உலக கடித தினம்-செப்டம்பர் 1-ம் தேதி
இனிய தோழமைக்கு இதய வணக்கம் !
(செப்டம்பர் 1-ம் தேதி) உலக கடித தினம்.
அன்பு நண்பர் ……………….அறிவது நலம். நலம் அறிய ஆவல்.
இல்லத்தில் அனைவருக்கும் இதய அன்பு. தங்கள் கடிதம் கிடைத்தது. விவரங்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி. பேரவைப் பணிகள் சிறப்புடன் தொடர்கிறது. ……………….. ……என்று நாம் படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

கடிதம் எழுதுதல் என்பது தகவலை பரிமாறிக் கொள்ளும் கருவியாக மட்டும் இல்லாமல் இதயத்தில் உணர்வுக் குரல், அதை வெளிப்படுத்தும் அழகுமிகு வார்த்தைகள், சொல்லாடலின் ஆழம், அது ஏற்படுத்தும் தாக்கம் என கடிதங்கள் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.
கடிதம் காலத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்தது. கடிதம் இரு மனிதர்களுக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்கும் புனிதமாகத் திகழ்ந்தது.
நண்பனின் கடிதம் இன்று வரும் என்று தபால்காரரின் வழிநோக்கி காத்திருக்கும் தருணங்களில் ஏற்பட்ட தவிப்பு, வந்த கடிதத்தை கையில் வாங்கும் பொழுது ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, இவற்றை எந்த வார்த்தைகளாலும் எடுத்தியம்பவோ, வர்ணிக்கவோ முடியாது.
இப்படி நட்புணர்வின் நேசங்களையும், உறவு என்ற உத்தமங்களையும் உணர்வு பூர்வமாக ஒன்றிணைத்த கடிதம் இன்று வாட்ஸ் அப், முகநூல், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் குறுஞ்செய்தி என உணர்விழந்த ஜடங்களாய் சுருங்கிவிட்டது,

எத்தனை வளர்ச்சி என்றாலும் எண்ணம் எனும் மை ஊற்றி, சொல் என்ற உணர்வை அடிமனத்தின் ஆழத்திலிருந்து எழுத்துகளாக்கி கையால் எழுதி , படிப்பவருக்கு ஆனந்தம் அளிக்கும் அனுபவம் எதிலும் கிடைக்காது.
அது அனுபவம் மட்டுமல்ல மனங்களை இடமாற்றம் செய்யும் காரணியும் கூட.
எனவே கடிதம் எழுதுவதை ஒரு பழக்கமாக மீண்டும் கொண்டு வருவோம். எழுத்தை உணர்வின் வெளிப்பாடாக்கி வாசிப்பை நேசித்து வாழ்வில் வளம் காண்போம் !










