நமசிவாய வாழ்க..! நாதன்தாள் வாழ்க..!
எல்லா அடியார்களும்
ஈசனை போற்றுவர். அவனது
பேராற்றலைப் புகழ்வர்.
அவனது கருணையைப் பரப்புவர்.
ஆனால் திருவாசகத்தில் மாணிக்கவாசகரோ ஒவ்வொரு பாடலிலும் தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியக்கும் போது,
இறைவனின் கருணையின் பெருமை மிகுதிப்படுகிறது. தன் சீவபோதம் ஒடுங்கும் வகையில் மாணிக்க வாசகர் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் சிறுமைகள் மானிட குலம்முழுமைக்கும் பொருத்த மானதாக உள்ளன.
அவர் பேசுகையில் நம் சார்பில் அவர் பேசுவதாகவே தோன்றுகிறது. வாழ்க்கையில் தவறு செய்யாதவர் நம்மில் யார்? நாம் தவறு செய்து விட்டோம், நமக்கு உய்யும் வழி இல்லை என்று விரக்தி அடைந்த நிலையில் இருப்போர்க்கு,
எந்த நிலையிலும் மனம் திருந்தி இறை நாட்டம் கொண்டால் அவன் நம்மைக் கடைத் தேற்றக் காத்து இருக்கும் கருணை வள்ளலாக விளங்குகிறான் என்ற ஆறுதல் ஏற்பட்டு, திருவாசகம் படிக்கும் பொழுது வெளிப்படும் கண்ணீரில், செய்த பாவங்கள் கரைந்து மனம் பக்குவப்படுவது பலருடைய அனுபவம்.
இப்படிப்பட்ட திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து
ஒரு முத்து ஒன்று..
கடலினுள் நாய் நக்கி அங்கு
உன் கருணைக் கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய்
விடல் இல் அடியார் உடல் இலமே
மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே
என்மது வெள்ளமே. என்கிறார்..
கடல் நீர் மிகுந்து இருந்தாலும் நாய் நக்கித்தான் பருகுமேயன்றி வாய் திறந்து நிரம்பப் பருகாது. அதைப் போல,
உனது கருணை வெள்ளம் மிகுந்து இருந்தாலும் யான் அழுந்திப் பருகா திருக்கின்றேன் என்பதைதான்..
‘கடலினுள் நாய் நக்கி யாங்குன்
கருணைக் கடலினுள்ளம் விடலரி யேனை’ என்கிறார் வாசகர்.
இதனால், இறைவனது கருணை ஏகவுருவாய்ப் பரந்து கிடப்பினும் உயிரினது தன்மைக்கேற்பத் தான் அதைப் பெற முடியும் என கூறப்பட்டது.
சிவாய நம.











