நன்மைகளை வாரி வழங்கும் நவராத்திரி:
சகல உலகங்களையும் படைத்து அவற்றையெல்லாம் இயக்கிக் காத்து வருகின்ற சக்தியை வழி
படும் விரதமே நவராத்திரி விரதம்.
ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்று இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு ருதுக்களும்
எமனுடைய இரண்டு கோரைப்பற் களுக்கு சமம் என புராண நூல்கள் கூறுகின்றன. இந்தக்
காலகட்டத்தில் மனிதர்களுக்கு அதிக துன்பத்தை விளைவிக்க கூடியவை. இவற்றில் இருந்து
விடுபட்டு சுபீட்ச வாழ்வை வேண்டி நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சக்தியின் வழிபாடு:
சிவனுக்கு, ஒரு ராத்திரி விசேஷம், அது மகா சிவராத்திரி. சக்திக்கு, நவராத்திரி 9 இனிய இரவுகளில் விழா நடைபெறும்.
சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களை கொண்டது வசந்த நவராத்திரி எனப்படுகிறது. சரத்ருது என்பது, புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்கள் ஆகும். இது சாரதா நவராத்திரி எனவும் கூறப்படும். இதுவே விமரிசையாக கொண்டாடப் படும் நவராத்திரி ஆகும்.
இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்பது முறையே பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை குறிக்கும். ஆதலால் நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி, இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் பூஜித்து வழிபட வேண்டும். வீரத்திற்கு துர்க்கையையும், செல்வத்திற்கு லட்சுமியையும், கல்விக்கு சரஸ்வதியையும் அதிபர்களாக கொள்கின்றனர்.
இந்த விரதம் 9 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் நவராத்திரி என்றும், சில இடங்களில் பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால் தசராத்திரி என்றும் தசரா என்றும் அழைக்கின்றனர். நவராத்திரி தவிர தேவிபூஜை, வாணி விழா, ஆயுதபூஜை, மகா நவமி நோன்பு என்றும் பற்பல பெயர்களில் இந்தப் பண்டிகை அழைக்கப்படுகிறது.
ஏடு எழுதுதல்:
நவராத்திரியின் இறுதி நாளன்று புத்தகங்கள், பென்சில், பேனாக்கள், வீணை முதலிய இசைக்கருவிகளை, பூஜையில் வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவர். மறுநாள் தசமியன்று காலையில் இவற்றை எடுத்து படித்தும் எழுதியும் இசைக்கருவிகளை மீட்டியும் வேலையை தொடங்குவர்.
விஜயதசமியன்று பிள்ளைகளுக்கு ஏடு எழுதுதல் அல்லது வித்யாரம்பம் செய்து வைக்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல்மணியில் பிள்ளைகளை ”அ” எனும் அட்சர எழுத்தை எழுத வைக்கும் நிகழ்ச்சி ஒரு சடங்காகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பத்தாம் நாள் தசமி அன்று கும்பத்தை எடுத்து அதனுள் உள்ள நீரை, ஒரு புனித குடத்தில் சேர்ப்பர். இதனைக் கும்ப சரிவு என்பர். நவ தானியங்கள் விதைக்கப்பட்டு அதன் மேல் கும்பத்தை வைப்பது வழக்கம்.
நவராத்திரி உருவான வரலாறு பற்றி தேவி மான்மியத்தில் கூறப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
அசுரனை அழித்தனர்:
ஒருகாலத்தில் மகிஷன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இதுகுறித்து அவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர்.
மகிஷனின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டுவர சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் முடிவு செய்தனர்.
மும்மூர்த்திகளின் முகங்களில் இருந்து வெளிப்பட்ட ஒளி, நெருப்பைப்போல் வெளிவந்தது. அது ஒரு பெண் வடிவம் ஆயிற்று.
அந்தப்பெண் துர்க்காதேவி என அழைக்கப்பட்டார். ஒன்பது நாள் விரதம் இருந்து ஆயுதபூஜை செய்து பத்தாம் நாள் வளையலணிந்த கைகளில் வாள்பிடித்து போய் மகிஷனை கொன்று மகிஷாசுர மர்த்தினியாக திரும்பி வந்தாள்.
தேவி விரதம் இருந்த தினங்களை நவராத்திரி என்கிறார்கள்.
