரத்தில் உடலை விடுவோம் என்று முன்பே கூறிய பல யோகிகளை,
ஞானிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர்களைப் போல உயர்ந்த நிலைக்குப் போகும் தைரியமும், திறனுமில்லாத நாம்,
அவநம்பிக்கை கொள்வதோடு, மகான்களைப் பற்றித் தவறாகவும், அவதூறாகவும்
எண்ணுகிறோம், கேள்விகள் கேட்கிறோம், பேசுகிறோம்.
இனியொரு நண்பர் கேட்டார், எத்தனையோ சித்தர்கள், ஞானிகள் வந்தாலும்,
போனாலும், இருந்தாலும் துன்பப்படுபவர்கள் துன்பப்பட்டுக் கொண்டுதானே
இருக்கிறார்கள் ? என்று.
எந்த ஞானியும் உன் துன்பத்தை நான் போக்குகிறேன் என்று சொல்லவே இல்லை.
துன்பத்தை கடப்பதற்கு என்ன வழி என்று சொன்னதோடு, அதன்படி வாழ்ந்து காட்டி
விட்டுச் சென்றார்கள் அவ்வளவுதான். நாம்தான் அவர்கள் காட்டிய பாதையை
மறந்து விட்டு, அவர்கள் படங்களை வைத்து மணியாட்டிக் கொண்டு இருக்கிறோம்.
ஒரு வேளை நம் அழைப்பபை ஏற்று அவர்கள் சூக்குமமாக வந்தால் கூட, அவர்கள்
கூறியபடி நடந்தால்தானே அவர்களால் உதவ முடியும்.
ஜீவசமாதி என்பது யோகியானவர் தன் உடல் வாழ்வை முடிந்துக் கொள்கிற
தருணமாகும். அது தற்கொலையுமல்ல, மரணமுமல்ல. தன் ஆதியோடு தன்னை
இணத்துக் கொள்ளும் செயலாகும். நதியானது கடலுக்குள் சென்று நுழைவது
போல், யோகியின் ஆன்மா பரம்பொருளின் வாசலுக்குள் நுழைகிறது.
எஞ்சி நிற்கும் ஜீவபோதமும் பரபோதமாக மாறி விடுகின்றது. பிரபஞ்ச வாழ்க்கை
குறித்த உணர்ச்சிகளானது எல்லயற்ற பேருணர்ச்சியாக விரிவடைந்து
விடுகின்றது.
அவ்வேளையில் பொறிகளால் புலனாகும் எந்த உணர்ச்சியும் யோகிக்கு இல்லை.
அவையனைத்தும் ஒடுங்கி விடுகின்றன.
மாலையானதும் தன் கூடு நோக்கி விரைவாகப் பறக்கும் பறவை போல, யோகியின்
மனமானது இதயக் கூண்டுக்குள் சென்று ஒடுங்கி விடுகின்றது.
அவ்வேளையில் உடலெங்கும் சீதளம் பரவுகிறது. பிராணனும் ஒவ்வொரு
அவயமாக நீங்கி, உச்சந்தலைக்குப் போய் சேர்கிறது. இறுதி கட்டத்தில் யோகியின்
உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
ஆனால் உச்சந்தலை மட்டும் நீண்ட நேரத்திற்கு கதகதப்பாக இருக்கும். (யோகி
அல்லாதவர்களுக்கு பிராணன் வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ
வெளியேறி விடும். உச்சந்தலைக்குப் போகாது.) அப்பொழுது ஓம் ஓம் என்ற நாதம்
ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
முடிவில் ஓம் என்ற ப்ரணவத்தின் வடிவினனான பரமாத்மாவின் திவ்ய சொருபம்,
பேரின்பம், பேரறிவு, அருட் பெருஞ் சோதி, சித் அம்பரம் என்கிற நிலையை யோகி
அடைகின்றார்.
