ஜீவ சமாதி என்றால் என்ன?
ஜீவ சமாதியின் விளக்கம்..!
ஒரு யோகியோ, சித்தரோ அவர்கள் உடல் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் (அமர்ந்திருந்தால் அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும், நின்றிருந்தால் அப்படியே நின்றபடி இருக்கும்,
படுத்திருந்தால் அப்படியே படுத்தப்படியே இருக்கும்) தன்னுடைய உயிரை (ஆத்மாவை) கபாலத்தின் (அல்லது உச்சி) வழியே உடலை விட்டு பிரித்து இந்த பிரபஞ்சத்தில் ஐக்கியமாவததை ஜீவ சாமாதி என்பார்கள். இதனை ‘உயிர் மேலெழும்புவது’ என்றும் கூறுவதுண்டு.
ஜீவ சாமாதியின் சிறப்பு என்னவெனில் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போகும். ஒரு யோகி ஜீவ சமாதியாகும் பொழுது, அவரின் ஜீவபோதமானது பரபோதமாக மாறுகிறது.
உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது.
தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கி விடுகின்றன. அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் இதயத்தில் அடங்கி விடுகிறது.
உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. கடைசியாக பிரானான் ஆனது யோகியின் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடு நேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதி நாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம்,
அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர்.
இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை.
அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். ஜீவ சமாதியான யோகிகள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுண்டு.
அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதற்கு சாட்சியாக இன்றும் சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் முழு மனதோடு வேண்டுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் அருளுவதை நாம் கண் கூடாகக் காணலாம்.