கசப்பான ஏதாவது நடக்கும்போது — பிறர் சொல்லாலோ, செயலாலோ உன்னைத் தாக்கும்போது, பதிலுக்குப் பதில் அதே ஹிம்சை முறையைச் செய்வதைவிட அமைதியுடன்,
கிளர்ச்சியேதுமின்றி அசைக்க முடியாதபடி இருப்பது கோடி மடங்கு நன்மையானது.
ஒருவன் உன்னை அவமதிக்கிறான், அந்த நிலையிலும் எந்த விதமான
கிளர்ச்சியுமின்றி ( வெளிப்படையாக மட்டுமல்ல, முழுமையாக) அந்த அவமதிப்பினால் சிறிதும் அசைந்து விடாமல்
அந்த அவமதிப்பு எந்த விதத்திலும் உன்னைத் தொடமுடியாதபடி நீ இருக்கிறாய். அதற்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாத ஒரு சக்தியாக நீ இருக்கிறாய்,
நீ பதில் கொடுக்கவில்லை, எந்தச் சைகையும் செய்வதில்லை, ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
உன் மீது கொட்டப்படுகிற அவமதிப்புகள் உன்னை கொஞ்சங்கூட உள்ளேயோ வெளியேயோ தொடவில்லை. உனது இதயம் அதிகமாக துடிக்கவில்லை. உன்னுடைய சிந்தனை சிறிதும் பாதிக்கப்படாமல் அமைதியாக இருக்கிறது. அதாவது உன்னுடைய மனம் பதிலுக்கு அதே அதிர்வைக் கொள்ளவில்லை.
உன்னுடைய நரம்புகள் முறுக்கேறி பதிலடி கொடுக்க வேண்டிய தேவை உண்டாகவில்லை. இப்படியெல்லாம் உன்னால் இருக்க முடிந்தால் உன்னிடம் மறைநிலை ஆற்றல் ( static) இருக்கிறது என்று பொருள். அவமதிப்பிற்கு அவமதிப்பு, அடிக்கு அடி, கிளர்ச்சிக்கு கிளர்ச்சி கொடுக்கச் செய்யும் சக்தியைவிட இது கோடிமடங்கு அதிக ஆற்றல் வாய்ந்ததாகும்.
ஸ்ரீ அன்னை











