“மகாலட்சுமியே தனக்கு மகளாக வரவேண்டும்’ என்று மணிமுத்தா நதிக்கரையில் மேதாவி என்ற முனிவர் கடும் தவம் இருந்தார்.
இவரின் தவத்தைப் போற்றிய திருமகள் பாற்கடலை விட்டு நீங்கி, பங்குனி வெள்ளிக்கிழமை உத்திர நன்னாளில்
ஆற்றங்கரையிலிருந்த வஞ்சுள மரத்தின் கீழ் அவதரித்தாள். இவளே “திருமகள்’ என உணர்ந்த முனிவர் தம் குடிலுக்கு எடுத்து வந்து
“வஞ்சுளவல்லி’ என பெயரிட்டு வளர்த்தார்.
திருமகளைக் கைப்பற்ற பூவுலகுக்கு எழுந்தருளி தனது வியூக நிலையில் சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன், புருஷோத்தமன்,
வாசுதேவன் என்னும் ஐந்து நிலைகள் சேர்ந்து தேவிக்கு சகலமும் அளித்து மணந்து “திருநறையூர்நம்பி’ என்னும் நாமத்துடன்
இங்கிருந்து அருளத் தொடங்கினார் மஹாவிஷ்ணு.
கும்பகோணத்துக்கு அருகில் 9 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயில் மாடக்கோயில் அமைப்பில் அமைந்துள்ளது. நாச்சியார்
மூலவர் பெருமாளுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாளுக்கு வலப்பக்கத்தில் நான்முகப்பிரம்மன்,
சங்கர்ஷணன், இடது பக்கத்தில் அனிருத்தன், ப்ரத்யும்னன், சாம்பன் என்ற புருஷோத்தமன் ஆகியோரும் நின்ற திருக்கோலத்தில்
காட்சி தருகின்றனர்.
63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட்சோழன் மாற்றாரிடம் தோற்று நாடு இழந்தார். மணிமுத்தா நதியில், மூழ்கி
எழும்போது தெய்வ வாளினைப் பெற்று எதிரிகளை வென்று நாட்டை மீட்டு முடிசூடி நறையூர் நம்பியின் பக்தனாகவும் மாறினான்.
“இழந்ததை மீட்டுத்தந்த நம்பிக்கு திருமண மண்டபம், பூஜைக்கு நிலம் தங்கவிமானம் அமைத்தார்’ என்கிறது தல வரலாறு.
கருவறைக்கு முன்புறம் மஹாமண்டபத்தின் இடப்புறத்தில் எழுந்தருளியுள்ள கருடாழ்வார் சாளக்கிராம வடிவோடு நீள்சிறகும்,
முடியும், நீண்டு வளர்ந்த திருமேனியுடன் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். கீர்த்தியும், பெருஞ்சக்தியும் வாய்ந்தவர். இங்கு ஒரே
கல்லாலான கருடர் தனி சந்நிதியில் நவநாகங்களுடன் அருள்பாலிக்கிறார். இவர் பெரிய வரப்ரசாதி.
இவர் எழுந்தருளியுள்ள சந்நிதி 10 சதுர அடி. இவர் வழிபடும் தெய்வமாக இருக்கும் நேரத்தைத் தவிர, வாகனப் புறப்பாட்டுக்கு
புறப்படும் நேரத்தில் இவரது திருப்பாதங்களை நால்வர் தாங்குவர். இவர் வெளிவந்ததும் மூலைக்கு ஒருவராக மேலும் நால்வர்
சேர்ந்து தூக்குவர்.
இவ்விதம் 16 பேர் தாங்கிவர 32,64 என ஆள்கள் சுமந்து கொண்டு படிகளில் இறங்குவார். இறுதியில் பல பேர் தாங்கிவர வாகன
அலங்கார மண்டபத்தில் பெருமாள் காத்திருக்கிறார் என்ற நினைவில் எழுந்தருள்வார். அவசர கதியில் எழுந்தருள்வதால் இவருக்கு
உடல் முழுவதும் முத்துமுத்தாய் வியர்க்கும். விசிறி வீசி வியர்வை நீங்கியவுடன் அலங்காரம் செய்து புறப்பாடாகும். இந்தக்
கல்கருடன் மீது பெருமாள் திருவீதி கண்டருள்வதை “நாச்சியார் கோயில் கருட சேவை’ , “பெரிய திருவடி தரிசனம்’ என்று
குறிப்பிடுவர். திருவாராதனம் முடிந்ததும் இவருக்கு அமுதகலசம் எனும் மோதகம் (கொழுக்கட்டை) நிவேதிக்கப்படுவதால், இவரை
“மோதக மோதர்’ என்று அழைக்கின்றனர்.
மார்கழி முக்கோடி தெப்பத்திருவிழா, பங்குனி பிரம்மோற்சவத்தில் “கல் கருட சேவை ” என ஆண்டில் இருமுறை கல்கருடன்
புறப்பாடாவது வழக்கம்.
“ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களை அருள்வதில் வல்லவரான கருடனை
வேண்டினால் வெற்றி கிடைக்கும். தோஷங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும்’ என்பது ஐதீகம்.