சகஸ்ராரத்தில் உள்ள நுட்பமான துவாரம் வழியாக யோகியின் ஆன்மா
பரவெளியில் கலக்கிறது. இனி யோகியின் உடலும் பிணம்தான். யோகி வீடுபேறு
அடைந்து விடுகிறார். இது இறப்பு அல்ல இணைப்பு.
மரணமில்லாத பெரு வாழ்வு என்பது இதுதான். ஜீவசமாதி என்கிற அறைக்குள்ளும்
இதுதான் நடந்தது. வெளியே வாழ்ந்து மறைந்த மற்ற யோகிகளின் இறுதி
கட்டத்திலும் இதுதான் நடந்தது. நீங்களும் முயற்சித்தால் உங்களுக்கும் இதுதான்
நடக்கும்.
மனம், வாக்கு கடந்த தெய்வீக உள் அனுபவமே சமாதி. பல ஆண்டுகள் விடா
முயற்சியுடன் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் போன்ற தவத்தின் விளைவாகும்
அது. ஒரு யோகியானவர் முற்றிலும் தூய்மையானவராக மாறினாலொழிய
முழுமையான ஸமாதி நிலையை எட்ட முடியாது. மேலேறுவதும்,
இறங்குவதுமாகவே இருக்கும்.
மேலேறிய மனதை, உணர்வை அங்கேயே நிறுத்த பல ஆண்டுகள் பயிற்சியும்,
முயற்சியும் தேவை. ஞானத்திலும், சமாதியிலும் பல படித்தரங்களைக் கடக்க
வேண்டும்.
ஜீவசமாதி முயற்சி என்பது ஒரு நல்ல மாணவனுக்கு நடக்கும் இறுதித் தேர்வை
ஒத்தது. வாழ் நாள் முழுவதும் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, தன் ஜீவனை,
பரத்தோடு இணைக்கும் முயற்சியாகும்.
அவர்களுக்குத் தெரியும், இனி நம்மால் பூரணத்தை எட்ட முடியும் என்பது. அந்த
நிலை வந்த பிறகுதான் அதற்கான முயற்சியை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
இடைவிடாத முயற்சியின் பலனாக, மூன்று அவஸ்தைகளையும் கடந்த
பேரானந்தப் பெருநிலையை அனுபவித்து அனுபவித்து அதில் நீடித்திருக்கும் கால
அளவை அதிகரித்துப் பழகிப் பழகி முடிவில் அதிலேயே லயித்திருந்து விடுவதே
ஜீவசமாதி.
இந்த முயற்சிகளுக்கிடையே ஞானத்தின் விளைவால் ஏற்படும் வினைத்
தூய்மையையே நிர்வாணம் என்பார்கள். இந்த நிர்வாணிகளை ஜீவன் முக்தர்கள்
என்று பகர்வார்கள். இவர்கள் வாழ்ந்திருக்கும் பொழுதே செத்தவர்கள் போல்
இருப்பார்கள்.
இவர்களுக்கு ஆண், பெண் என்ற பேதம் தோன்றாது. அனைத்தும்
பரம்பொருளாகவேத் தோன்றும். மின்னும் பொன்னையும், வைர
வைடூரியங்களையும் வெறும் மண்ணைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
இதையெல்லாம் கடந்து ப்ரம்ம நிர்வாணத்தை அடையும் இறுதி கட்ட நிலையே
ஜீவசமாதி நிலையாகும். ப்ரம்ம நிர்வாணம் என்பதே அபரோக்ஷ அநுபூதியாகும்.
மனம், வாக்குக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது.
அப் பெருநிலையில் இருந்து இறங்கி வந்த நாம் ஜீவர்கள். மீண்டும் தன்
முயற்சியால் அதை அடைந்தவர்கள் முக்தர்கள்.
இந்நிலையை எட்டுவதற்கான முயற்சிக்கு இடையூறு ஏற்படாத வண்ணம்
முன்னேற்பாடுகள் செய்து கொள்வது தேவையல்லவா ?
