பகவான் ரமண மகரிஷிகளின் 75 ஆவது ஆராதனை
பகவான் மகா சமாதிக்குப் பிறகு 75 ஆண்டு காலங்கள் கடந்தும் ரமண அன்பர்கள் அன்னாரது சாந்நித்தியத்தை உணர்கின்றனர். அவரே நம்முள் இருக்கிறார். அவரின் வழிகாட்டுதல் வேண்டுவோரை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
பகவான் ரமண மகரிஷிகளின் 75 ஆவது ஆராதனை ஸ்ரீ ரமணாச்ரமத்தில் இன்று
(25-4-2025) விமரிசையாக நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பகவான் சந்நிதியில் அதிகாலை மங்கள இசையுடன் ஆராதனை துவங்கியது. பின்னர் மஹன்யாச ருத்ர ஜபம், சிறப்புப் பாராயணம், அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள் தங்களுக்குப் பிரியமான பகவானுக்குப் பூமாலைகளையும் பாமாலைகளையும் காணிக்கையாக்கி மகிழ்ந்தனர். சுமார் 10.30 மணி அளவில் ஆரத்தியுடன் பகவானது 75 ஆவது ஆராதனை இனிதே நிறைவுற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபகவானது அருளைப் பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆராதனை விழா அதிகாலை முதல் நேரலை செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற அன்பர்கள் கண்டு பயன்பெற்றனர்.
“குரு என்பது பௌதிக உருவமல்ல. எனவே குருவுடனான தொடர்பு, அவரது உடல் மறைந்த பிறகுகூட தொடரும்” என்று அருளியுள்ளார். பகவான் இப்பொழுதும்கூட நம்முள், நம் ஆன்மாவாக இலங்குகின்றார். எங்கும் மங்காத ஒளியாக இருக்கின்றார். அறிவையும் நிரந்தரத்தையும் நாடுபவர்களுக்கு அவர் குறையாத இனிமையாக இலங்குகின்றார்.
பகவானுடைய மூன்றாவது ஆராதனையையொட்டி ‘மௌனி சாது’ அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் இங்கு நினைவு கூர்வோம்:
“அன்பின் மையமாகத்தான் மகிரிஷி அவருடைய பக்தர்களுக்குத் திகழ்ந்தார். நமக்கெல்லாம் அவருடைய அன்பை விட்டுச் சென்றிருக்கிறார். உலகத்தில் வேறு எங்கு இந்த மாதிரி மனித மனத்தை தூய்மை செய்து, அமைதியைக் கொடுக்கும் சக்தியைக் காண முடியும்? நாம் செய்ய வேண்டியதெல்லாம் இறுதி வரை அவர் விட்டுச் சென்ற அன்பை நம்முடன் வைத்திருக்க வேண்டும்.”










