முற்பிறவி புண்ணியத்தால் இவருக்கு சமாதி நிலையில் ஆழ்ந்துவிடும் பாக்கியம் இருந்தது.
ஆனால் சிலர், இதைப் புரிந்து கொள்ளவில்லை.
பகவானின் மற்றொரு அணுக்கத் தொண்டரான அம்மையார், அவரின் நிலை தெரிந்து
திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தார்.
மஸ்தான் சுவாமிகள், முதன்முதலாகப் பகவானைப் பார்த்தபோது, பகவான் அசையாது சிலைபோல வீற்றிருந்தார். அவரது கண்கள் கருணை மழை பொழிந்தன.
கணநேரம் எதிரே நின்ற மஸ்தானை அவை தொட்டுவிட்டு அகன்றன.மஸ்தானின் மனதுள் மாற்றம் உண்டாயிற்று சுமார் எட்டு மணி நேரம் நின்ற நிலையிலேயே அசைவற்று ஆழ்ந்த நிலைக்குச் சென்றார். பகவானிடம் வருகிற அன்பர்களில் சிலரே, மிகப் பக்குவ நிலையில் இருப்பார்கள்.
முதல் சந்திப்பிலேயே, முதல் பார்வையிலேயே, மேலும் கணிந்து,தானே நழுவி விழும் பழத்தைப் போலிருப்பார்கள். மஸ்தான், இத்தகைய நிலையைச் சேர்ந்தவர் என்று பகவான் ஸ்ரீரமணரே கூறியிருக்கிறார்.
விருபாஷி குகைக்கு வந்து,குகை நெருங்கும்போதே ஆழ்நிலைக்கு போய்விடுவார் மஸ்தான். தன்னிலை பற்றிப் பேசுவதோ பிறருக்கு நடுவே பிரபலமாக வேண்டும் என்ற ஆசையோ இல்லாதிருப்பார். எந்த நிகழ்ச்சியிலும் பின்னணியிலேயே இருப்பார்.
ஒருமுறை மஸ்தான், அன்பர்களுடன் யாசகத்துக்குச் சென்று உணவு வாங்கி வந்தார். அதில் ஒரு அவித்த முட்டையும் இருந்தது.சகலரும் திடுக்கிட்டு, நிற்க, பகவான் அந்த முட்டையை வீசியெறிந்துவிட்டு,
உணவை சகலருக்கும் பகிர்ந்தளித்து, தானும் உண்டார். ஆச்சாரக் கூச்சல் இல்லாது, உயர்ந்த ஒரு மனப் பக்குவத்தை தன் அன்பர்களுக்கு பகவான் அறிவுறுத்தினார்.
மலையடிவாரத்தில் ரமணாஸ்ரமம் ஏற்பட்ட பிறகு, ஒருநாள் கள்வர் புகுந்து, ‘எல்லாக் காசையும் எடு.ஏகப்பட்ட கூட்டம் வருகிறது,
அவர்கள் தருவதை எங்கே வைத்திருக்கிறீர்கள்’ என்று தடி கொண்டு மிரட்ட, பகவான்….. எங்களிடம் ஏதுமில்லை என்று சொல்ல, அவர்கள் நம்பாமல் அடிக்கத் துவங்கினார்கள்.
ஸ்ரீரமணருக்கு தொடையில் இரண்டு அடிகள் விழுந்தன.
மஸ்தான் சுவாமிகள் உடனே வெகுண்டு தடியோடு எழ,பகவான் அவரை அடக்கினார்.
‘நாம் சாதுக்கள் எதிரே வன்முறை நடந்தாலும், அதை மெளனமாக ஏற்க வேண்டுமே ஒழிய, பதிலுக்கு வன்முறை கூடாது’ என்று அறிவுறுத்த, சட்டென்று மஸ்தான் அடங்கினார். இது பகவானின் அன்பர்களுக்கு தரப்பட்ட மிகப்பெரிய பாடம்.
நான் என்கிற அகங்காரம், முற்றிலும் அழியாது உள்ளே பதுங்கி, திடீரென்று வெளிக் கிளம்பி, இதுவரை கடைப்பிடித்து வந்த உயர்நிலை அமைதியைக் குலைத்துக் குப்புறத் தள்ளும்.
எனவே எது நேரிடினும் அமைதியாக இருப்பது என்பதைக் கடைபிடிக்க வேண்டும் என்கிற பாடம்.