அசுரனை ஜெயித்த தினம் விஜயதசமி:
துர்க்கை பூஜை ஒன்பது நாட்களும் செய்து பத்தாவது தினம் ஊர்வலமாக எடுத்து சென்று கடலிலோ, நதியிலோ கரைத்துவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் நவராத்திரியன்று கொலுபொம்மை வைத்து பத்து தினமும் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
ஒன்பது நாட்களும் பூஜை செய்ய முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி நாட்களில் பூஜை செய்தால் ஒன்பது நாட்களும் பூஜை செய்த பலனை அடைவார்கள்.
கொலு வைப்பது எப்படி:
நவராத்திரியையட்டி அமாவாசையன்று மாலை கொலு வைக்க வேண்டும்.
கொலுபடிக்கட்டுகள் 3, 5, 7, 9 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். ஒரு செம்பில் சுண்ணாம்பு தடவி சுற்றிலும் குங்கும பொட்டு வைக்க வேண்டும். செம்பினுள் பச்சரியை நிரப்ப வேண்டும். பிறகு மாவிலையையும், மஞ்சள் பூசிய தேங்காயையும் செம்பின் மீது கும்பமாக வைக்க வேண்டும்.
கொலுவகை 9 படிகள் கொலுமேடை அமைப்பது சிறந்தது.
முதலாம்படி: புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர வர்க்கங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
இரண்டாம்படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகள் வைக்க வேண்டும்.
மூன்றாம்படி: மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
நான்காம்படி: நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஐந்தாம்படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஆறாம்படி: ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஏழாம்படி: மனித நிலையில் இருந்து உயர்ந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
எட்டாம்படி: தேவர்கள், அஷ்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஒன்பதாம்படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயமாக ஆதிசக்தியை வைக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைவதையே இந்த கொலு உணர்த்துகிறது.
பெண்கள் விரதம் இருந்து காலையிலும், மாலையிலும் நீராடி பூஜை செய்ய வேண்டும். கன்னி பெண்களை இந்தகாலத்தில் தேவியின் ஒன்பது அம்சமாக பாவித்து ஆராதிப்பது விசேஷம். அவர்களுக்கு அவர்கள் சக்திக்கு ஏற்றபடி ரவிக்கை துணி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்க வேண்டும். நவராத்திரி முதல் மூன்று தினங்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை பூஜிப்பது ஐதீகம்.
பத்தாவது நாள் விஜயதசமியன்று பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்.
தினமும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து ஏதாவது நைவேத்தியம் செய்ய வேண்டும். இரண்டு வேளைகளிலும் விளக்கேற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலை சாத்தி புது ரவிக்கை துண்டு சாத்த வேண்டும்.
புத்தகங்களையும், ஆயுதங்களையும் அடுக்கி வைத்து கலை மகளை வழிபட வேண்டும்.
சரஸ்வதி அஷ்டோத்திரத்தை படித்து பூஜை செய்ய வேண்டும். இதன் பிறகு படிக்கக்கூடாது. மறுநாள் புனர்பூஜை செய்தபின் பூஜையில் இருந்து புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும். நவராத்திரி தினங்களில் ஊசி, நூல் கொண்டு தைத்தல், வீட்டை ஒட்டடை அடித்தல் இவைகளை செய்யக் கூடாது.
அன்று விசேஷமாக சுகியன், வடை, பாயாசம் செய்ய வேண்டும். சமையலில் பருப்பு, மோர்குழம்பு, பச்சடி, கறி வகை, பருப்பு செய்யலாம். அன்று மாலை கொண்டை கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்குடன் சீப்பு, கண்ணாடி, குங்குமச்சிமிழ் கொடுத்தால் விசேஷம்.
சரஸ்வதி பூஜையின் மறுநாள் விஜயதசமியன்று புனர்பூஜை செய்து பூஜையில் வைத்துள்ள புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டும். பாட்டு, நடனம் கற்றுக்கொண்டு இருப்பவர்கள் குருவிற்கு தட்சணை கொடுக்க வேண்டும்.
அன்று மாலை கொலுவிற்கு ஆரத்தி எடுத்து ஆரத்தியை இறக்கி கீழே வைக்க வேண்டும். பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து நைவேத்தியம் செய்ய வேண்டும். மேல்தட்டில் உள்ள மரப்பாச்சி இன்னும் சில பொம்மைகளை படுக்க வைத்து விட வேண்டும்.
இப்படி செய்தால் பூஜை முடிந்ததற்கு அடையாளமாக கருதப்படும். மறுநாள் பொம்மைகளை பெட்டியில் அடுக்கி வைத்து விடலாம்.
நவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்போர் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் நற்பயனை பெறுவர்.









