தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்தீசர் கோவில்
இத்தல சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தித்து விபூதி தரித்துக் கொண்டால், நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது.
தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்தீசர் கோவில்
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மத்தாக நின்ற மந்தரமலை சரியத் தொடங்கியது. ஆகையால் திருமால், ‘கச்சம்’ என்ற ஆமை உருவம் கொண்டு மலையைத் தாங்கினார்.
அந்த மலையைத் தாங்குவதற்கான வலிமையை பெறுவதற்காக, சிவபெருமானை நோக்கி திருமால் வழிபாடு செய்தார். அந்தத் திருத்தலமே திருக்கச்சூர் என்று அழைக்கப்படுகிறது. திருக்கச்சூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பெரிய கோவில் ‘ஆலக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
விழுதுகள் விடாத கல்லால மரம், தலவிருட்சமாக இருப்பதனால் இப்பெயர் வந்துள்ளது. இந்த ஆலயத்தை தாழக்கோவில் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள இறைவன் ‘கச்சபேஸ்வரர்’ என்று பெயர் பெற்று விளங்குகிறார். அம்பாள் திருநாமம் ‘அஞ்சனாட்சி’ என்பதாகும்.
இத்தல இறைவன் தியாகராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் வேண்டுகோளை ஏற்று, இத்தல ஈசன் அமுத நடனம் ஆடினாராம். ஆகையால் இங்குள்ள இறைவனை அனைவரும் ‘அமுத தியாகர்’ என்று செல்லமாக அழைக்கின்றனர்.
ஆலயத்தின் தனி மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி தியாகராஜர், அம்பாள் மற்றும் முருகப்பெருமானுடன் ‘சோமாஸ்கந்தராக’ காட்சி தருகிறார்.
இத்தலத்துக்கு வந்து சிவனருள் பெற்ற சுந்தரர், தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தனது ஐந்தாவது பதிகத்தில்
- ‘மாலை மதியே மலைமேல் மருந்தே
- மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த
- ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
- ஆலக்கோயில் அம்மானே’
என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும் போது, முற்காலத்தில் நெல் வயல்களும், கரும்பு ஆலைகளும் செழித்த ஊராக இந்தத் திருத்தலம் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.