அதுதான் பூமிக்கடியில் அறை அமைத்து, அதில் ஒடுங்கினார்கள். பின் வரும்
காலங்களில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத காரணத்தினால், அவரவர்
வாழும் இடத்திலேயே அபரோக்ஷ அநுபூதியை அடைய வழி வகைகள் செய்து
கொள்கிறார்கள்.
பகவத் கீதையிலும் இதைப் பற்றிய விளக்கம் இருக்கிறது.
”ஸர்வத்வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி ந்ருத்ய ச |
மூர்த்ன்யாதாயாத்மன; ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் ||
ஓம் இத்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |
ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் || 8 -12,13.
பொறி வாயில்களை அடக்கி, வெளி விவகாரங்களை உள்ளே வரவொட்டாமல்
செய்து, மனதை இதயத்தில் நிறுத்தி, பிராணனை உச்சந்தலைக்கு ஏற்றி,
யோகத்தில் நிலைத்திருந்து, ஓம் என்ற ப்ரணவ மந்திரத்தை மட்டும் மனதால்
உச்சரித்துக் கொண்டு, பரம்பொருளையே சிந்தித்துக் கொண்டு யார் ஒருவர்
உடலை விடுகிறாரோ, அவர் பரமகதியை அடைகிறார்.
இதுவே ஜீவசமாதி அறைக்குள்ளோ, அல்லது வெளியிலோ யோகியர்கள்
நிகழ்த்தும் இணைதல் முறையாகும். ஆனால், வெளியில் இருந்து
பார்ப்பவர்களுக்கு அது மரணம் போலவே தோன்றும்.
அநுபூதிமான்கள் மட்டுமே அதை உணர முடியும்.
*சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?*
ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது
என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி
என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின்
மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத
வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று
பொருள் படும். அதாவது மனம்+ஆதி.
ஆத்மாவானது உடலை அடையும் போது
எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே
தூய்மையை மீண்டும் பெற்று உன்னத
நிலையை அடைவது என்று பொருள்.
ஒவ்வொருவரும் பிறக்கும் போது
தூய்மையான அத்மாவாகதான் பிறக்கிறோம்.
ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம்
என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை
செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின்
கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம்
செய்கிறோம்.
ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற
ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து
அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு
தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான
நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம்
ஒருங்கிணைவது என்று அர்த்தம். இதை
செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.
தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.
ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல்
அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த
உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாது இது எப்படி என்ற கேள்வி
வரலாம்…… விடை காயகல்ப்பம்.
காயகல்ப்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம்
உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு. மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே
ஜீவசம்மதி அடைபவர்கள் இரண்டாவது வகை
காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக
இருப்பார்கள்.
இந்த சுவாச பயிற்சியின் படி,
ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல்
உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு,
மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என
அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள்.
உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு,
இதயத்துடிப்பு இல்லாமல் போவதால்,
உயிரற்ற உடலை போல் தெரியும்.
இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை
விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில்
வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை
உருவகம் செய்துகொள்ள முடியும் என்று
அகத்தியர் கூறுகிறார்.
பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக
நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள்.
அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள்
அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த
எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே
இருக்கும். நாம் அவற்றை வலம்வரும் போது,
அந்த அதிர்வுகலானது நம் மனதையும் தாக்கி,
அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை
நம் மனதிற்குள் விதைத்துவிடும் ……… பல
மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க
இதுவே முக்கிய காரணம்.
மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி
என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல்
அழுகிவிடும். எந்த ஒரு அதிர்வுகளும்
இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த
சூட்சமங்கள் தெரியாது. தெரிந்தவர்கள்
மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை
பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்….
உண்மையில் இது உங்களுக்கு ஆச்சர்யமான தகவல்தானே…..
சிவ சிவ சிவ சிவ நமசிவாய………….











