உதவும் போது நாம் இறைவனின் கைக் கருவியாகிறோம்..!
“அனைத்தும் ஆண்டவனுக்கு உரியது என்பதை உணர்ந்தவரிடம் அஞ்ஞானம் நெருங்குவது இல்லை. அஞ்ஞானம் இல்லாத மனத்தில் கவலை இருப்பதில்லை. கவலை இல்லா மனம் கொண்டு க்ரஹிக்கப்படும் உலகம் ஆனந்தமயமாகிறது. அன்பு மயமாகிறது. தெய்வீகமாகிறது.”
உண்மையான பக்தன் என்பவர் பொறுப்பற்றவராக இருக்க மாட்டார். யாரிடமும் த்வேஷம் பாராட்ட மாட்டார். சகல ஜீவராசிகளிடமும் காருண்யத்தோடு இருப்பார்.
உயர்வு தாழ்வின்றி இருப்பார். செய்யும் செயல்கள் யாவையும் பகவானுக்கு செய்யும் பூஜா அர்ப்பணமாகச் செய்வார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு மார்கமுண்டு, குல தர்மமுண்டு. தம்-தம்முடைய மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றும் திடநம்பிக்கையும் உடையவர்களாக இருக்கத் தான் வேண்டும், ஆனால்,
அதே சமயத்தில், மத வெறியின்றி, பிற மதத்தின் மீதும், பழக்க வழக்கங்களின் மீதும் துவேஷம் அற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
புண்ணிய பாவத்தின் உயர்வு தாழ்வு என்பது மனத்தின் நிலையைப் பொறுத்து அமைவதாகும். மனத்தின் தூய்மைக்கு ஏற்ப பார்வை, நோக்கு, செயல் இவைகள் அமைகின்றன. எனவே,
முதலில் மனதைத் தூய்மைப்படுத்துவதே ப்ரதமோ தர்மஹ.(தலையாய அறம்). உலகத்தை திருத்த முயல வேண்டாம். முதலில் நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் சிறந்த ஆன்மீக பயிற்சி.
மறந்தும் பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. இதனால், நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டவர்களாகிறோம். யாரையும் கீழானவராக வெறுத்து ஒதுக்குவது கூடாது.
அவ்வாறு நினைப்பவர்களே கீழ்நிலையை அடைகிறார்கள். தூய்மையைத் தேடி அலைய வேண்டாம்.
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் பலனை தெய்வத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். இதனால் பாவ, புண்ணியம் நம்மைத் தீண்டாது. தன்னை முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான் மிக உயர்ந்த காணிக்கை.
இறைவனின் பார்வையில் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர், பிடித்தவர், பிடிக்காதவர் என்ற எந்த பேதமும் இல்லை. எல்லோரும் அவர் குழந்தைகளே.
எனவே, எல்லா உயிரையும் காக்கும் கருணை, கடமை உள்ளவராய் இறைவன் இருக்கிறார் என்ற உண்மையை பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.
இன்று ஒருவர் தேடிய செல்வம் நாளை மற்றொருவர் கைக்குச் சென்று விடும், அது நிலையற்ற தன்மை கொண்டது. தர்மம் செய்வதால் வரும் புண்ணியம், இறந்த பின்னும் நம்மைத் தொடரும்.
துன்பம் மனிதனைக் கடவுளின் பக்கம் திருப்பி விடும் சக்தி படைத்தது. கஷ்டத்தில் தான் மனிதன் தன்னை அறிய முற்படுகிறான். அங்ஙனம் துன்பப்படும் உயிர்களுக்கு நாம் கரமாக இருந்து உதவும் போது நாம் இறைவனின் கைக் கருவியாகிறோம்.
அன்பே சிவம்










