ஸ்ரீ சண்டிகேஸ்வரர்= மனஉறுதியும், ஆன்மிக பலமும்
ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
சிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
சண்டிகேஸ்வரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாக இருக்கிறார்.
சிவபெருமான் வழங்குகின்ற பதவி சண்டிகேசுவரர் ஆகும். யுகத்திற்கு ஒருவர் என நான்கு சண்டிகேசுவரர்கள் இருந்துள்ளார்கள். சிவாகம புராணங்களில் ஒவ்வொரு யுகத்திற்கும் சண்டிகேசுவரர்கள் உள்ளார்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவாகம புராணங்களின் படி,
கிருத யுகம் ~ நான்கு முக சண்டிகேசுவரர்
திரேதா யுகம் ~ மூன்று முக சண்டிகேசுவரர்
துவாபர யுகம் ~ இரண்டு முக சண்டிகேசுவரர்
கலியுகம் ~ ஒரு முக சண்டிகேசுவரர்
சண்டிகேஸ்வரர் ஒரு தொன்மையான தெய்வம். காமிக ஆகமத்தில் அவருக்குத் தனி ஆலயம், கொடிமரம், பூஜை விதிகள், திருவிழா எல்லாமே சொல்லப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் ஒரு தரப்பு மக்களின் தனிப்பெருந்தெய்வமாக இருந்திருக்கிறார். இவருக்கு சண்டிகா தேவி என்ற தேவியும் உண்டு.
இவர் கரியநிறம் கொண்டவர். காளை வாகனம் கொண்டவர். நான்கு கரங்கள். அவற்றில் சூலம் உளியும் கொண்டு அபய, வரத முத்திரைகளுடன் இருப்பார். நான்கு தலைகள்.
நாகத்தால் உபவீதம் (பூணூல்) அணிந்து நாககங்கணம் அணிந்து தாமரை இருக்கை அமர்ந்திருப்பார். அவரது நாக ஆபரணங்களை வைத்துப் புராதன நாகர்களின் தெய்வம் என்று சொல்வர். ஆனால் சண்டிகேஸ்வரர் ஒரு பெருந்தெய்வமானதனால் அவருக்குப் பல்வேறு தோற்றங்கள் உண்டு. அவர் சிவபரிவாரம் அல்ல சிவ வடிவம்.
சண்டிகேஸ்வரருக்கு வஸ்திரம் சார்த்தி வழிபடவேண்டும். சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவாலயங்களுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் சென்றால், அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.
இரட்டை சண்டிகேசுவர் – திருநாரையூர் சௌந்தரேசுவரர் கோவிலில் இரட்டை சண்டிகேசுவரர் சந்நிதி உள்ளது. இங்குள்ள மூலவருக்கு ஒன்றாகவும், பிரகாரத்தில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒன்றாகவும் அமைந்துள்ளது.
குகசண்டிகேசுவரர் – மயானம் பிரம்மபுரீசுவர் கோயிலில் இரு சண்டிகேசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சிங்கார வேலர், பிரம்மபுரீசுவரர் இருவருக்கும் சேர்த்து குகசண்டிகேசுவரர்கள் அமைந்துள்ளார்கள்.
கோயிலில், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி சன்னிதிகள் சற்று யோகப் பூர்வமாக, இடுங்கியவாறு, ஒருவர் மட்டுமே பக்கவாட்டில் சென்று தரிசிக்கும்படி இருக்கும்.
சென்று பார்ப்பது கஷ்டம், கோமுகம் அருகில் இருப்பதால் அசிரத்தையால் பலரும் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி சன்னிதி அருகேயே செல்வதில்லை.
இவ்வாறு யோகப் பிரமாணமான கோண அம்சங்களுடன் அமைந்துள்ள சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி சன்னிதிகளுக்குக் சென்று, வளைந்து நின்று தரிசித்தால்தான், முப்பத்து முக்கோடி யோகக் கோணங்களுடன் தவத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரரின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
மேலும், இவ்வாறு சன்னதி அருகே செல்லும் போதுதான், உடற் கோணங்களில் யோக சக்திகள் உண்டாகும்.
சண்டிகேஸ்வரரை வணங்குபவர்களுக்கு மனஉறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும்.










