நவபுலியூர் யாத்திரையின் 9வது ஸ்தலமான பெரும்புலியூர்
இறைவன்: வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி : சௌந்தர்ய நாயகி
இந்த யாத்திரையை நிறைவு செய்ய மங்களகாரனான செவ்வாயின் பரிகாரத்தலமாக
பெரும்புலியூர் தரிசிக்கப்படுகிறது. ஒன்பதாவது புலியூரான பெரும்புலியூர் திருவையாறு
அருகில் அமைந்துள்ளது. எதையும் முடிக்கும்போது மங்களம் என்றே அழைப்போம்
நவக்கிரகங்களில் மங்களான் என்று அழைக்கப்படும் செவ்வாய் பரிகாரத்தலமாகும்.
யாத்திரையை நன்கு முடிக்க மனபலமும் உடல்பலமும் வழங்கும் இறைவன் இங்கும் வியாக்ர
புரீஸ்வரராக வணங்கப்படுகிறார். திருஷ்டி தோஷங்கள் எல்லாம் நீக்கும் தலம் இது.
தப்பளாம்புலியூர் ஆலயத் தோற்றம் போன்று இங்கும் கல்லால் ஆன நடராஜமூர்த்தம்
அமைந்துள்ளது. வியாக்ரபாதர் பூசித்த நிறைய திருத்தலங்கள் புலியூர் மற்றும் புலிப்பாக்கம்
என்ற பெயர் பெற்றாலும்
நவபுலியூர் மட்டுமே இறைவன் ஸ்வயம்புவாக எழுந்தருளி திருநடனக்காட்சி அளித்ததால் இந்த ஒன்பது தலங்களும் நவபுலியூர் ஆயிற்று. நவபுலியூர் யாத்திரை மேற்கொள்ளும் அன்பர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி.
ஒன்பது புலியூர்களையும் தரிசித்த ஸ்ரீ வியாக்ரபாத முனிவரும் ஸ்ரீ பதஞ்சலி முனிவரும் காவிரிக்கரையின் ஓரமாகவே ஸ்ரீரங்கத்தை சென்றடைகிறார்கள். அரங்கனின் விருப்பப்படி ஸ்ரீ பிரம்மாவின் தரிசனமும் அவர்கள் பெற வேண்டும் என்பதால் பிரம்மாவின்
அருள் தரும் இடமான திருப்பட்டூரை அடைகிறார்கள். இருவரும் அங்கே ஸ்ரீ பிரம்மபுரீஸ்சுவரரையும் ஸ்ரீ பிரம்மாவையும் வணங்கி ஜீவசமாதியை மேற்கொள்கிறார்கள்.
எம்பெருமான் ஆடல் அரசனின் திரு ஆணைப்படியும் எம்பெருமான் அரங்கனின் பேரருளாலும் அவர்கள் சிவ விஷ்ணுவாக விளங்கும் பரப்பிரம்ம ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
ஒரே பரம்பொருளின் இருவேறு வடிவங்களான ஆடல்வல்லவரும் அரங்கனும் ஒன்றாகவே இணைந்து இந்த யாத்திரையை மேற்கொள்ளும் ஜீவன்களை அவர்களின் கர்மவினைகளை அழித்து, அருளாசி வழங்கி,
அவர்களை மோட்ச பாதையில் அழைத்து செல்கிறார்கள். தூய உள்ளன்போடு செய்யப்படும் இந்த யாத்திரையின் போது 9 அல்லது 12 நாட்களாவது ஸாத்வீக உணவருந்தி இறைநாமத்தில் மூழ்கி நம்பிக்கையோடு செய்தோமேயானால் நம்முடைய தீர்க்க முடியாத கர்மவினைகள் முற்றிலும் நீங்கப்பெற்று தடைபட்ட காரியங்கள் யாவும் புதுப்பொலிவோடு நடைபறும்.
இந்த யாத்திரையின் கடைசி பகுதியான திருப்பட்டூரை மட்டுமே வணங்கும் பக்தர்கள் பலர் மாற்றத்தை உணரமுடியாமல் போகிறார்கள்.
திருப்பட்டூருக்கு முன்பாக இந்த ஒன்பது திருத்தலங்களையும் தரிசிக்க வேண்டும். திருப்பட்டூருக்கு பிறகு ஸ்ரீரங்கத்தை தரிசித்து நேராக வீடு வந்து விடவேண்டும்.
நடுவில் வேறு தலங்களை தரிசிக்கக் கூடாது. ஏனெனில் இந்த யாத்திரை காசி யாத்திரை போன்று மிகபலன் வாய்ந்த யாத்திரையாகும். யாத்திரையின் போது முன்ஜென்ம தீவினைகள் யாவும் கரைக்கப்பட வேண்டும் என மனமுருகி வழிபட வேண்டும்.
நவபுலியூர் யாத்திரை நவக்ரஹங்களின் அருளையும் பெற்றுத்தரும். பக்தர்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தடைபட்ட திருமண வரங்கள், குழந்தை வரம், நோயின்மை, தொழில் வளர்ச்சி, கடன் தொல்லை நீங்குதல், சாபங்கள் நீங்குதல் என அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவதைக் கண்கூடாக பார்க்கலாம்.
புண்டையகாலங்களில் மக்கள் பரிகாரமாக தேர்ந்தெடுத்தது இதுபோன்ற யாத்திரைகளை மட்டுமே. இது தெரியாமல் நாம்தான் வேறுவழிகளில் முயற்சித்து ஏமாற்றமடைகிறோம். எல்லாம் வல்ல ஆடலரசனின் அருளும் அரங்கனில் அருளும் எல்லோரையும் சென்றடைய அவர்களின் திருப்பாதங்களையே பணிந்து நிற்கின்றோம்.
இந்த யாத்திரையை மேற்கொள்ளும் போது நம்மோடு ஸ்ரீ வியாக்ரபாத முனிவரும் ஸ்ரீ பதஞ்சலி முனிவரும் துணைநின்று பரம்பொருளின் ஆசியை நமக்கு பெற்றுத்தருவார்கள் என்பது திண்ணம். நவபுலியூர் தரிசனம் மிகவும் பழமையானதும் மிகுந்த நற்பலன்களை வாரி வழங்குவதுமாகும்.










